புது நானூறு – முன்னுரை
சோவியத் புரட்சி முடிந்து, தீர்மானகரமான வெற்றி அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை துளிர்த்த நேரம். இளங் கம்யூனிஸ்டுகளின் சங்கம், மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைத் திட்டம் குறித்து விவாதிக்க 2.10.1920 அன்று ஒரு கூட்டத்தைத் கூட்டி இருந்தது. அக்கூட்டத்தில், அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று யாரும் எதிர்பாராத வகையில் லெனின் பேசினார். ‘எதிரிகளை வீழ்த்த வேண்டும்’ என்று போரிடும் மனநிலையிலேயே இருந்த தோழர்களால் லெனின் கூறியதை உடனடியாக உள்வாங்க முடியவில்லை. லெனின் எப்பொழுதும் உறுதியாக இருப்பார். ஆனால் இம்முறை உறுதியோடு மட்டும் அல்லாமல் கண்டிப்புடனும் இருந்தார். அனைவருக்கும் கல்வி என்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று கூறினார்கள். ஆனால் அந்தக் கஷ்டமான காரியத்தை முடித்தே தீர வேண்டும் என்று லெனின் கூறி விட்டார். சிறிது நேரம் கழித்து ‘சோவியத் ஒன்றியத்தில் ஆறு இஸ்லாமிய நாடுகள் உள்ளன என்றும் இஸ்லாமியப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்றும் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பது எங்ஙனம்?’ என்றும் கேட்டனர். ‘அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றால் நீங்கள் அவர்களுடைய வீட்டிற்குள் சென்று கல்வி கற்பியுங்கள்’ என்று லெனின் கூறினார். உடனே தோழர்கள் வேறொரு காரணத்தைக் கூறினார்கள் ‘அவர்கள் ஆடவர்களைப் பார்க்க மாட்டார்கள்’ என்று. உடனே ‘கட்சியில் உள்ள பெண்கள் முனைந்து அவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும்’ என்று லெனின் சொன்னார்.
இச்செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு துண்டுக் காகிதத்தில் படித்தேன். ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்றும் ‘கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே.’ என்றும், கற்றலின் சிறப்பு பற்றி மட்டுமே படித்துப் பழகிய மனநிலையில் ‘எப்பாடு பட்டாவது கற்பி’ என்று லெனின் கூறிய சொற்கள் ஒரு அதிர்வைத் தரவே செய்தது. இதன் தாக்கத்தில் புறநானூறின் 183வது பாடலை மனதில் கொண்டு அதை மாற்றிக் கீழ் கண்டவாறு எழுதினேன்.
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது, கற்பித்தல் நன்றே
கல்லா மாந்தர் உள்ளனர் என்றால்
நில்லா தொழியும் கற்றவர் மாண்பு
கற்றவர் பெருமை தேர்ந்து தெளிந்திட
மற்றவர் கல்வியே உற்ற உரைகல்
கல்வி நல்காக் கசடர்கள் தம்மைத்
தொல்லியல் காட்சிப் பொருளாய் ஆக்கிடப்
பெருவிரல் பறிகொடா ஏக லைவனாய்
அரும்பெரும் கல்வியை உடைமை கொள்வோம்
இதைப் படித்துப் பார்த்த என் நண்பர்கள் பலர் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். என் மனைவியோ நன்றாக இருக்கிறது என்று கூறியது மட்டும் அல்லாமல், ‘இதே போன்று புறநானூறின் 400 பாடல்களையும் எழுத முடியுமா?’ என்று வினவினார். எனக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா என்று தெரியவில்லை என்று கூறினேன். ஆனால் ‘முடியும்; முயலுங்கள்’ என்று கிட்டத் தட்ட கட்டளை இடுவது போலவே கூறி விட்டார். நானும் முயன்று எழுதி அதற்குப் ‘புது நானூறு’ என்று பெயரும் இட்டு விட்டேன். இப்பாடல்கள், ஒவ்வொரு புறநானூற்றுப் பாடலிலும் உள்ள ஏதாவது ஒரு ஒற்றுமையை மையப்படுத்தி எழுதப்பட்டு உள்ளன.
