Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பின் மார்க்ஸியமும் நவீனத்துவத்தின் அறவியலும் : அக்னீஸ் ஹெல்லருடன் உரையாடல்

அக்னீஸ் ஹெல்லர் 1929ல் புடாபெஸ்ட்டில் பிறந்தவர். 1950களில் லூகாக்ஸின் மாணவியாகவும் சக ஈடுபாட்டாளராகவும் இருந்த அவர், 1970களின் ஆரம்பத்தில் ஹங்கேரியைவிட்டு ஆஸ்திரேலியாவுக்குப் பெயர்ந்த புடாபெஸ்ட் பள்ளியைச் சேர்ந்த பிரபலமானவர்களைக் கொண்ட ஒரு குழுவைச் சேர்ந்தவராய் இருந்தார். அப்போது தொடங்கி வரலாறு மற்றும் ஒழுக்க முறைமை பற்றிய தத்துவம் குறித்தும், சமீபகாலமாக நவீனத்துவம் பற்றிய கோட்பாடு குறித்தும் விரிவாக எழுதி வருகிறார். அன்றாட வாழ்வு. மார்க்ஸின் எழுத்துக்களில் தேவை பற்றிய கோட்பாடு, இடதுசாரித் தீவிரவாதத்தின் தத்துவம், வரலாறு பற்றிய கோட்பாடு, நீதிக்கும் அப்பால், நவீனத்துவம் பிழைக்குமா?, சிதறல்களாலான வரலாறு பற்றிய ஒரு தத்துவம் போன்றவை இவருடைய நூல்கள். நியூ யார்க்கில் உள்ள நியூ ஸ்கூல் ஃபர் சோசியல் ரிசர்ச்சில், தற்போது ஹன்னா அரென்ட் பெயரிலமைந்த துறையில் தத்துவப் பேராசிரியராக இருக்கிறார்.

முதலில் தத்துவத்துடனான உங்கள் முதல் பரிச்சயம் குறித்துக் கேட்க விரும்புகிறேன். எதனால் நீங்கள் தத்துவம் பயிலத் தீர்மானித்தீர்கள்? 1940களில் அம்மாதிரியான ஒரு தேர்வு நடைமுறையில் எதற்கு இட்டுச்செல்லும்?

நான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது ஒரு விஞ்ஞானியாக வேண்டுமென விரும்பினேன். சார்பியல் தத்துவம் குறித்த வகுப்புகளில்தான் முதலில் சேர்ந்தேன். என்னுடைய நண்பன் (அவன் ஒரு தத்துவ மாணவன்) தத்துவ வகுப்புகளில் அவனோடு சேர்ந்து கலந்துகொள்ளுமாறு கேட்டான். அந்த வகுப்புகளை லூகாக்ஸ்தான் எடுத்துக்கொண்டிருந்தார். காண்டிலிருந்து ஹெகல் வரையிலான தத்துவ மரபின் வளர்ச்சி பற்றிய வகுப்புகள் அவை.

லூகாக்ஸின் உரைகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தேனே தவிர, ஒரு வாக்கியத்தைக்கூடத் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒன்று தெளிவாகப் புரிந்தது: என் வாழ்க்கையில் நான் இதுவரை கேட்டவற்றிலேயே அதிமுக்கியமான விஷயம் இதுதான், இதை நான் புரிந்துகொண்டே ஆக வேண்டும். பிற்பாடு காலிங்வுட்டின் சுயசரிதையைப் படித்தபோது தெரிந்தது, காண்டின் அறவியலைப் படித்தபோது அவருக்கும் இதே போன்றதோர் அனுபவம் ஏற்பட்டதென்று. அது 1947ம் வருடம். எனக்குப் பதினெட்டு வயது. அந்த வருடம் அக்டோபரானபோது நான் தத்துவம் பயிலத் தீர்மானித்துவிட்டிருந்தேன். லூகாக்ஸ்தான் என் ஆசிரியர்.

