Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிறகு அவர்கள் என்னிடம் வந்தார்கள் – லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கம்:மொழிபெயர்ப்பு : ரஃபேல்

(லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கம். சண்டே லீடர், ஜனவரி 11 2009)

இலங்கையில், தங்கள் தொழிலின் நிமித்தமாக உயிரை விடும்படியான தேவை இராணுவத்தினரையும் பத்திரிகையாளரையும் தவிர வேறு எந்த தொழிலுக்கும் இல்லை.

 சுயமான ஊடகங்கள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதலுக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் எரிக்கப்பட்டும் குண்டுவீசப்பட்டும் இழுத்துமூடப்பட்டும் மிரட்டப்பட்டும் வருகிறது. எண்ணிலடங்கா பத்திரிகையாளர் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த அனைத்திலும் இருந்தது எனது பெருமையாக இருந்தது. தற்போது சிறப்பாக, கடைசி வகையும் அமைகிறது.

பத்திரிகைத்துறையில் பலஆண்டுகளாக இருந்து வருகின்றேன். உண்மையில் 2009 சண்டேலீடரின் 15 ஆவது ஆண்டு. இந்த காலகட்டத்தில் பல மாற்றங்கள் இலங்கையில் நிகழ்ந்துள்ளன. இதில் பெரும் பகுதி மோசமான மாற்றங்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. எல்லையற்ற இரத்த வேட்கை பிடித்த தலைமைகளால் இரக்கமற்ற முறையில் நடத்தப்படும் ஓர் உள்நாட்டுப் போரின் நடுவில் நாமிருக்கிறோம். அது பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டாலும் அரசினால் உருவாக்கப்பட்ட்டாலும், பயங்கரவாதம், அன்றாட நடைமுறையாக மாறிவிட்டது. சுதந்திரத்தின் கரங்களை ஒடுக்குவதற்கு அரசு முதன்மையாக எடுத்திருக்கும் கருவியாக கொலை அமைந்துள்ளது. இப்போது பத்திரிகையாளர்கள், நாளை நீதிபதிகள். இதில் எவருக்கும் முன்னெப்போதையும்விட சிக்கல் அதிகமாயும்  தப்பும் வாய்ப்பு குறைவாகவும் உள்ளது.

பிறகு ஏன் நாங்கள் இவற்றை மேற்கொள்ள வேண்டும்? நான் அடிக்கடி இது குறித்து ஆச்சரியப்படுவேன். நான் ஓர் கணவன் மற்றும் மூன்று அருமையான குழந்தைகளின் தந்தைதானே.

எனக்கும் எனது தொழிலை மேவிய பொறுப்புக்களும் கடப்பாடுகளும் இருக்கின்றன, அது பத்திரிகைத் துறையாயினும் சட்டமாயினும். இந்தளவு ஆபத்தை எதிர்கொள்வது பொருத்தப்பாடுடையதா? பலர் இது தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

நண்பர்கள் என்னைச் சட்டத்துடன்மட்டும் நின்றுகொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அது பாதுகாப்பான சிறப்பான வாழக்கையைத் தரும் என்பது தெரிந்ததே. பிறர், இரண்டு பக்கமும் இருக்கும் அரசில் தலைவர்கள் உட்பட, பல வேளைகளில் அரசிலில் ஈடுபடத் தூண்டினார்கள். எனக்கு விரும்பிய அமைச்சினைக்கூடத் தருமளவிற்குச் சென்றார்கள்.

வெளிநாட்டு ராசதந்திரிகள், இலங்கையில் பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான பயணத்தையும் அவர்கள் நாட்டில் தங்குவதற்கு உரிமையையும் வழங்குவதாகக் கூறினார்கள். எவையெல்லாம் என்னைச் சிக்கவைப்பதற்கு முன்னாலிருந்தனவோ அவை எவற்றிலும் நான் தேர்ந்தெடுத்துச் சிக்கிக் கொள்ளவில்லை.

உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்துக்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி.

சண்டே லீடர் ஓர் சர்ச்சைக்குரிய செய்தி ஏடாக இருக்கிறது, ஏனெனில் நாங்கள் பார்ப்பவற்றை நாங்கள் சொல்கிறோம். உன்னத ஆளாயிருப்பினும் கள்ளனாயிருப்பினும் கொலைகாரனாயிருப்பினும் நாங்கள் அந்தப் பெயரால் அழைக்கிறோம். நாங்கள் திரிபுச் சொற்களின் பின்னால் அவற்றை மறைப்பதில்லை. புலனாய்வு செய்து நாங்கள் அச்சிடும் கட்டுரைகள் ஆவண ஆதாரங்களுடன் உள்ளன.

