Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!: ‘மே 18 இயக்கம்’ விடுக்கும் அறிக்கை.

 மீண்டும் ஒரு தேர்தல்! புலிகளை சிங்கள பேரினவாத அரசு தோற்கடித்து ஒரு வருடத்தினுள் தமிழர் தாயகத்தில் நடைபெறும் மூன்றாவது தேர்தல்!! நடத்தப்படும் தேர்தல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் தன்மையை மதிப்பிடுவதாயிருந்தால் அந்த பட்டியலில் சிறீலங்கா முன்னிலையில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துரதிஸ்டவசமாக ஜனநாயகம் என்பது இந்த தேர்தல் நடத்துவது என்பதை விட இன்னமும் ஆழமான தார்ப்பரியங்களைக் கொண்டது. அப்படிப் பார்த்தால், யுத்தம் முடிந்து, பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பாமலேயே, யுத்தத்திற்கு இட்டுச் சென்ற அரசியல் பிரச்சனைகள் பற்றிய தீர்வு காணாமலேயே, இன்னும் குறிப்பாக அப்படிப்பட்ட தீர்வுகளை காண்பதற்கான நிர்ப்பந்தங்களை தள்ளிப்போடும் நோக்கில் நடத்தப்படும் தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தை கருவறுக்கும் செயற்பாடுகளேயாகும். ஆனாலும் பரவாயில்லை. அதில் போட்டியிடவும் தயாராக பல குழுக்கள்! முன்னர் பின்னர் தேர்தல்களில் கலந்து கொள்ளும் நோக்கமோ, அது தொடர்பான சிந்தனையையோ கொண்டிராத பலர் கூட களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எல்லாம் ஆளும் கட்சியின் உபயம் தான். தனது அரசியல் எதிராளிகளை தோற்கடிப்பதற்காக, அந்தந்த பிரதேசங்களில் உள்ள பல்வேறு குழுக்களையும் பணத்தைக் கொடுத்து செயற்கையாக களத்தில் இறக்கும் செயற்பாட்டை ஆளும் கட்சி செய்து வருகிறது. இதுவொன்றும் ஜனநாயகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஜனநாயகம் மீது இந்த கும்பல் கொண்டுள்ள இளக்காரமான பார்வையைத்தான் காட்டுகிறது.

இந்த தேர்தலில் நாம் கலந்து  கொள்ளாவிட்டாலும் கூட, ஒரு அரசியல் அமைப்பு என்ற வகையில் எமது அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம். அந்த நோக்கிலேயே இந்த அறிக்கையானது வெளியிடப்படுகிறது. புரட்சிகர, முற்போக்கு சக்திகள் பாராளுமன்ற தேர்தல்களை தமது பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்று கருதும்  ‘மே 18 அமைப்பு’ இந்த தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடுகளை முன்வைக்கிறது.
இந்த தேர்தல் தொடர்பாக நாம் அணுகும் போது பின்வரும் விடயங்கள் எமது கவனத்திற்கு உரியனவாக இருப்பது அவசியமானது.

 மக்களுக்கு தேர்தல்கள் தொடர்பாக கல்வியூட்டுவது.

• மோசமான பிற்போக்கு சக்திகள், அரச கைக்கூலிகளை தனிமைப்படுத்துவது.

• முற்போக்கான சக்திகளை இனம் காட்டுவது.

• ஒரு விரிவான ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை நோக்கி வென்றெடுக்க முயல்வது.

இந்த நோக்கில் பின்வரும் நிலைப்பாடுகளை நாம் முன்வைக்கலாம் என்று கருதுகிறேம்

சிங்கள கட்சிகள்.

ஐ.தே.க மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டுமே தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர்கள். இப்போதும் கூட இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே நிராகரிக்கும், ஒற்றையாட்சி முறைக்குள் சில நிர்வாக மீளொழுங்குகளை மேற்கொள்வதன் மூலமாக தீர்வு காண முனைவதாக கூறுவதன் மூலமாக இலங்கை ஒரு பல்தேச சமூகம் என்பதை மறுத்துரைக்கும் இவர்கள் தமிழ் மக்களது  எதிரிகளாவர். தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை மொத்தமாக மறுதளித்துவிட்டு இவர்கள் தருவதாக கூறப்படும் அபிவிருத்தி பூச்சாண்டிகளை தமிழ் மக்கள் நிராகரிப்பதன் மூலமாக தமது சுதந்திரத்திற்கான வேட்கையை வெளிப்படுத்த வேண்டும்.
 

