மக்களின் சிந்தனையை மாற்றுவதில் இப் பல்தேசிய நிறுவனங்களின் பிரச்சராச் சாதனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.
பிரித்தானியாவில் இரண்டு பிரதான கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வருவதுண்டு. வெஸ்ட் மினிஸ்டர் ஜனநாயகம் என்று உலகம் முழுவதும் ‘போற்றப்படும்; பிரித்தானியாவின் ஜனநாயகத்திற்கு இந்த இரண்டு கட்சிகளைத் தவிர வேறு தெரிவில்லை. இவை தவிர இக் கட்சிகள் ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்வதற்கு பிரித்தானிய சுதந்திரக் கட்சி(UKIP) போன்ற இனவாதக் கட்சிகளும், லிபரல் டெமோகிரட்(LIBDEM) போன்ற முதலாளித்துவத்தின் தீவிர போக்குடன் ஆங்காங்கு முரண்பட்டுக்கொள்கின்ற கட்சிகளும் தேவைப்படுகின்றன.
இலங்கையில் பேரினவாதிகளுக்கு, தீவிரவாதப் பாசிசக் கட்சிகளான ஹெல உறுமையவும் தமிழ் நாட்டில் இனவாதப் பாசிசக் கருத்துக்களை விதைக்கும் சீமான் போன்றோரும், இந்தியாவில் இந்துத்துவ பாசிசத்தை உட்செலுத்தும் பால்தக்ரே போன்றோம் அதிகாரவர்க்கத்திற்குத் அவசியமாகிறது.
UKIP முன்வைக்கும் நிறவாதத் தேசிய வெறிக்கு எதிராக இதுவரை எந்தக் கட்சியும் காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கவில்லை. தொழிற்கட்சியும்(Labour) பழமைவாதக் கட்சியும்(Conservative) வெளி நாட்டவர்களுக்கு எதிரான தேசிய வெறியுடன் கூடிய கருத்துக்களை முன்வைக்கும் UKIP இடமிருந்து கடன்வாங்கி தமது கருத்துக்களாக புதிய வடிவில் முன்வைக்கின்றன.
ஆக, பிரித்தானியாவில் வாழ்கின்ற ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் எதிரானவையே இப் பாராளுமன்றக் கட்சிகள்.
தீவிர வலதுசாரிக் கட்சிகளான ரோரிக் கட்சி போன்ற கட்சிகள் ஆட்சி நடத்தும் காலங்களில் மக்கள் நலத்திட்டங்களை நீக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை கீழ் நிலைக்குக் கொண்டு செல்வார்கள். சிக்கன நடவடிக்கை, கடுமையான சட்டங்கள், இராணுவ மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த தீவிர வலதுசாரிக் கட்சிகளால் மக்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்படுவார்கள். மக்கள் அரசுகளுக்கு எதிராகப் போராடத் தலைப்படுவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களைத் தற்காலிகமாகச் சமாதானப்படுத்துவதற்காக இடதுசாரிக் கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் மென்போக்கு வலதுசாரிகள் ஆட்சியமைத்துக்கொள்ள அதிகாரவர்க்கம் துணை செல்லும்.
முன்னர் நடமுறைப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைத் திட்டங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல், புதிதாக மக்கள் நலத்திட்டங்களைச் சீர்செய்யப் போவதாக நாட்களைக் கடத்திய பின்னர் மீண்டும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொள்ளும்.
தீவிரப் போக்குடைய வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் கட்சி மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டுள்ள நிலையில், தொழிற்கட்சிக்கு பல்வேறு நிறுவனங்களின் பணக்காரர்கள் நன்கொடை வழங்க ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியவின் மிகப்பெரும் வங்கிகளில் ஒன்றான HSBC தனது தலைமையகத்தை மாற்றிக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. பழமைவாதக் கட்சியின் அரசியல் கொள்கையே இதற்குக் காரணம் என தேர்தல் காலத்தில் கூறியதும் தொழிற்கட்சி அதனைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளது.