இந்த மாதிரி ஆவணங்களைக் குடிமக்களுக்குரிய உந்துதலுடன் தங்களுக்கு இருக்கும் பெரும் ஆபத்துக்கு மத்தியிலும் தந்து உதவும் மக்களுக்கு நன்றியுடையோம். நாங்கள் ஊழலுக்கு மேல் ஊழல்களை அம்பலத்தில் கொண்டு வந்திருக்கிறோம். இவை கடந்த 15 ஆண்டுகளில் ஒரு தடைவகூட தவறானது என்று நிரூபிக்கப்படவுமில்லை சட்டத்தின் முன் தண்டனை பெறவும்; இல்லை.

சுதந்திர ஊடகம் மக்களுக்கு கண்ணாடியாகச் செயற்படுகிறது. மக்கள் இதன் மூலம் தங்களை ஒப்பனைகள் இன்றிப் பார்த்துக் கொள்ள முடியும். எங்களிலிருந்து நீங்கள் உங்கள் நாட்டின் அரசைப்பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக மக்களால் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை தருவதற்காக தேர்வு செய்யப்பட்ட அரசின், அவற்றின் ஆட்சிமுறைகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். சிலவேளைகளில் இந்தக் கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் பிம்பம் ரசிக்கும்படி இருக்காது.

ஆனால் நீங்கள் தனிமையில் உங்கள் சாய்மணைக் கதிரைகளில் இருந்தபடி அவற்றைப் புரட்டுகையில் அந்தக் கண்ணாடியைப் பிடித்திருக்கும் பத்திரிகையாளர் தங்கள் முன்னிருக்கும் பெரிய ஆபத்துநிலையையும் பொருட்படுத்தாமல் வெளிப்படையாக நிற்கிறார். இதுதான் எங்கள் அழைப்பு. நாங்கள் அதைத் தவிர்க்க மாட்டோம்.

ஒவ்வொரு செய்தி ஏடும் தங்களுக்கான பார்வைக் கோணங்களை கொண்டவை. நாங்களும் அப்படியொரு கோணத்திலிருந்து பார்க்கிறாம் என்ற உண்மையை மறைக்கவில்லை. சிறிலங்காவை வெளிப்படையான – மதச்சார்பற்ற – சுதந்திரமான- மக்களாட்சியுடையதாகப் பார்ப்பதே எங்கள் நோக்கு.  இந்த ஒவ்வொரு சொல்லையும் பற்றிச் சிந்தித்து பாருங்கள் . அவை சிறப்பான பொருளுடையவை. வெளிப்படையானது என்பது அரசு மக்களுக்கு திறந்ததாக நம்பிக்கைக்குரியதாகவும் அவர்களின் நம்பிக்கையை பாழடிக்காததாகவும் இருக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

மதச்சார்பற்றது என்பது எங்களைப்போன்ற பல்பண்பாண்டு பல்லின சமூகத்தில் மதச்சார்பின்மைதான் நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவதற்கான தளத்தை வழங்கும் என்பதனால். சுதந்திரமானது என்பது நாங்கள் அனைத்து மனிதர்களும் வேறுபாடுகளுடன் படைக்கப்பட்டள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ளுதலும் பிறரை நாம் அவர்கள் எப்படி யிருக்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் அப்படியிருப்பதன்படியே ஏற்றுக் கொள்ளுதலுமாகும். மற்றும் மக்களாட்சி என்பது…சரி, ஏன் இது முதன்மையானது என்று விளக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களாயிருந்தால் இந்தச் செய்திஏட்டை வாங்குவதை நீங்கள் நிறுத்துவது நல்லது.

பெரும்பான்மையரின் பார்வையைக் கேள்விக்குள்ளாக்காமல் அப’படியே திருப்பிச்சொல்வதன் வழியாக சண்டே லீடர் ஒருபோதும் பாதுகாப்பு தேடிக்கொள்வில்லை. அதை எதிர்கொள்வோம். அதுதான் செய்தி ஏடுகளை விற்கும் வழி. அதற்கு மாறாக எமது கருத்துக் களங்களில் கடந்த ஆண்டுகளாக நாங்கள முன்வைக்கும கருத்துக்கள் பலருக்கு விருப்பற்றவையாக இருந்துள்ளன. எடுத்துக்காட்டாக பிரிவினைவாதப் பயங்கரவாதம் நீங்கப்படவேண்டிய அதேவேளை பயங்கரவாதத்தின் அடிப்படை எது என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். வரலாற்றினூடாக இனச்சிக்ககலைப் பார்க்கும் படியும் பயங்கரவாதத் தொலைநோக்கியூடாகப் பாரக்கவேண்டாம் என்றும் சிறிலங்கா அரசை வலியுறுத்தியுள்ளோம். பயங்கரவாத்திற்கு எதிரானபோர் என்ற பெயரில் நடக்கும் அரசுப் பயங்கரவாதம் பற்றியும் நாம் குரல்கொடுத்தோம்;. தனது குடி மக்களின் மீது தொடர்ச்சியாகக் குண்டு மழை பொழியும் உலகின் ஒரேயொரு நாடு சிறிலங்கா என்ற உண்மையை ரகசியமாக்கவும் இல்லை. இந்தப் பார்வைகளுக்காக நாங்கள் காட்டிக்கொடுப்போர் என்று முத்திரை குத்தப்பட்டோம். இது நம்பிக்கைத் துரோமாயிருந்தால் நாங்கள் அதைப் பெருமையுடன் அணிந்துகொள்வோம்.

பலர் சண்டேலீடர் ஒரு அரசியல் திட்டத்துடன் இயங்கி வருகிறது என்று நம்புகிறார்கள்: அப்படியல்ல. எதிர்க் கட்சிகளைவிடவும் அரசை நாங்கள் அதிகமாக விமர்சிப்பதாகப் பட்டால் அது – கிரிக்கெட் விளையாட்டின் நுட்பத்தை எடுப்பதற்கு மன்னிக்க, – ‘பீல்டிங்’ பக்கத்திற்கு பந்தை எறிவதில் எந்தப் பயனும் இலலை என்பதனால்தான். ஐ.தே. கட்சி ஆட்சியில் இருந்த சில ஆண்டுகளை எண்ணிப்பாருங்கள். அதன் சதையில் ஏறிய பெரிய முள்ளாக நாங்கள்  இருந்து நிரூபித்திருக்கிறோம். ஊழலையும் சீரழிவையும் எங்கிருந்தாலும் வெளிக்கொணர்ந்தோம். உண்மையில் நாங்கள் வெளிக்கொண்டு வந்தவற்றின் தொடர்ச்சியான விளைவுகளால்தான் அந்த அரசின் வீழ்ச்சி அமைந்தது.

எமது போரின் மீதான விருப்பின்மை புலிகளை நாங்கள் ஆதரிப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. புவியில் பிடித்திருக்கும் கொடூரமான ரத்ததாகம் கொண்ட பயங்கரவாத அமைப்புக்களில் முதன்மையானது எல.ரி.ரி.இ(LTTE). அது இல்லாமல் செய்யப்டவேண்டும் என்பதற்கு எதிர்ப்பு சொல்லமுடியாது. அதற்காக, தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவது, குண்டுவீசுவது, கருணையற்ற வகையில் சுடுவது பிழையானது மட்டுமல்ல சிங்களவருக்கு வெட்கத்தைத் தருவது. தம்மத்தின் காவலர் என்பவர்கள் இந்த காட்டுமிராண்டித் தனத்தினால் எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்படுவர்.  இவற்றில் பெரும்பான்மையானவை இருக்கின்ற தணிக்கையினால் பொதுமக்களுக்கு தெரியாது.