கூலிப்படைகள்

புலிகள் இருந்த காலத்தில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி சிறீலங்கா அரசுடனும், இந்திய அரசுடனும் ஒட்டிக் கொண்டிருந்த கூலிப்படைகள் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளுடன் விளையாடுவதற்காக வருகிறார்கள்.

புலிகளது அராஜகத்திற்கு எதிராக போராடுவதாக் கூறிக் கொண்டே இவர்கள செய்து முடித்த அராஜகங்களும், மனித உரிமை மீறல்களும் மிகவும் அதிகம். இப்போது புலிகள் மடிந்த பின்னரும், தாம் அரசுடன் ஒட்டிக் கொண்ட காலத்தில் பெற்ற சலுகைகளை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களை விற்றுப் பிழைப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். சிங்கள அரசிடம் எந்தவிதமான சமாதான முன்மொழிவுகளும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிந்து கொண்டே, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் இவர்கள். ஜனநாயக வழிமுறைக்கு திரும்பிவிட்டதாக கூறிக் கொண்ட போதிலும் இப்போதும் ஆயுதங்களை ஏந்தியவாறு, தமக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களையும், முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும், ஊடக சுதந்திரத்தையும் ஒடுக்குவதற்கு மாத்திரம் இந்த ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

தமிழ் சமூகத்தில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எந்த விதமான தேசிய, ஜனநாயக முன்முயற்சிகளையும் தீவிரமாக நசுக்குவதில் முன்னிற்பவர்கள் என்ற வகையில், இவர்கள் தமிழ் மக்களது அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்படுவது, இந்த முன்முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மிகவும் அவசியமானதாகிறது. ஆதலால் இவர்களை சிங்கள அரசின் கூலிப்படைகளாக இனம் கண்டு முற்றாக நிராகரிக்குமாறு மக்களை கோருகிறோம்.

சிங்கள தேசமானது தமிழ் மக்களை ஒரு தனியான தேசம் என்பதை மறுதலித்து, அவர்களை அடிமைகள் போல நடத்த முனைகிறது. தனியான, சுயமான அரசியல் அதிகாரத்தை கோரி நிற்கும் ஒரு தேசத்தின் முன் சில எலும்புத் துண்டுகளை எறிந்துவிட்டு, அபிவிருத்தி என்று பூச்சாண்டி காட்டுகிறது. இந்த திமிரான ஆதிக்க சக்திகளது குப்பை கூழங்களை கூவி விற்கும் இந்த பொறுக்கிகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தமிழ் மக்களது வாக்குகள் அமைய வேண்டும்.

தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடவே வக்கில்லாத இந்த அடிமைகள், ஒரு தேசத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காட்ட முனைவது என்பது சுத்த மோசடியாகும். ஒரு தேசத்தின் சுயமரியாதையை விற்று பிழைப்பு நடத்தும் இவர்கள் தமிழரது தேசிய அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டிய களைகள் ஆகும். இப்போது இந்த பீடைகளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிவைக்க கிடைத்துள்ள தருணத்தை தமிழ் மக்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டக்லஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான் போன்ற கைக்கூலிகளை ஜனநாயகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் தனிமைப்படுத்துக! அமைச்சர் பதவிகளை வைத்துக் கொண்டு அதிகாரம் பண்ணும் நிலைமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

