Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் COVID மூன்றாவது அலைக்கான அறிகுறிகளும் வெளிவரும் உண்மைகளும்

இந்திய கொரோனா வகை பிரித்தானியாவினுள் நுளைந்ததன் விளைவாக கடந்த வெள்ளி 31.05.20221 அன்று புதிதாக 3383 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். 10 நோயாளிகள் வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்துள்ளனர். இதே வேளை 01.06.2021 முதல் தடவையாக கோவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் மொத்த சனத்தொகையில் 74.3 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியையும் 43.7 வீதமாவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். ஜூன் 21ம் திகதி அனைத்துப் பொது முடக்கக் கட்டுப்பாடுகளையும் நீக்கலாம் என்ற பிரித்தானிய அரசின் திட்டட்த்திற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக அறிஞர் ரிம் கவோஸ் உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்திய வைரசின் பரவும் தன்மையும் இறப்பை ஏற்படுத்தும் விகிதமும் அதிகமாகவிருப்பதால், பொது முடக்க விதிமுறைகளை முற்றாகத் தளர்த்துவது தொடர்பாக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரல்கள் பல தரப்பிலுமிருந்து எழுகின்றன.

பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் பொது முடக்க நீக்கம் மீண்டும் பெருமளவிலான மரணங்களை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசியர் ரவி குப்தா, பிரித்தானியாவில் மூன்றாவது கொரோனா வைரஸ் அலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று ஸ்கை செய்தி நிறுவனத்திற்குக் குறிப்பிட்டார். தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவான போதிலும், நாளாந்தம் எண்ணிக்கை பெருகும் அளவின் அடிப்படையில் மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன எனக் குறிப்பிடும் அவர் இந்திய வகை கொரோரானா வைரசே இதற்கான காரணம் என்கிறார். தவிர, சூழலியல் ஆய்வாளர் ஜோர்ஜ் யூஸ்டஸ் உட்பட பலரும் தொற்றானது மீண்டும் பரவ ஆரம்பித்த நிலை ஜூன் 21ம் திகதி பொது முடக்கத்தை நீக்குவது தொடர்பாக அரசு மீளாய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

இதனிடையே, பிரித்தானிய பிரதமரின் பிரதான ஆலோசகராஅகவிருந்த டொமினிக் கம்மிங்ஸ் தனது ஆலோசகர் பணியிலிருந்து விடுவித்துக்கொண்டு அரசிற்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகிறார். சீனா போன்ற நாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என வெளிப்படையாக பிரித்தானியா உட்பட்ட அரச அதிகாரங்கள் கூறிவரும் நிலையில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்தே பிரதமரும் அரசும் உண்மைகளை மக்களுக்கு மறைத்து பொய்த் தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கம்மிங்ஸ் குறிப்பிடுகின்றார். தொற்று பரவ ஆரம்பித்த மார்ச் 2020 ஆரம்பத்தில் சமூக நோய் எதிர்ப்பு |herd immunity| ஒன்று உருவாகிவிடும் என்றால் தொற்றைக் கட்டுப்படுத்திவிடலாம் என அரசு நம்பியதாகவும் இதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பல்வேறு உயிர்ழப்புக்களுக்குக் காரணமாக அமைந்தது என்கிறார்.

முதியோர் விடுதியிலிருந்த நூற்றுக்கணக்கனவர்களை நோய் குணமடையாமலேயே மருத்துவ மனைகளிலிருந்து வீடுகளுக்கு அனுப்பியதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கம்மிங்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார். தெரிந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன்னால் சாட்சியமளித்த அவர் பல்வேறு ஆதாரங்களையும் முன்வைத்தார்.

இந்தியா இலங்கை போன்ற பின் தங்கிய சமூக அமைப்பைக் கொண்டுள்ள நாடுகளில் மட்டுமன்றி, தொழில் வளர்சியடைந்த நாடுகளிலும் அரசுகள் சர்வாதிகார அமைப்பாக மாறிவருவது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் முடிவிற்கு முன்னறிவிப்பாகும்.

Exit mobile version