மேலும் என்ன, வடக்கு கிழக்குகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அப்பகுதியின் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரசைகளாகவும் அனைத்து சுயமரியாதையையும் இழந்தவர்களாகவும் வைத்திருக்கும். போருக்குப் பின்பான காலத்தில் அபிவிருத்தி மீள்கட்டுமானம் போன்றவற்றால் அவர்களைச் சாந்தப்படுத்தி விடலாம் என்று கற்பனை செய்ய வேண்டாம். போரின் வடுக்கள் அவர்களில் எப்போதும் பதிந்திருக்கும். மேலும் இவற்றைக் கொண்ட, கசப்பான, வெறுப்புடைய ஓர் புலம்பெயர் சமூகமும் உங்களுக்கு முன் உள்ளது. ஓர் அரசியல் தீர்வின் மூலம் தீரக்கப்படக்கூடியதாகவிருந்த சிக்கல் ஒன்று என்றென்றைக்கும் மாறாத வடுவாக சிதம்பியுள்ளது. கோபமும் விரக்தியும் என்னிடம் தென்பட்டால் அது எனது நாட்டு மக்களுக்காகத்தான் – அரசாங்கத்தினருக்காகத்தான். தூய்மையாகச் கல்லில் எழுதப்படும் இந்த எழுத்துக்களை  அவர்களால் பார்க்கமுடியாது.

நான் இரு தடவை மிகவும் கொடுமையாகத் தாக்கப்பட்டேன் என்பது அறியப்பட்டதே. மற்றொரு தடவை எனது வீடு எந்திரத்துப்பாக்கிக் குண்டுகளால்; விசிறப்பட்டது. அரசாங்கத்தின் புனித வாக்குறுதிகளைத் தவிர, இந்த தாக்குதல் செய்தவர்கள் பற்றி எவ்வித விசாரணையும் இது வரை இல்லை. தாக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஒவ்வொரு தாக்குதலும் அரசாங்கத் தூண்டுதலில் நடந்தது என்று எண்ண எனக்கு காரணங்கள் இருந்தன. இறுதியாக நான் கொல்லப்படுகையில் இந்த அரசாங்கம்தான் என்னைக் கொல்லப்போகின்றது.

பல பொது மக்களுக்கு தெரியாத முரண் என்னவென்றால், 25 ஆண்டுகளுக்கு மேலாக மகிந்தவும் நானும் நண்பர்கள். உண்மையில் நான் நினைக்கிறேன்;, எப்போதும் முதல்பெயரால் அவரை அழைக்கும் வகையில் மிஞ்சி இருக்கும் சிலரில் நானும் இருக்கிறேன். சிங்களத்தில் தெரிந்தவர்களை அழைக்கும் ‘ஒய’ என்பதனையும் அவருடன் கதைக்கும் போது பாவிக்கிறேன். செய்தி எடுகளின் ஆசிரியர்களுக்காக அவர் கூட்டும் தொடர்ச்சியான கூட்டங்களில் நான் பங்கு பற்றுவதில்லை. நாங்கள் இருவரும் சந்திக்காமல் ஒரு மாதம் கூட இருந்ததில்லை. ஏதாவது நண்பர்கள் வீட்டில் அல்லது அதிபரின் வீட்டில் பின்இரவிலாவது சந்தித்துக் கொள்வோம். அங்கே கதைவிட்டு அரசியல் உரையாடி எங்கள் பழைய நாட்கள் பற்றி பகிடிவிட்டுக் கதைத்துக் கொள்வோம். அதனால் அவருக்குச் சில குறிப்புக்கள் இங்கே தருகிறேன்.

மகிந்தா! 2005 இல் அதிபராக போட்டியிடுகையில் இந்தப் பத்தியைத்தவிர வேறு எங்கும் மிகவும் மகிழ்வுடன் நீ வரவேற்கப்படவில்லை. உண்மையில், ஆண்டுகளாக இருந்த மரபை உனது முதல் பெயரால் அழைப்பதன் மூலம் நாம் மீறினோம். மனித உரிமைகளுக்கும் சுதந்திர விழுமியங்களுக்குமான உனது முன்னைய ஈடுபாடுகள் பரவலாக அறியப்பட்டவை. நாங்கள் அதை ஓர் நம்பிக்கை தரும் தென்றலாகப் பாரத்ததோம். பின்னர் முட்டாள்தனமாக நீ அம்பாந்தோட்டை ஊழலில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டாய்.  அந்த செய்தியை வெளியிடுகையில் மிகவும் ஆன்ம சோதனையாக இருந்தது. அதே நேரம் அந்தப் பணத்தை திருப்பி கொடுக்கும் படி வலியுறுத்தினேன். நீ அதை பல கிழமைகள் கழிந்த பின்னர் செய்தாய். உனது நம்பகத்தன்மையில் பெரிய அடிவிழுந்தது. இன்னும் நீதான் கீழான வாழ்நிலையை வாழ எத்தனிக்கிறாய்.

