Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன்-துசரா பீரிஸின் திரைப்படம்:யமுனா ராஜேந்திரன்

 I

பிரபாகரன் (Pirabakaran : in sihalese language : 2007) திரைப்படம் அதனது தகுதிக்கும் மீறிய விளம்பரம் பெற்ற திரைப்படமாக இருக்கிறது. தமிழகத்தில் சென்னையின் பிரசாத் ஸ்டூடியோவில் இந்தத் திரைப்படம் பிராஸஸிங்கில் இருந்தபோது, அதனது இயக்குனர் துசரா பீரிஸ், தமிழக திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் குழவினரால்  தாக்கப்பட்டார். உடைகள் கிழிபட்டு இரத்தக் காயப்படுத்தப்பட்ட அவர் மருத்துவமனையில் மார்பின் குறுக்கே உடலுக்குக் கட்டுப் போட்டபடியிலான போஸில் தமிழகப் பத்திரிக்கைகளுக்கும் இலங்கைப் பத்திரிக்கைகளுக்கும் நேர்முகங்கள் கொடுத்தார்.

பிரபாகரன் படத்தின் பிரதிகள் சென்னையிலிருந்து வெளியேறக் கூடாது என்று சீமான் தலைமையிலானவர்கள் சொன்னார்கள். இந்தியாவின் இலங்கைத் தூதரான அம்ஸா பிரபாகரன் திரைப்பட விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டதனையடுத்து இது சட்டப் பிரச்சினையாகவும் நாடுகளுக்கு இடையிலான இணக்கப் பிரச்சினையாகவும் ஆனது.

உலகெங்கிலும் இந்தத் திரைப்படத்தினை திரையிடுவதனைத் தடுப்பதே தமது நோக்கம் எனவும் சீமான் ஆவேசமாகப் பேட்டிகள் கொடுத்தார். கனடாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டபோது, திரையிடலைத் தடுப்பதற்கான முயற்சிகளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்கொண்டார்கள். தாராளவாத முதலாளித்துவ சமூகமான கனடாவில் இவ்வாறான முயற்சிகளையும் தாண்டி இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது. இலங்கையிலும் இந்தத் திரைப்படம் இலங்கை அரசினதும் இலங்கை ராணுவத்தினரதும் முழுமையான ஆசியுடன் திரையிடப்பட்டது. 

திரைப்படம் எனும் அளவில் எந்தத் திரைப்படத்தையும் திரையிடுவதைத் தடைசெய்யக் கோருவதும், குறிப்பிட்டதொரு சமூகக் குழு சட்டத்தைத் தன்கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் இறங்கி அந்தத் திரைப்படத்தினை அழிக்க முனைவதும் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும் என்பதற்குப் பிரபாகரன்  திரைப்படம் தொடர்பான இயக்குனர் சீமான் குழுவினரது ஆவேசமான எதிர்ப்பே சான்றாகிறது.

திரைப்படத்தை அழிப்பது அல்லது எரிப்பது என்பதற்கு மாறாக அதனைக் குறித்த செறிவான விமர்சனங்களை முன்வைப்பதே சரியான நிலைபாடாக இருக்கும். இட்லரின் காலத்தில் ஜெர்மனியில் எடுக்கப்பட்;ட திரைப்படங்களை நேசநாட்டுப் படையினர் அழிக்கவில்லை. ரஸ்யர்களும் அழிக்கவில்லை. இட்லர் காலத்தில் அவரது செல்லப் பெண்ணான இயக்குனர் லெனி ரீப்சந்தால் எடுத்த திரைப்படங்கள், உறுதி (The Will)  போன்றன, ‘இட்லர் எவ்வாறாக ஜெர்மானிய மக்களை மூளைச் சலவை செய்தார், தனது நாசிச் சித்தாந்தத்தை எவ்வாறு உள்னதமானதாக, பிரம்மாண்டமானதாகச் சித்தரித்தார்’ என்பதற்கான வரலாற்று ஆவணங்களாக இருக்கிறது. இன்றளவிலும் அத்திரைப்படங்கள் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாகவும் போதிக்கப்படுகிறது.