அப்போது லூகாக்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான தத்துவ ஆசானாய் இருந்தார்;. அது 1949 வரைதான். வலதுசாரித் திரிபுவாதியெனக் கட்சியால் அவர் விமர்சனத் தாக்குதலுக்கு ஆளானார். அவருடைய சுதந்திரம் ஆபத்துக்குள்ளானது. அது ஸ்டாலினியக் காலகட்டம். அதற்கு முன்புவரை லூகாக்ஸ் மிகப் புகழ்பெற்றவராய் இருந்தார். உண்மையாகவே நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவருடைய வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். 1949க்குப் பிறகோ, நான் உட்பட ஐந்து பேர் மட்டுமே எஞ்சியிருந்தோம். அது ஒரு முக்கியமான வாழ்க்கைத் தருணமாய் இருந்தது எனக்கு. அது ஒரு தேர்வு. அறிவுப்பூர்வமாய் அல்லாமல் உள்ளுணர்வால் தேர்ந்துகொண்டேன்.

அப்போது நான் ஜடனோவைப் படித்திருந்தேன். ஒரே நேரத்தில் லூகாக்ஸ், ஜடனோவ் இருவருமே சரியாய் இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். யாராவது ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். அது ஒன்றும் கடினமாய் இருக்கவில்லை. லூகாக்ஸ் ஓர் அற்புதமான மனிதர். ஜடனோவ் அப்படிப்பட்டவரல்ல.

ஹங்கேரியில் அன்று நிலவிய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது, அது ஓர் அரசியல் தேர்வாகவும்தானே ஆகியிருக்கும்?

ஆரம்பத்திலிருந்தே என் வாழ்க்கை அரசியல்மயமானது. நான் ஒரு யூதப்பெண். பாகுபாடு மிகுந்த காலத்தில், யூத அழித்தொழிப்புக் காலத்தில் வளர்ந்தவள். என் தந்தை அரசியலில் முக்கியமான நபராய் இருந்தார். அவர் ஹங்கேரிய பர்கர் கட்சியில் உறுப்பினராய் இருந்தார். ஆனாலும் அது ஒன்றும் என் வேலைத்தேர்வுக்குக் காரணமாய் அமையவில்லை. அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை நாங்கள் அறிந்துகொள்வதை அவர் உறுதி செய்தார்.

நான் ஒரு விஞ்ஞானியாக, ஒரு நல்ல விஞ்ஞானியாக விரும்பினேன். ஆண்களைப் போலவே பெண்களும் சிறந்து விளங்க முடியும் என்று காட்ட விரும்பினேன். மேரி க்யூரியின் சுயசரிதையைப் படித்திருந்தேன். அவரைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்று ஆதர்ஷம் கொண்டிருந்தேன். அதுவும் ஓர் அரசியல் தேர்வுதான். ஆனாலும் என்னுடைய ஆர்வமென்னவோ தத்துவத்தில்தான் இருந்தது. அது ஒரு வகையான விமோசனத்தைக் கொடுத்தது. அப்போது எனக்கு அது தேவையாய் இருந்தது. அதே காரணத்தால்தான் 1947ல் நான் கட்சியிலும் சேர்ந்தேன். என்றாலும் 1949ல் என் உறுப்பினர் தகுதியை இழந்தேன். கட்சியில் இரண்டு வருடங்கள்தான் உறுப்பினராக இருந்தேன். என்றாலும் அந்த இரண்டு வருடங்கள் முக்கியமானவை.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும்போது, மார்க்ஸின் எழுத்துக்களை நிறையப் படித்திருந்தீர்களோ?

இல்லை, அப்போது இல்லை. மார்க்ஸை ஒரு தத்துவஞானியாக நான் கருதியிருக்கவில்லை. முதலாளித்துவச் சமூகம் பற்றிய விவரணையைத் தந்த ஒரு பொருளியலாளராகவே மார்க்ஸைக் கருதியிருந்தேன். மூலதனம் நூலைப் படித்திருந்தேன். ஆனால் அதை ஒரு தத்துவப் படைப்பாகக் கருதவில்லை. என்றாலும், என்னைச் சுற்றி இருந்த விஷயங்கள், கட்சியுடனான நிலைமை என ஒன்றும் ஒழுங்காய் இருப்பதாய்த் தெரியவில்லையாதலால், மார்க்ஸ் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. தோற்றம் இருந்தது. சாரம் இல்லை.

1949ல் என்ன நடந்தது? ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள்?