அதிபர் பதவிக்கு ஆசைபிடித்தவனல்ல என்று உன்னைப்பற்றி எனக்கு சொல்லியிருக்கிறாய். அதற்காக நீ அலையாமல் அது உன் மடியில் வந்து விழுந்தது. உனது மகன்;கள்தான் உன் சிறந்த மகிழ்வின்பம் என்று கூறியிருக்கிறாய். அவர்களுடன் நேரம் செலவிட விரும்புவதாகச் சொன்னாய். அதனால் உனது சகோதரர்களை அரச எந்திரத்தை இயக்கும்படி விடுவதாகச் சொன்னாய். இப்போது அனைவருக்கும் தெளிவாகிறது. அரசு எந்திரம் நன்றாக இயங்குகிறது. அதனால் எனது பையன்களும் மகளும் தந்தையற்றுபோயிருக்கிறார்கள்.

எனது மரணத்தில் நீ உனது புனிதச் சத்தங்களை எழுப்பி காவல்துறையை அழைத்து உடனடியான முழு விசாரணைக்கு உத்தரவிடுவாய் என எனக்குத் தெரியும். ஆனால் கடந்த காலத்தில் நீ உத்தரவிட்ட அனைத்து விசாரணைகளiயும்போல இதிலிருந்தும்கூட எதுவும் வெளிவராது. உண்மையைச் சொன்னால் எனது மரணத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாமிருவரும் அறிவோம். ஆனால் அவனது பெயரை உச்சரிக்கத் தைரியமில்லை. எனது உயிர் மட்டுமல்ல உனதும்கூட அதில்தான் தங்கியிருக்கிறது.

கவலைக்குரியவகையில், உனது இளம் நாட்களில் எமது நாட்டுக்காக நீ கொண்டிருந்த அனைத்துக் கனவுகளையும் வெறும் மூன்று அண்டுகளில் சிதைத்துவிட்டாய். நட்டுப்பற்று என்ற பெயரில் நீ மனித உரிமைகளை நெரிக்கிறாய், எல்லையற்ற ஊழலை வளர்க்கிறாய், பொதுப்பணத்தை உனக்கு முன்னிருந்த அதிகபர்களைவிட அதிகமாக வீணடிக்கிறாய். உண்மையில் சிறுபிள்ளை தற்செயலாய் பொம்மைக் கடைக்குள் நுழைந்தது போல உனது செயல் இருக்கிறது. இந்த ஒப்புமையும் பொருந்தாது ஏனென்றால் எந்தவொரு சிறுபிள்ளையும் இவ்வளவு இரத்தத்தை இந்நாட்டில் நீ செய்திருப்பதுபோல் சிந்தவைக்காது.  அல்லது மக்களின் உரிமைகளை நெரிப்பதுபோல் நெருக்காது. உனக்குத் தெரியாத அதிகார போதையில் நீ இருப்பினும் நீ உனது மகன்கள் இரத்தத்தின்மூலம் சேர்த்த பணத்தின் வாரிசுகளாராய் இருப்பதையிட்டு வருந்துவாய். அது துன்பத்தையே பெற்றுத் தரும். என்னைப்பொறுத்தவரை நான் தூய மனச்சாட்சியுடன் என்னைப்படைத்தவனைப் பார்க்கச் செல்கிறேன். உனது நேரம் இறுதியாக நெருங்குகையில் நீயும் அப்படிச் செய்யவேண்டும்; என்று விரும்புகிறேன். நான் விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் நிமிர்ந்து நடந்து ஒரு வருக்கும் தலைவணங்காமல் இருந்தேன் என்பதை அறிந்து திருப்தியாயிருந்தேன். இந்தப் பயணத்தை நான் தனியாகச் செய்யவில்லை. என்னுடன் பத்திரிகையாளர்கள் பிற பிரிவுகளில் உடன் நடந்தார்கள், பலர் இன்று இறந்துவிட்டார்கள், விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள், அல்லது தூர தேசத்தில் குடிபுகுந்தார்கள். மற்றவர்கள் நீ முன்னர் கடுமையாகப் போராடிய சுதந்திரத்திற்காக உனது ஆளுகை உருவாக்கியிருக்கும் மரணத்தின் நிழலில் நடக்கிறார்கள். எனது மரணம் உனது கண்காணிப்பின்கீழ் நடந்தது என்பதை நீ ஒரு போதும் மறக்க விடப்படமாட்டாய். நான் துன்பப்பட்டது போல் நீயும் படுவாய். எனது கொலையாளிகளைப் பாதுகாப்பதைத்தவிர உனக்கு எந்த தெரிவும் இல்லையென்பது எனக்குத் தெரியும். குற்றமுடையவன் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை என்பதை நீ பார்ப்பாய். உனக்கு எந்தத் தெரிவும் இல்லை. உன்னையிட்டு வருந்துகிறேன். அடுத்த தடவை பாவ மன்னிப்புக்கு செல்கையில் சிராந்தி(Shiranthi) அதிகநேரம் முழங்காலில் இருக்கவேண்டியிருக்கும். அது அவரது பாவங்களுக்காக அல்ல. உன்னை இந்தப் பதவியில் வைத்திருக்கும் உனது பெருங்குடும்பத்தின் பாவங்களுக்காக.