திரைப்படங்கள் வெளிப்படுத்தும் கருத்தியல் அல்லது அரசியல் எத்தகையதாயினும் அதனை வன்முறையினால் அழிக்க நினைப்பது என்பது திரைப்படக் கலையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்பவர்களால் ஒப்பமுடியாத நிலைபாடாகும். பிரபாகரன் திரைப்படத்திற்கானதொரு எதிர்மறையான விளம்பரத்தையே உலகளாவிய அளவில் சீமான் குழவினர் உருவாக்கிக் கொடுத்தார்கள். அறுதியில் பிரபாகரன் திரைப்படத்தை அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அந்தத் திரைப்படம் பல பிரதிகள் எடுக்கப்பட்டு இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும் திரையிடப்பட்டது.

பிரபாகரன் திரைப்படத்தின் சிங்கள மொழிப் பிரதி இணையத்திலும் முழுமையாக வெளியானது. நான் பார்த்த சிங்கள மொழிப்படத்தை அதனது காட்சியமைப்பின் அடிப்படையில் புரிந்து கொள்ள எனக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை. பிரபாகரன் திரைப்படம் நேர்த்தியான ஒளிப்பதிவில், நேர்த்தியான காமெராக் கோணங்களில் எடுக்கப்பட்டதொரு, நேர்த்தியான தென்னிந்திய உணர்ச்சிகர சினிமாவின் பண்புகள் கொண்ட திரைப்படம்.  திரைப்படத்தைப் பற்றி அதனது வசனங்களுடன் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு கொழும்பில் வாழ்ந்த தமிழ் நண்பரொருவர் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தார்.

II

பிரபாகரன் படத்தின் திரை விழத்துவங்கும்போது, குண்டுவைப்பது தொடர்பான விடுதலைப் புலிகள் இடையிலான வாக்கி டாக்கி உரையாடலில்தான் துவங்குகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே குண்டுவெடிப்புடன்  துவங்குகிறது. அழிவும், சிதறிக் கிடக்கும் சிங்கள மக்களின் பிணங்களும் காண்பிக்கப்படுகிறது. இடைக்கால முகாம்களில் தங்கியிருக்கும் சிங்கள வெகுமக்களைப் புலிகள் கொலை செய்கிறார்கள். நள்ளிரவில் கிராமங்களில் புகுந்து எல்லையோரத்தில் வாழும் சிங்கள விவசாயிகளை விடுதலைப் புலிகள் வெட்டிக்கொல்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் போராளிகளால் சிங்களவர்களும் வயதில் மூத்தவர்களுமான பெரியவர்கள் நேருக்கு நேர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். விடுதலைப் புலிகள் இருப்பிடத்தின் மீது இலங்கைப் படையினர் குண்டுபோட்டு குழந்தைப் போராளிகள் இறந்துவிட, அதனைப் பள்ளிக் கூடக் குழந்தைகள் இறந்ததாக ஐரோப்பியர்களை அழைத்துப் புலிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இதுவெல்லாம் பிரபாகரன் திரைப்படத்தின் காட்சிகள்.

விடுதலைப் புலிகளின் படுகொலைகளால் சிங்களக் கிராமத்தின் வெகுமக்கள் வெகுண்டு போகிறார்கள். விடுதலைப் புலிகள் மாதிரி கொடும்பாவி செய்து, அருகில் சவப்பெட்டியையும் வைத்து அதனை அவர்கள் கொழுத்திக் கோஷமிடுகிறார்கள். ‘நோர்வே அரசு ஒழிக. அரசு சாரா அமைப்புக்கள் ஒழிக’ என்பது அவர்களது கோஷமாக இருக்கிறது, இலங்கையின் அரசு சாரா அமைப்புக்களை விடுதலைப் புலி முகவர்களாக அவர்கள் கருதுகிறார்கள் என்பதற்கான சாட்சியமாக இக்காட்சி அமைகிறது. குழந்தைப் போராளிகளின் சாவை பள்ளிக் குழந்தைகளின் சாவாகக் காட்டுவதில் விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசு உதவுகிறது என்பது குறித்த கண்டனமாகவும் இக்காட்சிகள் அமைகிறது.