தமிழர் தேசிய கூட்டமைப்பு

சரியான அர்த்தத்தில் பார்த்தால் இவர்கள் ஒரு அரசியல் கட்சியோ, அல்லது அமைப்போ கூட கிடையாது. புலிகள் தமது ஏவலை செய்வதற்கு சில அரசியல்வாதிகளை தேடினார்கள். இன்னும் சரியாக கூறுவதானால், தமிழர் தாயகத்தில் உள்ள பாராளுமன்ற ஆசனங்களை கூலிப்படையினர் அலங்கரித்துக் கொண்டு, அரசின் பிரச்சாரத்திற்கு துணை போவதை தடுக்க முனைந்தார்கள். அதற்காக பொறுக்கியெடுக்கப்பட்ட தனிநபர்களே இவர்கள். தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கு என்று ஒரு அமைப்பு வடிவமோ, அல்லது திட்டவட்டமான கொள்கை நிலைப்பாடுகளோ கிடையாது. அதில் இருப்பதாக கூறப்படும் பல்வேறு அமைப்புக்களும் கூட இந்த தலைவர்களது கட்டுப்பாடுகளில் கிடையாது. ஆக மொத்தத்தில் தமது பதவி சுகங்களுக்காக வெட்கம் இன்றி புலிகளது கொத்தடிமைகளாக செயற்பட்ட ஒரு கூட்டம் இது. பதவியில் இருந்த காலத்தில் இவர்கள் புலிகள் அமைப்பிற்கோ, அல்லது தமிழ் மக்களுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. தத்தம் சொந்த சொத்து சேர்க்கும் வேட்டையில் முழுமையாக மூழ்கித் திழைத்தவர்கள். இவர்களுள் பலர் தமது தொகுதிகளுக்கு செல்லாதது மட்டுமல்ல, இலங்கையிலேயே கூட இருந்ததில்லை. அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, இலங்கை திரும்பும் போதெல்லாம், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த சலுகைகளை பயன்படுத்தி புத்தம் புதிய வாகனங்களை இறக்குமதி செய்து விற்று கொள்ளை இலாபம் சம்பாதித்தவர்கள். வன்னியில் மக்கள் கடும்துயரில் இனப்படுகொலையை சந்தித்துக் கொண்டிருக்கையில் தமது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைத்துக் கொண்டே, புலிகளால் பலவந்தமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பாக, வன்னி மண் அந்த மக்களது மண் எனவும், அவர்கள் அங்கு தங்கி நிற்பதே சரியானது என்ற வித்திலும் மிகவும் பொறுப்பற்ற அறிக்கை விட்டவர்கள்.

புலிகளது மறைவுடன் இவர்களது இருப்பிற்கான காரணம் மறைந்து விட்டது. ஆயினும் பாராளுமன்ற ஆசனங்கள் என்ற ஒரே குறியில் இவர்கள் அந்த அமைப்பை காப்பாற்றி வருகிறார்கள். இந்த ஆசனங்களை குறியாக வைத்தே ஒரு கூட்டம் இதைச் சுற்றிக் கொண்டு வருகிறது. முன்பு புலிகள் அமைப்பு இருந்த போது, வன்னியில் இவர்களது கட்டளைத் தலைமையகம் இருந்தது. இப்போது இது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அரசின் நலன்களுக்கு தமிழ் மக்களை தாரைவார்க்க தயாராகிவிட்டார்கள்.
 
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுத்து வந்த பிற்போக்கு, வலதுசாரி, மேட்டுக்குடியின் மிச்ச சொச்சமான இந்த அமைப்பானது, வரலாற்றுரீதியிலும், அரசியல்ரீதியிலும் காலாவதியாகிப்போன ஒரு போக்கை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமானது, இந்த பிற்போக்குத் தலைமைகள் முறியடிக்கப்படுவதிலேயே தங்கியுள்ளது.
 
 
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (தமிழ் கொங்கிரஸ் கூட்டு)

தமிழ் கொங்கிரஸ் அமைப்பானது தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் தோன்றிய சாபக்கேடான ஒரு அமைப்பாகும். தமிழ் சமுதாயத்தில் காணப்பட்ட அத்தனை பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு ஒட்டு மொத்தமான வடிவமாக திகழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் அரசியலை மாத்திரமே செய்து வந்தவர்கள். தொண்ணூறுகளில்; புலிகளுக்கு ஆதரவாக ஆங்கிலத்தில் அறிக்கை விடும் ஒருவராக செயற்பட்டு, அரசினால் படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் மகன் என்ற ஒரு தகைமை மட்டுமே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிற்காலத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியது. புலிகளது காலத்தில் தமிழ் மக்களது விடுதலைக்காக இவர்கள் எந்தவிதமான உருப்படியான  முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை.
 
புலிகளின் நியமனத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இடம் பெற்ற கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் புலிகளது நியமனம் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியையோ, அரசியல் முன்னெடுப்பையோ கொண்டிராதவர்கள். இப்போது இந்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக, அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் மறுக்கப்பட்ட நிலையில் இவர்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள இவர்கள் முன்வைக்கும் வாதங்களை நம்பும் அளவிற்கு தமிழ் மக்கள் அரசியல்ரீதியில் ஒன்றும் அப்பாவிகள் அல்லர்.

