பிரான்ஸில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரூ.565 கோடி பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள பணத்தைக் கண்டறிந்து மீட்பதற்காக இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை இந்தியா, 84 நாடுகளுடன் செய்து கொண்டுள்ளது. அது தற்போது பலனளிக்கத் துவங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரூ.565 கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ள தகவல் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கணக்கில் வராத இந்தப் பணம் 219 வங்கிக் கணக்குகளில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. ரூ.181 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ள தகவலும் கிடைத்துள்ளது. இத்தகவலை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் மத்திய நேர்முக வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக 30,765 தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சி.பி.டி.டி. அதிகாரிகள் கூறினர்.