திரைப்படத்தின் கதை எல்லையோரக் கிராமங்கள் எனப்படும் இடங்களில் நடக்கிறது. தமிழர்கள் செரிந்து வாழும் இடங்கள் அருகிவர, அதுபோல சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதிகளும் அருகி வர, தமிழர்களும் சிங்களவர்களும் பிறிதொருவர் பிரதேசத்தில் நுழைகிற மாதிரியான ‘இடைப்பட்ட வனப் பிரதேசம்’ என இதனை விளக்கலாம். தமிழர் பிரதேசங்களுக்குள் சிங்களவர் குடியிருப்புக்களை விஸ்தரிக்கும் அடையாளமாகவும் இதனைக் குறிப்பிடலாம். சிங்களவர் குடியேற்றக் கிராமங்கள் எனவும் இதனைச் சுட்டலாம்.

எல்லையோரக் கிராமங்கள் பற்றி ஏற்கனவே இரண்டு திரைக் கலைஞர்கள் படமெடுத்திருக்கிறார்கள். சுதத் மகாதிவேவா மற்றும் அசோகா ஹந்தஹமா அக்கலைஞர்கள். சிங்கள ராணுவத்தினரின் பிரசன்னமும், ராணுவத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கிராமத்தின் ஆண்கள் பெண்களது வாழ்வும், அவர்தம் மதிப்பீடுகளின் வீழ்ச்சியும் பற்றியதாக அப்படங்கள் இருந்தன. இதே வகையிலான கதைக்களனை எடுத்துக் கொண்ட பிறிதொரு படமாக சரோஜா இருந்தது. முன்னிரு திரைப்படங்களும் சிங்கள அரசையும் படையினரையும் விமர்சிக்க, சரோஜா திரைப்படமும், பிரபாகரன் திரைப்படமும் சிங்கள அரசையும், சிங்கள ராணுவத்தையும் கொண்டாடுவதாக இருக்கின்றன.

பிரபாகரன் திரைப்படத்தின் கதை இது : எல்லையோரக் கிராமம் ஒன்றின் சிங்கள விவசாயி ஒருவன், தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டிருக்கிறான். அந்தத் தமிழ்ப் பெண்ணின் தகப்பனார் தமிழர். தாய் சிங்களப் பெண். அவளது பெற்றோர் 1983 கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள். அனாதையாக வளர்கிறாள். பிற்பாடு சிங்கள விவசாயியை மணக்கிறாள். அப்பெண் நிறைமாதக் கர்ப்பிணியாகவும்  இருக்கிறாள். அவளது பெயர் கமலினி. சிறுவனான அவளது சகோதரனின் பெயர் பிரபாகரன். பிரபாகரனை அந்தப் பகுதியின் விடுதலைப் புலிகளுக்குப் பொறுப்பானவர் பள்ளிக் கூடத்தில் இருந்து கடத்தி, பலவந்தமாகப் புலிகள் அமைப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் பள்ளிக் கூடமொன்றில் புகுந்து பலவந்தமாகச் சிறுவர்களைத் தமது பயிற்சிக்கென கடத்திச் செல்லும் காட்சியும் படத்தில் இருக்கிறது.

கமலினியின் கர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவளைத் தற்கொலைப் போராளியாகப் பாவிக்க விடுதலைப் புலிகள் முடிவு செய்கிறார்கள். ‘இனக் கலவரத்தில் கொல்லப்பட்ட தனது பெற்றோர்களுக்காக சிங்களவர்களைப் பழிவாங்க வேண்டும்’ என கமலினியிடம் விடுதலைப் புலிகள் போதிக்கிறார்கள்.  கர்ப்பிணிகளை இலங்கை ராணுவத்தினர் சோதனையிடுவதில்லை. பிரபாகரனையும் அவன்மீதான சகோதரியினது பாசத்தையும் பகடைக் காயாக வைத்து, மருத்துவமனையில் தாக்குதல் நடத்துவதற்காக கமலினியைத் தற்கொலைப் போராளியாகப் பாவிப்பது விடுதலைப் புலிகளினது அப்பகுதிப் பொறுப்பாளரது திட்டம்.