நிதி நிறுவனங்களோடு தொடர்புடைய பல புள்ளிகள் தொழிற்கட்சிக்குப் பணம் வழங்க ஆரம்பித்துள்ளனர். தொழிற்கட்சியின் வாக்கு நிரந்தர வாக்கு வங்கியான தொழிற்சங்கங்கள், மற்றும் வெளி நாட்டவர்கள், வறிய நிலையிலுள்ளவர்கள் போன்றோரின் வாக்குகளைத் தவிர மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதியைக் கையகப்படுத்தினாலே வெற்றி அக்கட்சிக்குத்தான்.
இறுதியாகக் கிடைக்கும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழிற்கட்சி 35 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 33 வாக்குகள் பழமைவாதக் கட்சிக்கும், 13 வீதம் UKIP இற்கும், 11 வீதம் ஏனைய கட்சிகளுக்கும், 8 வீதம் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கும் கிடைக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.
இதில் எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் 50 வீதத்திற்கு மேலனவர்களின் விருப்பிற்கு மாறாக மிகுதிப்பேர் ஆட்சி செய்யும் நிலையே தோன்றும். இதனையே ஜனநாயகம் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.
இரண்டு பிரதான கட்சிகளும் ஏறக்குறைய சம அளவிலான வாக்குகளையே பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இரண்டு கட்சிகளுக்குமே ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனால் சிறிய கட்சிகளுடன் பேரம் பேசியே கட்சிகள் ஆட்சியமைக்கும் நிலை தோன்றும். அவ்வாறான ஆட்சியொன்றில் நிறவாதக் கட்சியான UKIP ஆட்சியில் பங்காற்றி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும். அவ்வாறான அரசியல் அங்கீகாரம் பிரித்தானிய அரசியல் வழமைபோல இழையோடும் பாசிச அரசியலை வலுப்படுத்தும்.
முதலாளித்துவத்தின் இறுதி வடிவம் பாசிசம் என்பது உலகம் முழுவதிலும் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அரச பாசிசத்திற்கு மக்களைப் இசைவாக்கமடையச் செய்யும் தொடர் ஒழுங்கு ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என ஆங்காங்கே வாதப் பிரதிவாதஙகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.
முழு உலகிலும் போராடும் மக்கள் மத்தியில் தமிழர்கள் என்றால் பிற்போக்குவாதிகள் என்ற விம்பமே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமிழ்த் தலைமைகள் வாக்குக் கட்சிகளின் அடியாள் படைகள் போன்று செயற்படுவதே இதன் பிரதான காரணம். பிரித்தானியாவில் வாழ்கின்ற ஏனைய போராடும் மக்கள் தலைமைகள் தமிழர்களின் தலைமைகள் போன்று பிற்போக்கானவை அல்ல. போராட்ட அமைப்புக்களோடு இணைந்து தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றன. வாக்களிப்பதற்கும் துண்டுப்பிரசுரம் வீசுவதற்கும் அவர்கள் தங்கள் மக்களைப் பயன்படுத்துவதில்லை.
இதனால் பலஸ்தீனியர்களும், குர்தீஸ் மக்களும், இன்னும் தமது உரிமைகளுக்காகப் போராடும் நூற்றுக்கணக்கான அமைப்புகளும் தன் நம்பிக்கையோடு அடிமைகளாகப் பணிந்து போகாமல் வாழ்வதற்கு அவர்களின் தலைமைகளின் அரசியலே பிரதான காரணம்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவை பல்தேசிய நிறுவனங்களின் நலன்களின் அடிப்படையிலேயே செயற்படும். டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்று தமிழ்க் குழந்தைகளுக்குப் பாலூட்டிவிட்டு வந்தாலும் அவர்களது கொள்கைத் திட்டத்தை மாற்றும் அதிகாரம் தமிழர்களிடம் இல்லை. இக்கட்சிகளோடு ஒட்டியும், உறவாடியும், கெஞ்சியும் கூத்தாடியும் இதுவரை தமிழ்த் தலைமைகள் எதனையும் சாதித்ததில்லை. ஆக, தேர்தல் காலத்திலாவது எமது நண்பர்களை இனம்காணுவதும் புதிய அரசியலை முன்வைப்பது அவசியமானது.
பிரித்தானியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உலகம் முழுவதும் நிலைகொண்டுள்ள இந்த ஜனநாயகம் இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களைத் தெருத்தெருவாகக் கொன்று போட்டுள்ளது. இதனால்தன் புதிய ஜனநாயக முறைமை ஒன்று மக்களுக்குத் தேவைப்படுகிறது.