கட்சியைவிட்டு யாரும் வெளியேறவில்லை. நாங்கள் கட்சியைவிட்டு நீக்கப்பட்டோம். அப்போது கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் உடனடியாகச் சிறையிலடைக்கப்பட்டார்கள். 1948ல் புதிய கம்யூனிஸ்ட் அரசு அமைக்கப்பட்டது. 1947ல் நான் சேர்ந்தபோது அது ஒரு ஜனநாயகக் கட்சியாகக் காட்சியளித்தது. மற்ற பல கட்சிகளுக்கிடையே அது தனித்துத் தோன்றியது. 1947ல் நான் அதற்கு வாக்களித்தேன். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்திருந்திருக்க முடியும். பிற்பாடுதான் தெரிந்துகொண்டேன், அது ஜனநாயகத் தன்மையே அற்ற கட்சியென்று. மாறாக ஸ்டாலினியத் தன்மையையே அது கொண்டிருந்தது. அதைக் காட்டிலும் புரட்சிகரமான கட்சியன்று இருந்திருந்தால், நான் அதற்கே வாக்களித்திருந்திருப்பேன். எந்தளவு புரட்சிகரத் தன்மை கொண்டிருந்ததோ அந்தளவு அது ஏற்புடையதாய் இருந்திருக்கும். அந்தச் சமயத்தில் இளைஞர்கள் புரட்சிகரமானவர்களாக இருந்தார்கள். கம்யூனிஸ்டாக இல்லாமலேயே ஒருவர் சோசலிஸ்டாக இருக்க முடிந்தது.

பின்னால் இம்ரே நேகி பிரதமரானார். அவருடைய மொழி வேறுபட்டதாக இருந்தது. அவருடைய ஆட்சியில் சிறையிலிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்; யாரும் சிறையிலடைக்கப்படவில்லை. மக்கள் மிகவும் வெளிப்படையாகப் பேச முடிந்தது. சீர்திருத்தவாதக் கம்யூனிஸ்டாக ஒருவர் இருக்க முடிந்தது. நான் ஒரு வகையான சீர்திருத்தவாதக் கம்யூனிஸத்தின் அனுதாபியானேன். அதுதான் பிற்பாடு, சோவியத் யூனியனில் இருந்ததைப் போலல்லாமல், ஒரு ஜனநாயகக் கம்யூனிஸ வடிவமாக செக்கோஸ்லோவாகியாவில் 1968ல் தோன்றியது.

1954ல் மீண்டும் கட்சியில் சேர்ந்து, 1958ல் மீண்டும் வெளியேற்றப்பட்டேன். என்னைப் பொறுத்தளவில் கட்சியுடனான உறவு அத்தோடு முடிந்துபோனாலும், அவர்கள் நிற்கவில்லை; அதன் பிறகும் இருமுறை என்னைக் கட்சிநீக்கம் செய்யத் தலைப்பட்டார்கள்.

1956ல் ஹங்கேரிய எழுச்சி குறித்து நீங்கள் எழுதியிருக்கும் சில விஷயங்கள் அரென்ட் சொல்வதைப் போலவே இருக்கின்றன. அது வெறும் அரசியல் நிகழ்வு மட்டுமல்ல, அது நவீன விருப்பார்வங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அரசியல் சுதந்திரம் பெற்றிருப்பதன் அர்த்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது – இவ்வாறாக. 1956ன் எழுச்சியை நீங்கள் எவ்வாறு அர்த்தப்படுத்துவீர்கள்?

இன்றும்கூட 1956தான் என் வாழ்வின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாய் இருக்கிறது. ஏனென்றால் வரலாற்றிலேயே அதுதான் உண்மையாகவே ஒரு சோஷலிசப் புரட்சியாக இருந்தது. அமெரிக்கப் புரட்சி கண்டடைந்ததே, அப்படிப்பட்டதொரு, சுதந்திரத்தை நோக்கமாகக் கொண்ட புரட்சி அது. தேசவிடுதலை ஒரு புறம், கூடவே அரசியல் சுதந்திரம். அது ஒரு விடுதலைப் போர் மட்டுமல்ல் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் உறுதிசெய்யும் அரசியல் சட்டத்தை நிறுவுகிற முயற்சியும்கூட. இது அமெரிக்கத் தன்மையான புரட்சியேதான்.