கொஞ்சதூரம் வனத்தினுள் நடந்தால் எவரும் தமிழ்ப் பகுதியை அடைந்துவிடலாம். கமலினியைக் கட்டாயப்படுத்தி அங்கு வரவழைக்கும் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் தற்கொலைக் குண்டையும் கமலினியிடம் ஒப்படைக்கிறார். கமலினி விடுதலைப் புலிகள் முகாமில் தங்கி தனது தம்பி பிரபாகரனை உச்சிமோந்து பாசம் செலுத்தவும் செய்கிறாள். குழந்தை பிறந்த பின், தான் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுகிறேன் என கால்களைப் பிடித்து புலிகளின் பொறுப்பாளரிடம் மன்றாடுகிறாள் கமலினி. ‘கர்ப்பம்தான் தமது தாக்குதலுக்குப் பயன்படும்’ என்கிறார் பொறுப்பாளர்.

‘தம்பியின் பொருட்டு அவள் தற்கொலையாளியாக மாறவேண்டும்’ என விடுதலைப் புலிகளிடமிருந்து நிர்ப்பந்தம் ஒரு புறம், நிறைமாதக் கர்ப்பிணியாக அவளுக்கும் அவளது கணவனுக்கும் தமது பிறக்கப் போகும் குழந்தையின் மீதான பாசம் ஒரு புறம். இதனிடையில் கமலினி தனக்குள்ளாகவே ஒரு உரையாடலை நிகழ்த்துகிறாள். ஊருக்கு வெளியில் உள்ள ஒற்றை மரத்தினடியில் வந்து இருந்தபடி, தனியே அரற்றவதும் அழுது குழறுவதும் அவளது வாடிக்கையாக இருக்கிறது. கனவா இது நனவா எனத் தெரியாதபடி இக்காட்சிகள் பிரதான கதைக்கு வெளியில், அழுத்தமான  பழுப்புநிறத்தில் வருகின்றன.

III

கமலினியின் துயருக்கும் மனப் போராட்டத்திற்கும் ஒரு விடை கிடைக்கிறது. விடுதலைப் புலிகளின் கொடுமையிலிருந்து தப்புவதற்கு குழந்தைப் போராளிகள் முடிவு செய்கிறார்கள். தம் வசமிருந்த கைதிகளின் உதவியினால் அவர்கள் தப்புவதற்கு முயல்கிறார்கள். ராணுவத்தினிடம் சரணடையப் போகும் பிரபாகரன் உள்ளிட்ட சிறுவர்கள் இலங்கை ராணுவத்தினரால் அல்லது விடுதலைப் புலிகளினால் வீசப்படும் வெடிகுண்டுகளில் சிக்கி மடிகிறார்கள். கமலினி படுகொலை செய்யப்பட்ட தனது சகோதரன் பிரபாகரனின் உடலை மருத்துவமனையின் பிணவரையில் சென்று பார்க்கும் காட்சியின் அழுகையும் கதறலும் விஸ்தாரமான சோக இசையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது.

கமலினியைப் பொறுத்து அவளது தம்பி விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதையினிடையில் வாழ்ந்திருக்கிறான். அவன் மீதான தனது பாசத்தை வைத்தே புலிகள்  கமலினியைத் தற்கொலைக் குண்டுதாரியாக வற்புறுத்தி வந்திருக்கிறார்கள். தனது சகோதரன் பிரபாகரன் மரணமடைந்துவிட்ட பின்னால், விடுதலைப் புலிகளின் நிர்ப்பந்தத்தை மீறுவதற்கான தடைகள் என ஏதும் அவள் முன் இல்லை. தனது சகோதரனின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டும் எனும் உணர்வு மட்டுமே கமலினியிடம் மிஞ்சியிருக்கிறது.