அவை ‘இனியொரு’ வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வரலாம் என்று விரும்புகிறேன். இத்துடன் இந்நூல் முழுமையையும் இணைத்து உள்ளேன். இனியொரு இணைய தளத்தில் ஒவ்வொரு பாடலாக வெளியிடும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
-இராமியா
- உழைப்போர் வாழ்த்து
எண்ணமெலாம் வர்க்கப் போராட்டமே வினைஞர்
வண்ண மார்பில் மனித நேயமே நிலவ
ஊர்தியாய் இருக்கப் பொருள்முதல் வாதமே
சீர்கெழு கொடியுஞ் செங்கொடியே யென்ப
மனிதனை வாட்டும் பசிப்பிணி மனநோய்
முனியா திருக்கும் அறிஞர் கூட்டம்
வினைஞரே முடிப்பர் அறிஞர் அல்லரென
முனைந்து கூறினர் மார்க்சும் லெனினும்
அத்தகை வினைஞரைப் போற்றி யழைக்கிறோம்
வித்தைகள் பயின்றுப் புரட்சியை நடத்தவே
(வினைஞர் – வினை புரிபவர் அதாவது உழைக்கும் மக்கள், முனியாது – சினங் கொள்ளாது, முனைந்து – ஆராய்ந்து)
(உழைக்கும் மக்கள் சிந்தனையில் வர்க்கப் போராட்ட நினைவும் மனித நேய நினைவும் ஒருங்கே இருக்கும். அவர்களைப் பொருள் முதல் வாத மெய்ஞ்ஞானம் ஊர்தியாய் இருந்து வழி நடத்திச் செல்லும். அவர்கள் செங்கொடியை என்றும் தளர விடமாட்டார்கள். மனித இனத்தின் ஒரு பகுதி மக்களைப் பசிப்பிணி வாட்டுகிறது. செல்வம் உடையவர்களிலும் பலரை (முக்கியமாக, கணினி வல்லுநர்களை) மன நோய் வாட்டுகிறது. ஆனால் இந்நிலை மாற வேண்டும் என்று அறிஞர் கூட்டம் கொதித்து எழவில்லை. அறிஞர் கூட்டம் புரட்சிக்கான உந்து விசையல்ல, உழைக்கும் மக்களே புரட்சியை நடத்த முடியும் என்று மார்க்சும் லெனினும் ஆராய்ந்து கூறினார்கள். அத்தகைய உழைக்கும் மக்கள், சரண்டல் வர்க்கத்தினரை ஒழித்து சமதர்ம (சோஷலிச) அரசை அமைக்கும் சரியான வழிகளைக் கற்றுக் கொண்டு அவ்வழியில் புரட்சியை நடத்த வேண்டும் என வேண்டுகிறோம்.
- வேரிலே மடியும் கடவுள் தத்துவம்
(புறநானூற்றுப் பாடலின் முதல் ஐந்து வரிகள் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.)
மண்திணிந்த நிலனும்
நிலம் அடங்கும் விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
இயற்கைப் பொருட்கள் என்றும் உளதே
படைப்பெனச் சொல்வது நெறிபிறழ் தத்துவம்
சிந்தனை என்பதே இல்லாத காலத்தும்
இறையெண்ணம் என்பதே உதிக்காத காலத்தும்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தது
பருப்பொருள் பூமியே அறிக அறிக
படைத்தவன் தத்துவம் இடையே வந்தது
மடமையை வளர்த்தே தானும் செழித்தது
இயற்கை விதிக்கும் நிரந்தரக் கடமையும்
மனிதன் விரும்பும் பருப்பொருள் விகிதமும்
நேராய் நிறுத்தும் அரசு அமைந்தால்
வேரிலே மடியும் கடவுள் தத்துவம்
(திணிந்த – செறிந்த, தலைஇய – தலைப்பட்ட, விசும்பு – வானம்)