விக்கரமாபாகு கருணாரத்ன தலைமையிலான இடது முன்னணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் நவ சமசமாஜ கட்சியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரித்தோம். கடந்த காலத்தில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்தவர் என்ற ரீதியிலும், தொடர்ந்தும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிபந்தனையின்றி ஆதரித்து வந்தவர் என்ற வகையிலும் இந்த ஆதரவிற்கான முடிவு எடுக்கப்பட்டது. இவர் கடந்த காலத்தில் புலிகளை நிபந்தனையின்றி ஆதரித்தது தவறு என்ற விமர்னத்தை நாம் கவனத்தில் கொண்டோம். ஆயினும் சிங்கள தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் என்ற வகையில், தமிழர் தரப்பில் வேறு மாற்று சக்திகள் எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாத நிலையில் அதனை ஒரு பாரதூரமான தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில், வேறு எந்த முற்போக்கு சக்திகளும் அரங்கில் இல்லாத நிலையில், தமிழ் வலதுசாரி தலைமைக்கு முடிவு கட்டுவது, மற்றும் சிங்கள முதற்போக்கு சக்திகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடனும் மேற்கொள்ளப்பட்ட அந்த முடிவானது சரியானது என்றே நம்புகிறோம்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் நிலைமைகள் வேறுபட்டிருப்பதாக நாம் உணர்கிறோம். முற்போக்கான அமைப்பு என்ற வகையில் நவ சமசமாஜ கட்சியானது, இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன் கூட்டுக் சேராது, சிவாஜிலிங்கம், சிறீகாந்தா ஆகியோருடன் கூட்டு சேர்ந்திருப்பது விநோதமானதாக இருக்கிறது. இவர்கள் இருவருமே, தமிழ் சமூகத்தின் மிகவும் பிற்போக்கான கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள். இவர்கள் முன்னெடுக்கும் அரசியலானது கோமாளித்தனமானது. தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு முற்போக்கான கட்சி என்ற வகையிலும், தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்பவர்கள் என்ற வகையிலும் இவர்கள் தமிழ் மக்களின் நட்பு சக்திகள் என்றே நாம் கருதுகிறோம். ஆனால் இவர்கள் தமிழ் பிற்போக்கு வலதுசாரிகளுடன் எற்படுத்திக் கொண்ட தேர்தல் கூட்டானது இவர்கள் தமிழ் மக்களது முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் ஆதரவை பெற்றுக் கொடுப்பதில் தடையாக அமைந்து விட்டதாகவே நாம் கருதுகிறோம்.

கழகம் மற்றும் ஈபிஆர்எல்எப் (நாபா) பிரிவு

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், இப்போது அந்த கூட்டுக்கு வெளியில் நிற்கிறார்கள். அதற்கான விளக்கங்களை முன்வைக்கவில்லை. 1983 யூலை கலவரத்தின் பின்பு தன்னியல்பாக  தோன்றிய பல்வேறு குழுக்களும் அவற்றின் வரலாற்றுக் காலத்தையும் கடந்து, திட்டவட்டமான அரசியல் செயற்பாடுகள் எதுவும் அற்ற விதத்தில் வெறுமனே செயற்கையாக ஆதிக்க சக்திகளால் உயிர்வாழ வைக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் தனிநபர்களது பிழைப்பு மற்றும் ஆசனத்திற்கான கனவுகளே இந்த அமைப்புக்கள் உயிர்வாழ்வதற்கான காரணங்களாக அமைகின்றன.  

இப்படிப்பட்ட சில தனிநபர்களது பிழைப்பிற்காக, ஒரு தொகையான இளைஞர்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளிலும் இதன் அங்கத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கடந்த கால அடாவடித்தனங்கள், மோசமான மனித உரிமை மீறல்கள் மற்;றம் இன்றைய பாத்திரம் போன்றவற்றை கருத்திற் கொள்ளும் போது, இப்படிப்பட்ட அமைப்புக்களை கலைத்துவிடுவதே தமிழ் மக்களது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது. இது இவர்களுக்கு மாத்திரம் அன்றி, அந்நிய சக்திகளது தயவில் செயற்கையாக இயக்கப்படும் இன்னும் பல உதிரிக் குழுக்களுக்கும் பொருந்தி வரக்கூடியது என்றே கருதுகிறோம்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபை

ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் அமைப்பாவதும், அதன் அடிப்படையில் தமது அரசியலை முன்னெடுப்பதும் சரியானதே. ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக தேர்தலி;ல் நிற்பது என்பதுடன் எமக்கு கொள்கையளவில் முரண்பாடு கிடையாது. ஆனால் இந்த இடைக்காலத்தில் பல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. தலித் முன்னணி என்ற அமைப்பின் தோற்றமும், அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒட்டு மொத்தத்தில் தமிழ் தேசியத்தை மறுதலிக்கும் வகையில் முன்வைப்பதும், இந்த அமைப்பின் நோக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அத்தோடு இந்த அமைப்பானது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும் குழுக்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளும் சந்தேகத்திற்கு உரியனவாக உள்ளன. அத்தோடு அரசாங்கம் மற்றும் தன்னார்வ குழுக்களது பணங்கள் கைமாறப்படுவதான குற்றச்சாட்டுக்களை எம்மால் நிரூபிக்க முடியாவிட்டாலும், அது அவர்கள் மீது ஒரு கறையாக படிவதை தவிர்க்க முடியாதுள்ளது. நூடளாவிய ரீதியில், தமது எதிரணிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பெருந்தொகையான பணத்தை விசியெறிந்து பல்வேறு குழுக்களை செயற்கையாக உருவாக்கி தேர்தலில் கலந்து கொள்ளச் செய்து தமது எதிரணிகளது வாக்குகளை சிதறடிக்க முனைவதை காண்கிறோம். அது இவர்கள் விடயத்திலும் நடப்பதாக ஒரு சந்தேகம் நிலவுவதை நாம் மறுத்துரைக்க முடியவில்லை.
 
கடந்த காலத்தில் சிங்கள அரசானது தமிழ் தேசியத்தினுள் உள்ள அக முரண்பாடுகளை கிளறிவிட்டு அதில் குளிர்காய்ந்ததை நாம் அறிவோம். தமிழ் தேசிய இயக்கத்தினுள் யாழ்மையவாதம், சாதியம், வர்க்கம், ஆணாதிக்கம் போன்ற முரண்பாடுகளும், ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்கள் – முஸ்லிம் மலைய மக்கள் – தொடர்பான தப்பெண்ணங்களும் நிலவுவது உண்மையே. இவை ஒரு தேசத்தினுள் உள்ள அகமுரண்பாடுகள் என்ற வகையில் தேசத்தினுள்ளும், ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்களுடனான சமத்துவம் பற்றிய விடயமாக அந்த சகோதர தேசங்களுடன் அரசியல்ரீதியாக பேசியும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகளாகும். ஆனால், எதிரகளோ இந்த முரண்பாடுகளை மிகவும் கூர்மையடையச் செய்து, தமிழர் தேசத்தை அதன் கூறுகளாக சிதறடிக்கவும், பின்பு அந்த கூறுகளை ஒன்றோடொன்று மோதவிட்டு குளிர்காயவும் முயல்கின்றார்கள். அந்த நோக்கில் பயன்பட்டவர்களே இ;ந்த கருணா- பிள்ளையான கோஷ்டியும், தலித் முன்னணியாகும். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்காத தனிநபர்கள் அடையாள அரசியலை முன்வைப்பதும், தன்னார்வ குழுக்களது ஆதரவில் செயற்படுவதும் இப்போதும் நடந்து வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை அமைப்பாவதும், தாம் அன்றாடம் முகம் கொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட முன்வருவதும் வரவேற்கத்தக்கதே. ஆனால் இந்த முயற்சியானது, இந்தியாவில் நடைபெறுவது போல, வெறுமனே சாதிச்சங்கங்களை தோற்றுவித்து ஒடுக்கப்பட்ட மக்களை வெறுமனே வாக்குவங்கிகளாக மாற்றி, அந்த ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட உணர்வுகளை திசை திருப்புவதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அத்துடன் இந்த அக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் என்ற பெயரில், வெளிப்படையாகவே எதிரியின் நடவடிக்கைகளுடன் கூட்டுச் சேர முனைவது தவறான அரசியல் என்றே நாம் கருதுகிறோம். ஆதலால் நாம் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை நிராகரிக்குமாறு கோருகிறோம். ஆனால் எமது ஆய்வுரைகளுக்கு மாறாக யதார்த்த நிலைமைகள் இருப்பதாக காணும் எவருமே தமது சுயமான முடிவுகளை எடுப்பதை நாம் ஊக்குவிக்கிறோம்.