கமலினி முடிவுக்கு வந்துவிட்டதைப் போலவே விடுதலைப் புலிகளின் பகுதிப் பொறுப்பாளரும் கமலினியைக் குறித்து ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டிருந்தார். முன்னொருபோது கமலினியின் சகோதரன் பிரபாகரன் முன்னின்று நடத்திய பேருந்து வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றில் சிங்கள வெகுமக்கள் தொகையாக மரணமடைகிறார்கள். மரணமடைந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் மருத்துவமனைக்கு சிங்களப் படையினர் எடுத்து வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் தொடுக்குமாறு கமலினி அனுப்பப்படுகிறாள்.

சாவின் ஓலத்தைப் பார்த்துக் கலங்கியபடி அமர்ந்திருக்கும் கமலினியின் மடியில் ஒரு பெண் குழந்தையை வைத்திருக்குச் சொல்லிவிட்டு, யாருக்கோ உதவி செய்ய அவசரமாக ஓடுகிறாள் ஒரு சிங்களப் பெண்மணி. கையில் குழந்தையுடன் இருக்கும் கமலினி தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுவதில்லை. இதனைக் கண்ணுறும் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் சலிப்புடனும் கசப்புடனும் தனது தோழனுடன் அந்த இடத்தை விட்டு கோபாவேசத்துடன் நகர்கிறார். கமலினி தன் சொல்படி நடக்க மாட்டாள் எனும் முடிவுக்கு அவர் ஏற்கனவே வந்துவிட்டார்.

கமலினி விடுதலைப் புலிகளின் நிர்ப்பந்தத்திற்காக செவிசாய்க்க முனைகிறாளேயொழிய, அவள் விடுதலைப் புலிகள் மீது கடுமையான சினம் கொண்டிருக்கிறாள்.  தனது கண்முன்பாகவே தன் அருகிலிருந்த மனிதர்கள் கொல்லப்படுவது அனைத்தையும் அவள் சாட்சியமாக இருந்து பார்க்கிறாள். விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டு, அவர்கள் கொடுக்கும் சன்மானங்களை ஏற்று, சிங்களக் கிராமத்து மக்களையும் இலங்கைப் படையினரையும் புலிகளுக்குக் காட்டிக்கொடுக்கும் சிங்களக் கிராமவாசியொருவனை, மனம் பிறழ்ந்தவன்போல் வேஷம் தரிக்கும் அவனை, கமலினி, விடுதலைப் புலிகளால் தனக்குக் கொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொல்கிறாள். தனது சகோதரன் பிரபாகரன் இறந்துவிட்ட நிலையில் இப்போது விடுதலைப் புலிகளின் பகுதிப் பொறுப்பாளரையும் அவள் கொல்ல நினைக்கிறாள்.

தனது சகோதரனின் உடலைப் பார்த்து கமலினி கதறும் காட்சிக்கு அடுத்த காட்சியில், கமலினி ஒரு பாதையோரக் கல்லில் சோர்வுடன் அமர்ந்திருக்கிறாள். அவ்வழியால் வரும் விடுதலைப் புலிகளின் பகுதிப் பொறுப்பாளர் வாகனத்தில் இருந்து இறங்கி, கமலினியிடம் ஒரு வெடிகுண்டுப் பொதியைக் கொடுக்கிறார். கமலினியைக் கொல்வதற்காக விடுதலைப் புலிகள் வைத்த, குறித்த நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டு. வாகனத்தில் அவர்களோடு பின்னிருக்கையில் ஏறுவதற்கு முனையும் கமலினி, வாகனத்தின் பின் பக்கத்தைச் சுற்றிப்போகும்போது, தன்னிடம் கொடுக்கப்பட்ட  வெடிகுண்டுப் பொதியை புலிகள் அறியாதவாறு வாகனத்தின் பின்புறம் வைத்து விடுகிறாள்.