சண்டே லீடர் வாசகர்களுக்கு எதை நான் சொல்வது. ஆனால் எங்களது முயற்சிக்குரிய உங்கள் ஆதரவுக்கு நன்றி. நாங்கள் பிரபலமில்லாத விடயங்களைத் தொட்டிருக்கிறோம். பலர் எடுத்துக்கொள்ளாதவற்றுக்காக நாங்கள் முன்நின்றிருக்கின்றோம். தங்கள் அடிப்படைகளை மறந்து பதவிகளில் வீங்கிப் பெருத்திருப்பவர்களிடம் கொம்புச் சண்டை போட்டிருக்கிறோம். ஊழலையும் உங்கள் கடும் உழைப்பின் வரிப்பணத்தின் வீணடிப்பiயும் வெளிக்காட்டியிருக்கிறோம். அன்றாட வழக்கமானவற்றுக்கு மாறுபட்ட பார்வைகளை கேட்பதற்கு உறுதியளித்திருக்கிறோம். இதற்காக நானும் எனது குடும்பத்தினரும் விலை கொடுத்திருக்கிறோம். இந்த விலையை ஒரு நாள் கொடுக்கவேண்டியிருக்கும் என்று நீண்ட நாட்களாக அறிந்திருந்தேன். நான் எப்போதும் இதற்குத் தயாராகவே இருந்தேன், இருக்கிறேன். இந்த விளைவைத் தடுப்பதற்கு நான் எதையும் செய்யவில்லை: பாதுகாப்புமில்லை, முன்னெச்சரிக்கையும் இல்லை. எனது கொலையாளிக்கு அவனைப்போல நான் ஓர அயோக்கியன் அல்ல என்பது தெரியவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் மரணத்தை கண்டிக்கையில் மனிதக் கேடயத்தின் பின்னால் ஒழிந்து கொண்டிருப்பவன் நான் அல்ல. இத்தனைபேரிடையே நான் என்ன? நீண்டகாலகமாக எனது உயிர் எடுக்கப்படும் என்றும் அது யாரால் என்றும் எழுதப்பட்டு வருகிறது. எழுதப்படவேண்டியது எப்போது என்பதுமட்டும்தான்.

சண்டே லீடர் சண்டையைத் தொடரும். நல்ல சண்டை எழுதப்படுவதுதான். நான் இந்தச் சண்டையை தனியொருவனாகச் செய்யவில்லை. அந்தத் தலைவர் படுக்க வைக்கப்படும் வரை எங்களில் பலர் கொல்லப்படவேண்டும் கொல்லப்படுவார்கள். எனது படுகொலை சுதந்திரத்தின் மீதான அடியாகப் பார்க்கப்படாது என நான் நம்புகிறேன். மாறாக இந்த முயற்சிகளை முன்னெடுக்க உயிருடனிருப்பவர்களுக்கான ஊக்கமாக இது இருக்கும். உண்மையில் எங்கள் அன்பின் தாய் நாட்டில் ஓர் புதிய யுகத்தில் மனித சுதந்திரத்தை எடுத்துச்செல்லும் சக்திகளை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என நம்புகிறேன்.
எமது அதிபரின் கண்களைத் திறக்கும் என நான் மேலும் நம்புகிறேன். நாட்டுப்பற்று என்ற பெயரில் எவ்வளவு பேர் பலியாக்கப்பட்டாலும்கூட மனித முனைப்பு தொடர்ந்த வளர்ந்துகொண்டிருக்கும். அனைத்து ராஜபக்சேக்கள் சேர்ந்தாலும் அதைக் கொல்ல முடியாது.

