Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரஞ்சுப் போராட்டங்கள் : புரட்சிக்கான புதிய அடித்தளம்?

முப்பது லட்சம் பிரஞ்சுத் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் பொலீஸ் அடக்குமுறைக்கு மத்தியில் தெருவில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள். மக்கள் போராடிப்பெற்ற ஓய்வூதிய உரிமையைப் பறித்தெடுக்கும் வகையிலான பிரஞ்சு ஜனாதிபதி நிக்கொலா சார்க்கோசி அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக பிரஞ்சு நாட்டின் உழைக்கும் மக்கள் இன்று ஐந்தாவது நாளாகப் போராடுகின்றனர். பிரஞ்சுக்காரர்கள் 60 வயதில் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே இதுவரை நடைமுறையில்லிருந்த சட்டமாகும்.

நிக்கோலா சார்க்கோசியின் வலதுசாரி அரசு அதனை 62 ஆக உயர்த்துவதற்கும், முழுமையான அரச ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 67 ஆக உயர்த்துவதற்குமான முன்மொழிவைச் சட்டபூர்வமாக்க முற்பட்ட வேளை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஓய்வூதியத்திற்கான புதிய திட்டம் ஏற்கனவே பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வய்க்கிளமை 18ம் திகதி ஒக்டோபர் மாதம் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் ஒன்றை மேலும் அறிவித்துள்ளன. இதே வேளை பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் அரச அதிகாரங்கள் பிரஞ்சு மக்கள் வேலைக்கு போக விரும்பாத சோம்பேரிகள் என்றும் அதன் வெளிப்பாடாகவே இந்த வேலை நிறுத்தங்கள் என்று பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

பிரித்தானியாவில் பெரியளவின எதிர்ப்புக்கள் எதுவுமின்றி ஓய்வூதியத்திற்கான வயது 65 என்பதை ஏற்கனவே சட்டமூலமாக்கியிருந்தனர். இப்போது அதனை 66 ஆக உயர்த்துவதற்கு புதிய பழமைவாதக் கட்சியின் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. பல்கலைக்கழகங்களை முழுமையான வியாபார நிறுவனங்களாக மாற்றும் திட்டம் பிரித்தானிய அரசால் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ளது.

இதே வேளை, குழந்தைகளுக்கான மானியத்திட்டமும் மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இலவச மருத்துவம் உட்பட பல துறைகள் தனியார் மயமாக்கும் திட்டங்கள் குறித்து நாளாந்தம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோற்றுப் போன முதலாளித்துவப் பொருளாதார முறையில் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில், பிரஞ்சுத் தொழிலாளர்களின் விட்டுக்கொடாத போராட்டங்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பியக்கங்கள் உருவாகிவளர்வதற்கான முன்னுதாரணமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பிரஞ்சு மக்களின் 70 வீதமானோர் வேலை நிறுத்தங்களுக்கும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.

பிரஞ்சு பாராளுமன்ற வாத போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஜே.ரி போராட்டங்களில் முன்னணியில் திகழும் தொழிற்சங்களில் ஒன்றாகும். கட்சியின் தலைமைக்கு எதிராக புரட்சிக்கான அடிப்படைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் இது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் எனவும் கடந்தவார பிரித்தானிய ஊடகமான “ஈவிங் ஸ்டான்டர்ட்” கருத்து வெளியிட்டிருந்தது. கம்யூனிட்கட்சி உறுப்பினர்கள் பலர் சே குவேராவின் படங்களுடனனான மேலங்கிகளை நேற்றைய ஊர்வலத்தில் அணிந்திருந்தனர். முன்னை நாள் பிரன்சுப் பிரதமர் டொமினிக் வில்பன் கருத்துத் தெரிவிக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டமும், வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியும், அரச அதிகாரத்தின் அடக்குமுறையும் பிரான்சில் புதிய சமூகப்புரட்சியைத் தோற்றுவிக்கும் “அபாயம்” உள்ளதாக எச்சரித்துள்ளார். பிரஞ்சு தேசம் உருவாகி வளர்ந்த காலப்பகுதி முழுவதும் உரிமைக்கான மக்கள் போராட்டங்களினூடாகவே வளர்ச்சிபெற்றுள்ளது.

பிரஞ்சு தேசத்தின் உழைக்கும் மக்கள் பல போராடப் பயிற்றப்பட்டவர்கள். 1789 ஆம் ஆண்டிலிருந்து 1793 ஆம் ஆண்டுவரை நடந்த போராட்டங்கள், 1848 இல் நடந்த பரிஸ் கம்யூன் போராட்டம், 1936 இலும் 1968 இலும் நிகழ்ந்த வேலை நிறுத்தங்கள் ஆகியன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 70 களில் உருவான நெருக்கடியின் போது முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறையை காப்பற்றுவதற்காக தோற்றம்பெற்ற நவ-தாராளவாதமும் அதன் தொடர்ச்சியான உலக மயமாதலும் இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. மேற்கு நாடுகள் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலம் ஐரோப்பாவில் போராட்டங்களுக்கான காலகட்டம் என மதிப்பிடப்படுகிறது. ஏற்கனவே இங்குள்ள இடதுசாரி அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமை மறு சீரமைக்கப்பட்டோ அன்றி புதிய தலைமையின் உருவாக்கத்திலிருந்தோ உருமைக்கான போராட்டம் சமூக மாற்றத்திற்கான போராட்டமாக மாற்றமடையும் சமூகப் புறச்சூழல் உருவாகியுள்ளது.

சில ஆண்டுகளின் முன்னர் வெறுக்கப்பட்ட மார்க்சும் மார்க்சிசமும் இன்றைய ஐரோப்பிய புதிய சூழலில் மக்களின் தத்துவங்களாக மீட்சிபெற்றுள்ளன என்கிறார் ஆய்வாளர் டொமினிக் லேவிஸ். ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளும் புதிய உலக ஒழுங்கு விதியும், புதிய பணச்சுற்று முறையும் உருவாக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறிவருகின்ற போதிலும் அதற்கான வழிமுறையை அவர்கள் இன்னும் கண்டறியவில்லை. முன்னைய நெருக்கடிகளைப் போலன்றி இன்றைய நெருக்கடி பல பண்புகளில் வேறுபட்டது. அதிகாரவர்க்கம் தன்னை மீள்கட்டமைப்புச் செய்து கொளவதற்கான வழிமுறைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன. ஐரோப்பியப் போராடடங்களில் சர்வதேச இடதுசாரி இயக்கங்களின் பங்கு குறித்து ஆராயப்பட வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்
1. மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

2.   ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்

3.  பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்

Exit mobile version