சிறிது தொலைவு வந்தவுடன் கமலினியை வாகனத்திலிருந்து இறங்குமாறு பணிக்கும் பொறுப்பாளர், கமலினியின் கதவைத் திறந்து, அவளை கீழிறக்கிவிடவும் செய்கிறார். கமலினி திரும்பிப் பார்த்தபடி, எதிர்த்திசையில் நடக்கத் துவங்குகிறாள். வாகனத்திலிருக்கும் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் தனது சாகாக்களிடம் கெக்கலியிட்டுச் சிரித்தபடி தனது சந்தோஷத்தைப்  பகிர்ந்து கொள்கிறார். வாகனம் விரைகிறது. கமலினி நடக்கத் துவங்குகிறாள். கொஞ்சதூரம் போன வாகனம் தீப்பிழம்புடன், கரும்புகை சூழ வெடித்துச் சிதறுகிறது. கமலினி  திரும்பிப் பார்க்கிறாள். திரும்பி வாகனம் இருக்கும் திசை நோக்கி மெதுவாக நடக்கத் துவங்குகிறாள். திரைப்படம் முடிகிறது.
 
IV

பிரபாகரன் திரைப்படத்தில் இரு வரலாற்றுத் தரவுகள் மட்டுமே மெய்யாக இருக்கிறது. எல்லையோரக் கிராமங்களில் வாழ்ந்த சிங்கள வெகுமக்களை விடுதலைப் புலிகள் குரூரமாக வெட்டிப் படுகொலை செய்தார்கள் என்கிற நிஜமே ஒரு தரவு. குழந்தைப் போராளிகளை பலவந்தமாக அவர்கள் தமது படைகளில் சேர்த்தார்கள் என்பது பிறிதொரு தரவு.

தமது பிரதேசங்களை நோக்கிய அரசின் குடியேற்றங்களைத் தடுப்பதற்காக இத்தகைய கொலைகளை அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்திருக்கிறார்கள். புராடஸ்தாந்து குடியேற்றக்காரர்களை இவ்வாறு கத்தோலிக்கர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். ஆப்ரிக்க சமூகங்களில் இரு இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைமையில் இத்தகைய படுகொலைகள் நடந்திருக்கின்றன. இத்தகைய கொலைகளை எவரும் விடுதலைப் போராட்டத்தின் மூலோபாயமாக நியாயப்படுத்த முடியாது. இத்தகைய கொலைகள் இன்று இனக்கொலை நடவடிக்கையின் பகுதியாகவே புரிந்து கொள்ளப்படும். இந்த இரு தரவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு பிரபாகரன் படத்தில் துசரா பிரீஸ் கட்டமைக்கிற புனைவுகள் முற்றிலும் பொய்மைகள் நிறைந்ததாகும்.

நிஜத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது இரு சகோதரிகளினது பெயர்கள் விநோதினி மற்றும் தமிழினி என்பதாகும். துசரா பிரீஸ் இந்தப் படத்தில் வரும் பிரபாகரன் எனும் குழந்தைப் போராளியின் சகோதரியின் பெயரைக் கமலினி எனத் தேர்ந்தெடுத்திருப்பது தற்செயலானது இல்லை. திரைப்படத்திற்கான பெயர்ச்சூட்டலும், அதற்கு நேர்முரணான கதையமைப்பும், வரலாற்றைக் குழப்பும் நோக்கம் கொண்டவர் இயக்குனர் துசரா பிரீஸ் என்பதனை நமக்குத் தெளிவாகச் சொல்லிவிடுகிறது.

துஸரா பிரீஸ் ‘இலங்கைக்கான தேசபக்தியிலிருந்தே தான் இந்தத் திரைப்படத்தினை எடுத்திருப்பதாகவும்’ தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். பிரபாகரன் திரைப்படத்தினையும் அவர் இலங்கை ராணுவத்தினருக்குத்தான் ‘சமர்ப்பணம்’ செய்திருக்கிறார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் என்பது இரண்டு இனங்களுக்கு இடையிலானதாக நடந்து வருகிறது. ஆயுத மோதலில் விடுதலைப் புலிகளும் இலங்கை ராணுவத்தினரும் ஈடுபட்டிருக்கிறார்கள். இலங்கையின் வடகிழக்கில் பாரிய படுகொலைகளை இலங்கை ராணுவம் நிகழ்த்தி வந்திருக்கிறது. பாலியல் வல்லுறவுகளை நிகழ்த்தி வந்திருக்கிறது.