மண் செறிந்த பூமியும், பூமியை ஒரு பகுதியாகக் கொண்ட வானமும் (அண்டமும்) வானத்திலுள்ள காற்றும், காற்றினால் பரவும் தீயும், தீயை அணைக்கும் நீரும் ஆகிய ஐந்து பூதங்கள் என்றும் உள்ளன. அவை படைக்கப்பட்டன என்று கூறுவது உண்மைக்கு மாறான தத்துவம். மனித இனம் தோன்றுவதற்கு முன் சிந்தனையும், இறைவன் என்ற எண்ணமும் தோன்றவில்லை. அந்தக் காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் வேண்டிய உணவை இப்பூவுலகம் வழங்கிக் கொண்டு தான் இருந்தது. உலகைப் படைத்தவன் (அதாவது கடவுள்) என்ற சிந்தனை, மனிதன் தோன்றிய பல காலத்திற்குப் பிறகு தான் தோன்றியது. அக்கடவுள் எண்ணம் மனிதர்களிடையே மடமையை வளர்ப்பதன் மூலம் செழித்து வளர்கிறது. இயற்கை விதித்து இருக்கும் நிரந்தரக் கடமையான உழைப்பை அனைவருக்கும் வற்புறுத்துவதும், உழைப்புக்கு ஏற்ற விகிதத்தில் பொருட்களைச் சரியாக விநியோகிப்பதுமான (சமதர்ம – சோஷலிச) அரசு அமைந்தால், கடவுள் தத்துவத்தின் ஆணிவேர் அறுபட்டுப் போய்விடும்
- வேண்டும் விடுதலை
(புறநானூற்றுப் பாடலில் இரவலர்கள் கரடு முரடான பாதையைக் கடந்து சென்று மன்னரைக் கண்டு தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. உழைக்கும் மக்கள் சோஷலிச ஆட்சியை அமைத்து விடுதலை அடைவதற்கான பாதையும் கரடு முரடானது என்று இப்பாடலில் கூறப்பட்டு உள்ளது)
மண்ணும் விண்ணும் பொய்யே என்றதும்
கண்ணறக் காண்பவை மெய்யே யென்றார்
இருவேறு ஞானியர் மோதிய போதிலும்
ஒருங்கே நின்றனர் செயல்படா நிலையில்
தொடரும் போரில் முடிவாய் நுழைந்தனர்
சுடரொளி அறிஞர் மார்க்சும் எங்கல்சும்
கண்ணறக் காண்பவை மெய்யென் றாலும்
மண்ணென நிற்பது மடமை யாகும்
வாழ்க்கை மாற்றமே ஞானத்தின் முடிபு
சூழ்நிலை மாற்றம் மனிதன் கையிலே
மிகைப்பொருள் தம்மைத் தனியா ரிடத்துத்
தொகையாய்ச் சேர்க்கா அரசை அமைப்பது
மனிதனின் விடுதலை வழியே என்றனர்
எனினும் இதனை அடையும் பாதை
கரடு முரடு சிறைச்சாலை வாசம்
மரணமும் வாதையும் மிகைப்பட நிலவும்
இருப்பினும் உழைப்பவர் அரசை அமைப்பது
பிறப்பவர் விடுதலை அடையும் பொருட்டே
(பொருட்கள் யாவும் மாயையே என்று (ஆன்மீகவாதிகள்) கூறிய உடனேயே பொருட்கள் உணமையே என்று (லோகாயதவாதிகள்) பதிலளித்து விட்டனர். ஆனால் இரு தரப்பு தத்துவ ஞானிகளும் எதிரெதிரே வாதாடிய போதிலும் உலகை விளக்குவதுடன் நின்றுவிட்டனரே ஒழிய அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. தொடர்ந்து வந்த தத்துவப் போரில் கார்ல் மார்க்சும் ஃபிரடெரிக் எங்கல்சும் முடிவாக நுழைந்தனர். லோகாயதவாதிகள் கூறுவது உண்மையே என்றாலும் செயல்படாமல் இருப்பது சரியல்ல என்றும் சூழ்நிலைகள் தான் சிந்தனையை நிர்ணயிக்கிறது என்றாலும் மனிதனால் சூழ்நிலையை மாற்ற முடியும் என்றும் கூறினார்கள். மிகை உற்பத்தியைத் தனியார் கையில் இலாபமாகச் சேர்க்க அனுமதிக்காத, அவற்றைப் பொதுவிலேயே வைத்துக் கொள்ளும் அரசை அமைப்பது, மனித இனம் சுதந்திரமாக வாழ்வதற்கான வழி என்றும் கூறினார்கள். இருப்பினும் அப்படிப்பட்ட அரசை அமைக்கும் பாதை கரடு முரடானது. சிறைச் சாலை வாசம், மரணம், கடும் சித்திரவதைகளை இவ்வழியில் சந்திக்க நேரிடும். இவ்வளவு கொடுமைகள் இருந்தாலும் இனி பிறப்பவர் (வருங்கால சந்ததியினர்) சதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் உழைக்கும் மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.)
ஏனைய பாடல்களும் விரிவும் தொடர்ச்சியாகப் பதியப்படும்…