Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுக்கோட்டை இடைத்தேர்தல் : துணை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இதை முன்னிட்டு மொத்தம் உள்ள 224 வாக்குச் சாவடிகளிலும் 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 3,000 போலீசார் உள்பட பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக, பாஜ ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த், இவரது மனைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக பிரசாரம் செய்தனர். நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிந்தது. அதன்பின், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் நேற்று மாலையே புதுக்கோட்டையை விட்டு வெளியேறினர். பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து வாக்கு பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணியுடன் முடிகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகளை செய்து முடிக்க தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர். புதுக்கோட்டை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,94,980. இவர்களில் ஆண்கள் 97,371. பெண்கள் 97,604. அரவாணிகள் 5. இவர்கள் வாக்களிக்க புதுக்கோட்டை, கறம்பக்குடி ஒன்றியம், ஊராட்சிகள், புதுகை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 224 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் தலா 2 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும். கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள எழுதுபொருட்கள் உள்பட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள 37 வாக்கு சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெப் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு பதிவு அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படவுள்ளது. வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு முடிந்த பின், மின்னணு இயந்திரங்கள் அரசு மகளிர் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்படும். வரும் 15ம் தேதி காலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை வாக்கு பதிவை முன்னிட்டு தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவிநாசியில் இருந்த வந்த 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 8 டிஎஸ்பிக்கள், 26 இன்ஸ்பெக்டர்கள், 332 எஸ்ஐக்கள், போலீசார், ஊர்க்காவல் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version