அரென்டிடமிருந்து நான் வேறுபடுவது என்னவென்றால், அரசியலில் பிரதிநிதித்துவத்திற்கு எதிராய் நான் எப்போதும் இருக்கவில்லை. தொழிலாளர் குழுக்கள் மற்றும் சுயநிர்வாக இயக்கங்களின் உறுப்பினர்களும் ஒருபோதும் அதற்கு எதிராய் இருக்கவில்லை. பொதுத் தேர்தல்களுக்கும் கூட்டுறவுக்கும் ஆதரவாகவே அவர்கள் இருந்தார்கள். அவர்கள் விரும்பியது இரட்டை அரசியல் அதிகாரம்: பிரதிநிதித்துவம் மற்றும் பங்கெடுப்பு. சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தையும் பலகட்சி அமைப்பையுமே அவர்கள் விரும்பினார்கள்.

அரென்ட் வாதிட்டது என்னவென்றால், நேரடி ஜனநாயகம் வேண்டுமானால் பிரதிநிதித்துவத்தைக் கைவிட வேண்டும் என்பதுதான். அரென்டைப் போலல்லாமல், ஹங்கேரிய மக்களோ நேரடி ஜனநாயகம் என்பது பயங்கரவாதத் தன்மை கொண்டது என்று உணர்ந்திருந்தார்கள். பாதுகாப்புகளற்ற சுத்தமான ஜனநாயகம் என்பது சுத்தமான பயங்கரம். சுத்த ஜனநாயகத்திற்கு எதிர்வலுவாக மனித உரிமைகளை நிலைநிறுத்த மக்கள் விரும்பினார்கள்.

அரென்ட் ஹங்கேரியைக் கவர்ச்சிகரமாய்க் காட்டினார் என்று நினைக்கிறீர்களா?

ஆம், அவர் கவர்ச்சிகரமாகவே காட்டினார். அவருடைய பிரச்சினை என்னவென்றால், பத்து நாட்களின் நிகழ்வுகளிலிருந்து மெய்மையான கோட்பாட்டு முடிவுகளை வரைந்தெடுக்க அவர் விரும்பியதுதான். பிரதிநிதித்துவக் குழுக்கள் காணாமல் போகுமென்றார். ஆனாலும் மாக்யவல்லித் தருணம் குறித்து அவர் சரியாகவே சொன்னார். தொடக்கங்கள் தேவையென்று; விளிம்பு மையமாகும்போது தருணங்கள் தேவையென்று. ஒரு பத்து நாட்களுக்கு விளிம்பு மையமாக முடியும், பாரீஸில் 1968ல் நடந்ததைப் போல். ஆனால் அது மறுபடியும் விளிம்புக்கே செல்லும். விளிம்பு மையத்தை அடைய முடிந்திருக்கிறது என்பதை வரலாற்று நினைவகம் காண வேண்டியது அவசியமாய் இருக்கிறது.

அரென்டிடம் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. ஆனால் அதிலிருந்து மிக எதிர்மறையான ஒரு விளைவையே அவர் உருவாக்கிக் கொண்டார். பொதுத் தேர்தல்களே இருக்கக்கூடாது என்றார். மாறாக, மக்கள் எப்போதுமே பங்கெடுப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றார். இது அபாயகரமானது.

1958லும் நீங்கள் லூகாக்ஸிடம்தான் படித்துக் கொண்டிருந்தீர்களா? புடாபெஸ்ட் பள்ளியைப் பற்றி?

புடாபெஸ்ட் பள்ளி அப்போது அந்தப் பெயரில் இருக்கவில்லை. அது பிற்பாடுதான். 1947லிருந்து பல்கலைக்கழகத்தில் லூகாக்ஸிடம்தான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் 1958லெல்லாம் லூகாக்ஸ் போதித்துக் கொண்டிருக்கவில்லை. 1956ல் புரட்சி அமைச்சரவையில் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்து, பிறகு ருமேனியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். திரும்பி வந்தபிறகு அவர் கட்சி உறுப்பினராக இருக்கவில்லை; எனவே போதிக்க முடியவில்லை. விருந்தினர்களைக்கூட அவர் அழைக்க முடியவில்லை. ஒரு சிலர் மட்டுமே அவருக்கு உண்மையாக இருந்தார்கள். அவரைச் சந்திக்கவும் அவரோடு விவாதிக்கவும் அவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர் முற்றிலும் தனிமைப்பட்ட மனிதராக ஆகிப் போனார்.

அப்போதுகூட மார்க்ஸைப் படிக்கவில்லை?