பலர் எப்போதும் ஏன் நான் இவ்வளவு ஆபத்தை எதிர் கொள்கிறேன் என்று கேட்பார்கள். நான் கொலைசெய்யப்படுவதற்கு தாமதம் ஆகிறது அவ்வளவுதான் என்றும் சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் தெரிந்துதான் இருந்தது: அது தவிர்க்க முடியாதது. ஆனால் நாங்கள் இப்போது பேசாவிட்டால் பேசமுடியாதவர்களுக்கா பேச இங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனச் சிறுபான்மையாக இருப்பினும் பலம் குறைந்தவர்களாயினும் ஒதுக்கப்பட்டவர்களாயினும்.

எனது இந்த பத்திரிகைத் தொழில் முழுவதும் என்னை ஆட்கொண்ட ஓர் உதாரணம், ஒரு யேர்மானிய இறையியலாளர் மாரட்டின் நீம்லர் (ஆயசவin Nநைஅடடநச). அவருடைய இளமைக்காலத்தில் அவர் ஓர் யூத எதிர்பாளரும் ஹிட்லரின் அபிமானியும். நாசிசம் யேர்மனியை ஆட்கொண்டபோது, எப்படியிருப்பினும், அவர் நாசிசம் எப்படியானது என்று பாரத்தார்: ஹிட்லர் அழிக்க நினைத்தது யூதரை மட்டுமல்ல. யாரெல்லாம் மாற்றுப் பார்வையைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் அழிக்க நினைத்தார். நீம்லர் குரல் கொடுத்தார். அதனால் அவர் சிறைப்படுத்தப்பட்டு சாசென்ஹாவுசென்னிலும் டச்சா விலும் வதைமுகாமில் 1937 இலிருந்து 1945 வரை அடைக்கப்பட்டார். கொல்லப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறார். சிறைப்படுத்தப்பட்டபோது அவர் ஓர் கவிதை எழுதினார். முதல் தடவையாக நான் அதை எனது பதின்ம வயதில் வாசித்தேன். எனது மனதில் அது தவிர்க முடியாதபடி சிக்கிக்கொண்டது:

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்

    நான் குரல் கொடுக்கவில்லை ஏனென்றால் நான் யூதனல்ல

பின்னர் அவர்கள் கொம்யூனிஸ்ருக்களைத் தேடி வந்தார்கள்

    நான் குரல் கொடுக்கவில்லை ஏனென்றால் நான் ஓர் கொம்யூனிஸ்ற் அல்ல

பின்னர் அவர்கள் தொழில் சங்கத்தினரைத் தேடி வந்தார்கள்

    நான் குரல் கொடுக்கவில்லை ஏனெ;றால் நான் தொழில் சங்கத்தினனல்ல

பின்னர் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்

    அங்கு ஒருவரும் மிஞ்சியிருக்கவில்லை எனக்காக குரல் கொடுக்க

உனக்கு ஒன்றும் நினைவிலில்லாவிட்டாலும் இதை நினைவிலிருத்து: தலைவன் என்பது நீ, நீயாக, சிங்களவருக்கு, தமிழர், முசுலிம். குறைந்த சாதியர், ஓரினச் சேரக்கையாளர் கலகக்காரர் வலுவிழந்தோர் அனைவருக்கும் தலைவர். அதன் பணியாட்கள் போராடவேண்டும். வளையாமல் பயமில்லாமல் வீரத்துடன், போகப்போக அது உனக்கு பழக்கமாகிவிடும். ஏற்றிருப்பதை ஏனோதானோ என்று எடுத்துக்கொள்ளாதே. நாங்கள் பத்திரிகையாளர் மேற்கொள்ளும் எந்தத் தியாகமும் ஐயத்துக்கிடமில்லாமல் அவை எங்கள் சொந்தப் பெருமைகளுக்காக வளரச்சிக்காகச் செய்ப்படுபவையல்ல: அவை உனக்காகச் செய்யப்படுகின்றன. அந்த தியாகங்களுக்கு நீ பொருத்தமா என்பது வேறொரு விடயம். என்னைப்பொறுத்தவரை, கடவுளுக்குத் தெரியும், நான் களைப்படைந்துவிட்டேன்.

மொழிபெயர்ப்பு : ரஃபேல்

Exit mobile version