புதிய ஜனநாயக கட்சி

இந்த தேர்தல் களத்தில் நிற்கும் கட்சிகளுள் முற்போக்கு கொள்கைகளுடனும், சந்தர்ப்பவாத கூட்டுக்கள் இல்லாமலும், தமது கொள்கை நிலைப்பாடுகளை மாத்திரம் முன்வைத்து தேர்தலில் நிற்கும் இவர்கள் கவனிக்கப்பட வேண்டிய சக்திகளாவர். ஒரு மரபார்ந்த இடதுசாரி அரசியல் கட்சி என்ற வகையில் இவர்களது கடந்த கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும், இப்போது முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாகவும் எமக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆயினும் ஒரு விரிவான ஜனநாயக கூட்டமைப்பு என்ற வகையில் இவர்களுடன் இணைந்து செயற்படவும், தொடர்ச்சியாக உரையாடல்களை நடத்தவும் இந்த குறைபாடுகள் பெரிய தடையாக அமைந்துவிடாது என்று நம்புகிறோம். ஆதலால் நாம் சில கருத்து வேறுபாடுகளுடன்தான் என்றாலும் புதிய ஜனநாயக கட்சிக்கு முழுமையாக ஆதரவு வழங்கலாம் என்று கருதுகிறோம்.
மேலே கூறப்பட்ட நிலைப்பாடுகள் எமது அமைப்பின் கருத்துக்கள் என்ற வகையிலேயே முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உங்களது சொந்த அனுபவங்கள், பரிசீலனைகளையும் வைத்து இறுதி முடிவை நீங்களே முன்வையுங்கள்.

சில குறிப்பான பிரச்சனைகள் குறித்து…

நாம் தேர்தல் தொடர்பான கொள்கை அடிப்படையிலான  நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதன் அவசியத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, எமது தேசம் முகம் கொடுக்கும் குறிப்பான பிரச்சனைகள் குறித்து பாராமுகமாக இருக்க முடியாது என்றே கருதுகிறோம்.

அந்த வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற எல்லைப்புற மாவட்டங்களின் தேர்தல் களநிலைமைகள் குறிப்பான கவனத்தை வேண்டி நிற்கின்றனவாகும். இந்த மாவட்டங்களில் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களும், நிர்வாக மற்றும் தேர்தல் அலகுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசத்திலேயே தமது பிரதிநிதித்துவத்தை இழக்கும் ஆபத்தை எதிர் கொள்வதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் பிரதிநிதிகள் அதிகம் சாதிப்பார்களோ இல்லையோ, குறைந்த பட்சம் ஒரு சிங்கள பிரதிநிதியை வரவிடுவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையாவது தவிர்ப்பதில், தடுத்து நிறுத்துவதில் ஓரளவுக்காவது பயன்படும் என்பது உண்மையே. இப்படியாக மக்கள் மத்தியில் உள்ள பய உணர்வுகளை சில அமைப்புக்கள் பயன்படுத்தி தமது அரசியலை நடத்த முனைவதும் நாம் அறியாதது அல்ல. ஆயினும் இப்போது இருக்கும் நெருக்கடியான நிலைமைகளில் இந்த சர்ச்சைகளில் அதிக சக்தியை விரயம் செய்யாமல் இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதனால் நாம் முன்னர் குறிப்பிட்ட தவறான செயற்பாடுகளை உடைய கட்சிக்கு இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வாக்களிக்க நேர்வது தவிர்க்க முடியாது போகலாம். ஆனால் அப்படிப்பட்ட நிலைமைகளில் கூட, இந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் உள்ள தீவிரமாக செயற்படும் சக்திகளை இனம் கண்டு, அவர்களை முன்னுக்கு கொண்டுவர உதவுவதாக உங்களது வாக்குகள் அமையலாம்.

தமிழ் மக்களே! பிற்போக்கு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!!
முற்போக்கு ஜனநாயக சக்திகளை இனம் கண்டு ஆதரிப்போம்!!!

 ‘மே 18 இயக்கம்’

      மார்ச் 24, 2010

Exit mobile version