கைகள் கட்டப்பட்ட மனிதர்களை லத்திக் கம்புகளால் தாக்குவதைத்தான் நாம் அடிக்கடி தொலைக்காட்சியில் காண்கிறோமே. அவ்வாறிருக்கையில் இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்குமா என்ன?
‘எம்பாம்’ பண்ணுவதற்காக உடலை வெட்டிய பிறகுதான் காரணம் புரிந்தது. இரத்த அழுத்தம் எனச் சொன்னதற்கு மேலதிகமாக வயிற்றிலும் இரைப்பையிலும் அதிகளவிலான நீர் இருந்தது. சாதாரணமாக அவ்வாறு தண்ணீர் உருவாவது மதுபானப் பாவனையால்தான். இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த போத்தல்கள் இல்லாமல் தொடர்ந்து கடமை புரிய முடியாதே. அவர்கள் கேட்பதுவும் பணம் இல்லையென்றால் போத்தல்கள்தானே (எல்லோரையும் சொல்லவில்லை.) அவ்வாறிருக்கையில் இவ்வாறான நோய்கள் வருவது புதுமையும் இல்லை.
காவல்துறை அதிகாரியொருவரை ‘எம்பாம்’ செய்ய நேரும் எல்லா நேரங்களிலும் அவர்கள் உண்ணும் அசிங்கங்களுக்கேற்ப அவர்களுக்கு வருவதும் அசிங்கமான நோய்களே என எனக்குத் தோன்றும். ‘தெய்வம் நின்று கொல்லும்’ எனச் சொல்வது இதற்குத்தான்.
இன்று பதினான்கு வயதேயான சிறுமியொருத்தியைக் கொண்டு வந்தார்கள். துணியால் உடலைச் சுற்றி, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்து போயிருந்தாள். உடல் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. முழுதாக எரிந்து போயிருந்தது. தோட்டமொன்றில் வேலை செய்யும் தமிழ் தாயொருவரதும் தந்தையொருவரதும் மூன்றாவது பிள்ளை.
காதல் தொடர்பொன்று இருந்து அது முறிவடைந்ததால் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாள் என அவளது உடலைக் கொண்டு வர லயன் அறைக்குச் சென்றிருந்தபோது அவளது தந்தை கூறினார். பாதிக் கரிக்கட்டையாக இருந்த உடலை வாகனத்தில் ஏற்றும்போது பிள்ளைகள் இவ்வாறு செய்துகொள்வதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாரென்ற கேள்வி எனக்குத் தோன்றியது.
விசாரித்துப் பார்க்கையில் இந்தச் சிறுமி தொலைக்காட்சிக்கு அடிமையாக இருந்திருக்கிறாள் என்பது தெளிவாகியது. மாலையில் ஒளிபரப்பாகும் தொடர்நாடகங்களுக்கு அடிமையாக இருந்திருக்கிறாள். காதலிப்பது எப்படி என்பது பற்றித்தானே அதில் இருக்கிறது. தாத்தாக்கள், பாட்டிகள், அம்மாக்கள், அப்பாக்கள், பிள்ளைகள் எல்லோருமே ஒன்றாக அமர்ந்திருந்து காதலிப்பது எப்படி எனப் பார்க்கிறார்கள். இதுதான் வாழ்க்கையென இப் பிள்ளைகள் நினைத்துக் கொள்கிறார்கள். பதினான்கு வயதுச் சிறுமியொருத்தி காதல் தொடர்பொன்றை ஏற்படுத்திக் கொள்வதென்பது சாதாரணமானதொரு விடயமாக ஆகி விட்டது.
கடந்த வாரமும் இதே வயதையுடைய ஒரு சிறுவனை ‘எம்பாம்’ செய்ய நேர்ந்தது. விஷம் உண்டதால் அம் மரணம் நிகழ்ந்திருந்தது. *இத் தொடர் நாடகங்கள் ஏற்படுத்தும் பாரியதொரு அழிவை கண்டுகொள்ளாத, தேசத்தை வழிநடத்திச் செல்லும் பெருந்தலைகளுக்கு ‘நீ’ , ‘உனது’ போன்ற வசனங்கள் மட்டும் மோசமான சொற்களாகத் தோன்றுவதுதான் புதுமையாக இருக்கிறது. இப் பெருந்தலைகளின் உடல்களை வெட்டக் கிடைக்குமெனில் என்னால் சொல்ல முடிந்திருக்கும் ‘இவர்களது மூளை எங்கிருக்கிறது? எவ்வளவு சிறியதாக இருக்கிறது’ என்பது பற்றி.
*இலங்கையில் ஒளிபரப்பப்படும் சிங்களத் தொடர் நாடகங்களில் ‘நீ’, ‘உனது’ போன்ற வசனங்களை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
– தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை