Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய மக்கள் போராட்டத்தின் வெற்றியும் தவறான அரசியலின் தோல்வியும்

பிரித்தானியாவில் மூன்று வருடங்களின் பின்னர் தமிழர்களின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாள 4 ஆயிரம் தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இலங்கை அரசியல் சாசனம், 13 வது திருத்தச் சட்டம், மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மை ஆகியன எரியூட்டப்பட்டன. மகிந்த ராஜபக்ச உரையாற்றவிருந்த நிகழ்வு ஆர்ப்பாட்டங்களால் ரத்துச்செய்யப்பட்ட நிலையில் அவர் உரையாற்றவிருந்த மன்ஷன் கவுசிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந் போதிலும் பிரித்தானிய மாகாராணியின் விருந்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் மனைவி மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.

பல நூற்றுக்கணக்கான இனப்படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட பிரித்தானிய அரச பரமபரைக்கு மகிந்த ராஜ்சப்க்ச பயங்கரவாதத்தை அழித்த ஜாமபவானகவே தெரிந்திருக்கும்.

பெரும்பாலும் மக்கள் தன்னெழுச்சியாகவே இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட போதும், வழமைபோல புலம்பெயர் மேடுக்குடி அரசியல் தலைமைகள் தமது பிரச்சார நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டதைக் காணக்கூடியதாக் இருந்தது.

மகிந்த ராஜபக்சவின் உரை ரத்தானது மக்களின் எழுச்சிக்குக் கிடைத்த தற்காலிக வெற்றி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எது எவ்வாறாயினும் இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் நிலையிலுள்ள ஐரோப்பிய அதிகார வர்க்கத்துடன் சமரச நோக்கிலேயே புலம்பெயர் நாடுகளின் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இரண்டு லட்சம் மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடியும் அது பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. இனப்படுகொலை நிறுத்தப்படவில்லை. ஆக, இந்தப் போராட்டங்கள் அதிகாரவர்க்கம் சார் அரசியலிலிரிந்து விடுவிக்கப்பட்டு புதிய மக்கள் அரசியலை நோக்கி நகர்த்தப்பட வேண்டும். பிரித்தானியாவில் மட்டுமல்ல ஏனைய மேற்கு நாடுகளிலும் மக்கள் பல இழப்புக்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிப்பவர்களுள் புலம்பெயர்ந்தோரும் அடங்குவர். இன்று மீண்டும் அவர்கள் போராடுகிறார்கள். தாம் போராடிப்பெற்ற உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் இப்போது போராடுகிறார்கள்.

ஆனால், அந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் எதிரான அவற்றை ஒடுக்கும் அதிகார வர்க்கத்தோடு கைகோர்க்கும் புலம்பெயர் மேட்டுக்குடி தமிழ அரசியல் தலைமைகள் போராட்டங்களை அடுத்த நிலைக்கு நகரவிடாமல் தடுக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் போராடுகின்ற உழைக்கும் மக்களோடு இணைந்து அவர்களது போராட்டங்களுக்கு ஆதரவான அரசியலை முன்வைத்திருந்தால் இன்று அவர்கள் தமிழர்களோடு தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

போர்க்குறற விசாரணைகளுக்கு உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அங்கீகரிக்கும் ஐக்கிய நாடுகளை நம்பியிருக்க வேண்டிய தேவை இல்லை. உலக மக்களோடு இணைந்து புதிய பொறிமுறையைக் கூட நாம் முன்வைத்திருக்க முடியும்.

புலம்பெயர் மேட்டுக்குடி அரசியல் தலைமைகள் அவர்களை தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் பேணிக் கொள்வதற்கு அடிப்படைவாத அடையாளங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மக்களை உணர்வுபூர்வமாகப் போராட்டங்களில் பங்கெடுக்க அழைப்பதற்குப் பதிலாக உணர்ச்சியூட்டும் தந்திரோபாயத்தை முன்வைக்கிறார்கள்.

நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆட்சேர்ப்பதற்காக சிங்கள மக்கள் சிலர் தமிழர்களைத் தாக்கிவிட்டார்கள் என்ற இனவாதப் பிரச்சாரம் இணையங்களில் மேற்கொள்ளப்பட.ன.

அப்படி எந்தச் சம்பவமும் நடக்காத நிலையில் அவமானகரமான இந்தச் செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. தமிழ்ப் பேசும் மக்கள் இனவாதிகள் அல்ல. அவர்கள் ஒடுக்கப்படுவதால் உரிமைக்காகப் போராடுகிறார்கள். இன்று உலகில் பெரும்பான்மை மக்கள் இதே உரிமைக்காககத் தான் போராடுகிறார்கள்.
அவர்களோடு இணைந்து கொள்ளும் இன்னொரு அரசியல் முன்வைக்கப்பட வேண்டும். அது பரந்துபட்ட மக்களை இணைக்கும், உழைக்கும் மக்களால் தலைமை தாங்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக அமைய வேண்டும்.

நிலைமை இவ்வாறிருக்க பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் அழிப்பிற்குப் பெயர்போன ஸ்கொட்லாண்ட் யார்ட் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் திட்டமிட்டுச் செய்திகள் பரப்பப்பட்டன.

இவ்வறான கொச்சைப்படுத்தல்களுக்கு மத்தியில் மக்கள் உணர்வுபூர்வமாகப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

எது எவ்வாறாயினும் மக்கள் சார்ந்த மாற்று அரசியல் முன்வைக்கப்படும்வரை ராஜப்கச மட்டுமல்ல ஆயிரம் இனக் கொலையாளிகள் முளைவிடுவார்கள், அவர்கள் மக்கள அழித்துவிட்டு அரசாட்சி நடத்துவார்கள்.

அந்த அழிப்பிலிருந்து அரசியல் வியாபாரிகள் உதித்தெளிவார்கள். இன்னொரு இனப்படுகொலையும், இன்னொரு அழிவும் தடுக்கப்பட வேண்டுமானால் புதிய போராட்ட அரசியலை முன்வைக்க இது பொருத்தமான ஆரம்பமாக அமையும்.

Exit mobile version