1983 ஜூலைக் கலவரத்தில் ஆயிரக் கணக்கில் ஆண் பெண் குழந்தைகளென தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லையோரக் கிராமங்களது பிரச்சினையும் இந்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாகவே எழுந்தது. இலங்கை  ராணுவம் விடுதலைப் புலிகளையும் வேட்டையாடுகிறது. தமிழ் வெகு மக்களையும் வேட்டையாடுகிறது. செஞ்சோலைக் குழந்தைகள் இல்லத்திலும், மாதா கோயில்களிலும் குண்டுபோடுகிறது. மரணங்களும் படுகொலைகளும் இரு இனங்களின் மத்தியிலும் அன்றாட யதார்த்தமாக இருக்கிறது.

தென்னிலங்கையில் போரின் விளைவாக அந்தச் சமூகத்தின் ஆண் பெண் உறவுகளில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. எல்லையோரக் கிராமங்களில் அந்தக் கிராமங்களில் பௌத்தமத அற மதிப்பீடுகள் அழுகி வீழ்ந்து கொண்டிருக்கிறது. பிரசன்ன விதானகே,ஹந்தஹமா, போன்றவர்கள் காட்டும் திரைப்பட யதார்த்தங்கள் இவையாகவே இருக்கிறது. துசரா பிரீஸ் படத்தில் சிங்கள சமூகம் பற்றிய இந்த எந்த யதார்த்தங்களும் இல்லை.

துசரா பிரீஸின் படத்தில் விடுதலைப் புலிகள் வரும் காட்சிகளில் எல்லாம் அவர்கள் மனநோயாளிகள் போலவே நடந்து கொள்கிறார்கள். அவர்கள் அனைவரையும் சித்திரவதைக்;கு உட்படுத்ததுகிறார்கள், அனைவரையும் வற்புறுத்துகிறார்கள். அவர்கள் சதா சத்தம் போட்டபடி பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். கண்ணில் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் – அவர்கள் அனைவருமே சிங்கள வெகுமக்கள் – சுட்டுக் கொல்கிறார்கள். இலங்கைப் படையினருடன் விடுதலைப் புலிகள் மோதுகிற மாதிரியிலான காட்சிகள் ஒன்று கூட படத்தில் இல்லை.

இலங்கை ராணுவத்தினர் தமிழ்ப் பிரதேசங்களில் நடத்துகிற வேட்டையைப் பற்றிய காட்சிகளும் படத்தில் இல்லை. பிரபாகரன் படத்தில் வரும் இலங்கையின் ராணுவ வீரர்கள், மருத்துவ மனைச் சிப்பந்திகள் போல அமைதிக் காரியங்களை மட்டும் செய்கிறார்கள். விடுதலைப் புலிகள் முகாம் மீது படையினர் இருளில் குண்டு போடுகிறார்கள். கொல்லப்பட்ட குழந்தைகள், குழந்தைப்; போராளிகள் என்கிறார் துசரா பிரீஸ். செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலையின் மீதான சந்தேகத்தை இதன்வழி எழுப்புகிறார் துசரா பிரீஸ்.

விடுதலைப் புலிகள் அப்பாவிகளான கிராமப்புறச் சிங்கள மக்களைக் கொல்வதைத் தவிர வேறு நோக்கமற்ற அரக்கர்கள் என்ற சித்திரத்தையே துசரா பிரீஸ் பிரபாகரன் படத்தில் முன் வைத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் செய்கிற கொலைகள் எல்லாம் ‘வெளிச்சத்தில், பகலில்’ நடக்கிறது. இலங்கைப் படையினர் செய்கிற கொலைகள் எல்லாம் ‘இருட்டில் நம் கண்களுக்குத் தெரியாமல் மங்கலாக’ நடக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்குமான மோதலை துசரா பிரீஸ் சித்திரித்திருக்கும் முறை இதுதான்.

இந்தத் திரைப்படத்தின் விஷமத்தனமான பகுதி என்பது அதனது பிரதான பாத்திரச் சித்தரிப்புக்கள்தான். சிங்களக் கிராமத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் அத்தனைக் கொலைகளின் இடையிலும் தமிழப் பெண்ணான கமலினியை ‘குறைந்த பட்சம் ஒருவர் கூட வெறுப்புடன்’ பார்ப்பதில்லை. கிராமவாசிகள் அனைவரும் அன்பின் வடிவமாக இருக்கிறார்கள். கமலினி விடுதலைப் புலிகளைக் கடுமையாக வெறுக்கிறாள். ‘சிங்களவர்களது கருணையில் நனையும் தமிழ்ப் பெண்’ என்பது கற்பனை. கனவில் மட்டுமே இது சாத்தியமாகும்.