இல்லை, எங்கள் பல்கலைக்கழகத்தில் சுத்தமாக இல்லை. மார்க்ஸைப் போதிப்பதென்பது நினைக்கக் கூடியதிலேயே மிகவும் ஆபத்தானதாக இருந்தது. ஏனென்றால், இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மர்க்சிசம்-லெனினிசத்தின் அதிகாரப்பூர்வ வகைப்பட்ட மார்க்சியத்திற்கேற்பத்தான் மார்க்ஸைப் போதிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒரு மார்க்சிய-லெனினியத் துறை இருந்தது. மார்க்ஸைப் போதிப்பது அவர்களுடைய வேலையாய் இருந்ததே தவிர, தத்துவ ஆசிரியர்களுடையதாய் அல்ல. மார்க்சிய-லெனினியம் என்பது ஒரு சிறப்புத் துறையாக இருந்தது. அவர்களுக்கு மூன்று வகுப்புகள் இருந்தன: விஞ்ஞான சோஷலிசம், மார்க்சியப் பொருளாதாரம் மற்றும் மார்க்சியத் தத்துவம். ஆக அவர்கள் மார்க்ஸைப் போதித்தார்கள், ஆனால் சோவியத் யூனியனிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களுக்கேற்ப. இது ஒரு வகையான சமய வழிபாட்டுமுறை.

லூகாக்ஸ_ம் சரி, எனக்கு வகுப்பெடுத்த மற்ற அனைத்துச் சிந்தனையாளர்களும் சரி, யாருமே மார்க்ஸைப் போதிக்க விரும்பவில்லை. லூகாக்ஸ் மார்க்ஸைப் பற்றி எழுதினார். ஆனால் எப்போதுமே போதித்ததில்லை. 1953க்குப் பிறகுதான் நான் மார்க்ஸைப் படிக்கத் துவங்கினேன், குறிப்பாக இளம் மார்க்ஸின் ஜெர்மன் பதிப்புகளை. அதற்கு முன்னால் மார்க்ஸின் நூல்கள் படிக்கக் கிடைக்கவில்லை. ஒரு நூலகத்திற்குச் சென்று அவற்றை எடுக்க முடியாது. அவையெல்லாம் மூடப்பட்ட பகுதிகளாக இருந்தன. ஆனால் 1953-56களுக்கிடையில் சற்று தாராளமாக்கப்பட்டிருந்தபோது, நான் நூலகத்திற்குச் சென்று மார்க்ஸைப் படிக்கத் துவங்கினேன். ஆனால் அப்போதும் நான் மார்க்ஸை ஒரு தத்துவஞானியாய்ப் புரிந்துகொள்ளவில்லை. இரண்டாம் அகிலத்தின் அறவியல் குறித்த ஒரு கட்டுரை எழுதுவதற்காகத்தான் நான் மார்க்ஸிடம் நாட்டம் கொண்டேன். கொஞ்சம் பவேரையும் காவுட்ஸ்கியையும் கூடப் படித்தேன். அவ்வளவுதான்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு சீர்திருத்தக் கம்யூனிஸ்டாக இருந்தீர்களே தவிர ஒரு மார்க்pயவாதியாக அல்ல என்று கூறினால் சரியாக இருக்குமா?

இல்லை, அப்படி நினைக்கவில்லை. நான் ஏன் மார்க்சியவாதியாக இல்லையென்றால், எனக்கு மார்க்சியம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதால்தான். ஆனால் அப்போது என்னை ஒரு மார்க்சியவாதியா என்று நீங்கள் கேட்டிருந்தால், ஆம், நான் ஒரு மார்க்சியவாதி என்று சொல்லியிருப்பேன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், என்னை ஒரு மார்க்சியவாதியாக கட்சி ஒருபோதும் நம்பியதில்லை. நான் ஒரு கம்யூனிடும் அல்ல மார்க்சியவாதியும் அல்ல என்றுதான் அவர்கள் எப்போதுமே சொல்லி வந்தார்கள்.

பிற்பாடு நான் உணர்ந்து கொண்டேன், அவர்கள் சரியாகத்தான் சொன்னார்கள்;. நான்தான் தவறாகக் கருதிக் கொண்டிருந்தேன். பாரம்பரியமான அர்த்தத்தின்படி ஒரு மார்க்சியவாதியாக நான் எப்போதும் இருந்ததில்லை.

—————————————————————————————————–

தமிழில் : எஸ்.வி.உதயகுமார்

wp-cumulus

Exit mobile version