சிங்களவர்களின் பாத்திரத்தை இங்கு ஒரு தமிழ்ப்பெண்ணை ஏற்கச் செய்கிறார் துசரா பிரீஸ். தமிழர்களுக்கு எதிராக ஒரு தமிழரை நிறுத்துவதன் மூலம் தனது விருப்பார்வத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் இயக்குனர். விடுதலைப் புலிகளுக்கு சிங்களக் கிராமவாசிகளை, படையினரைக் காட்டிக் கொடுக்கும் துரோகிக்குத் தமிழ்ப் பெண்ணான கமலினி தண்டனை கொடுக்குமுகமாக அவனைச் சுட்டுக் கொள்கிறாள். இப்படி அடுக்கடுக்கான புனைவும் விருப்பார்வமும் நிறைந்த காட்சிகளால் அடைபட்டிருக்கிறது பிரபாகரன் திரைப்படம்.

பிரபாகரன் திரைப்படத்தில் போர் அறம் எனும் வகையில் முன்வைக்கப்படும் இரண்டு பிரச்சினைகளை வைத்து முற்றிலுமான ஒரு கற்பிதமான படத்தை துசரா பிரீஸ் எடுத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் எல்லையோர மக்களைப் படுகொலை செய்தார்கள் என்பது ஒரு தரவு. விடுதலைப் புலிகள் குழந்தைப் போராளிகளைப் பலவந்தமாகப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது பிறிதொரு தரவு. விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறவர்களும், சிங்களவர்களின் இனக் கொலையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் கூட மறுக்க முடியாத இரு தரவுகள் இவை. இவையிரண்டும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு தரவுகளையும் வைத்துக் கொண்டு இலங்கைப் படையினரோ அல்லது இலங்கை அரசோ புனிதர்கள் ஆகிவிடமுடியாது.

பிரபாகரன் திரைப்படத்தில் சிங்கள வெகுமக்களும் அவர்களைப் பாதுகாக்கிற தேவதூதர்களாக இலங்கை ராணுவத்தினரும் காட்டப்படுகிறார்கள். எல்லையின் பிறிதொருபுறத்திலுள்ள விடுதலைப் புலிகளை மட்டும்தான் துசரா பிரீஸ் காண்பிக்கிறார். விடுதலைப் புலிகளோடு உறவு கொண்ட தமிழ் வெகுமக்களை அவர் காண்பிக்கவேயில்லை. அதனை அவர் காண்பித்திருக்கக் கூடுமானால், இலங்கைப் படையினரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, அம்மக்கள் விடுதலைப் புலிகளை தேவதூதர்கள் போலக் கருதியிருந்திருப்பதனை துசரா பிரீஸ் காண்பித்திருக்க வேண்டியிருந்திருக்கும்.  இக்காரணம் கருத்தித்தான் துசரா பிரீஸ் தனது காமெராவை சிங்களப் பக்கத்தில் மட்டுமே திருப்பியிருக்கிறார்.

ஈழத் தமிழ் மக்களும் அவர்களது துயரும் துசரா பிரீஸின் காமெராவுக்குள்ளும் வரவில்லை, அவரது சிந்தைக்குள்ளும் வரவில்லை. அவரால் காண்பிக்காது விடப்பட்ட அந்தத் தமிழ் மக்களின் அனுபவங்கள் பிரபாகரன் படத்தினது கதையினைக் காட்டிலும் கோடி கோடிக் கொடுங்கதைகளைச் சொல்ல முடியும். அதனைத்தான் பிரபாகரன் திரைப்படத்தைப் பாரக்கிற, மனசாட்சியுள்ள எவரும் இன்று தேடிச் செல்ல வேண்டும்.

 

Exit mobile version