/ Assam is on state-sponsored fire./ என்று ராகுல்காந்தியால் சுட்டிக்காட்டப்படும் அஸ்ஸாம் வன்முறை சிறுபான்மை வெறுப்பு மன நிலை கொண்டது.
ஒரு நாடு முழுமையாக பாசிச மயச் சூழலுக்குள் செல்ல 10 ஆண்டுகள் போதுமானது. கலாச்சார, பண்பாட்டுத்தளத்தில் சிந்தனையாக, கருத்தாக உருவாக்கப்படும் மத, இன வெறிப்பாசிசம் குறுகிய காலத்திலேயெ வெற்றியை சுவைக்கிறது. பின்னர் அதை வெவ்வேறு வடிவங்களில் சோதனை செய்து வெற்றியை உறுதி செய்து கொள்கிறது.
சுதந்திரத்திற்குப் பின் பாபர் மசூதி இடிப்பின் போது நாடு முழுக்க கலவரம் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.குஜராத் கலவரம் மாநிலம் தழுவிய கலவரம் ஆனால், அதன் பின்னர் நாடு தழுவிய கலவரங்களோ, மாநிலம் தழுவிய கலவரங்களோ இல்லை. ஆனால், வட்டார அளவிலான கலவரங்கள் ஆயிரக்கணக்கில் அதாவது ஒரு தொகுதியை குறிவைத்து. அந்த தொகுதியில் எது சிறுபான்மை மக்களுக்கு எதிராக எடுபடுமோ அதை திட்டமிட்டு வாட்சப் குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவது.
பிரமாண்ட கலவரங்களை விட குட்டிக் குட்டியாய் செய்யப்படும் இது போன்ற வெறுப்புப் பிரச்சாரங்களுக்கும் கலவரங்களுக்கும் கைமேல் பலன் கிடைத்து விடுகிறது. இது வெற்றி பெறுவதற்கு முந்தைய உத்தி. வென்ற பிறகு அரசே கொண்டு வரும் சட்டங்கள். உணவு, திருமணம், காதல், குழந்தை பிறப்பு, நிலம், குடியுரிமை, போன்ற அடிப்படையான மனித உணர்வுகள், உரிமைகளை காலி பண்ணுவது.
இந்தியாவில் பாசிசம் இதை உறுதி செய்து வெற்றியும் கண்டுள்ளது. அதனால்தான் இதை காவி கார்ப்பரேட் பாசிசம் என்று சொல்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ள தேசியவாதம் போல தன்னை செறிவாக வளர்த்துக் கொண்டுள்ளது. கீழ் மட்டங்களில் மத உணர்வை வைத்தே வெற்றி மேல் வெற்றி ஈட்டுகிறார்கள்.
ஒரு முஸ்லீமை அடித்தால், கொன்றால், வன்கொடுமை செய்தால், ஒரு கிறிஸ்தவனை கொன்றொழித்தால் நீ இந்தியாவுக்கு உண்மையான நண்பன் என்று கீழ் மட்ட இந்து உணர்வாளர்களுக்கு நம்ப வைத்து விட்டார்கள். அதன் ஒரு சின்ன அடையாளம்தான் பிஜய் சங்கர் பன்னியா அவர் அஸ்ஸாம் டாரங் மாவட்ட நிர்வாகத்தால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட பி.டி.ஐ புகைப்படக்காரர்.
நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்து கொண்டிருக்கும் ஒரு முஸ்லீம் மீது ஏறி மிதிக்கிறார். எப்பேர்பட்ட வீரம் பாருங்கள். இறந்து கொண்டிருக்கும் மனிதனை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பின் துணையோடு கொல்லும் வீரம். இவன் துவேஷத்தின் அடையாளம். லட்சத்தில் ஒருவன் கோடியின் ஒருவன்.
இருகிய நிலையை அடைந்துள்ள பாசிசம் அரசு மயமாகி விட்டது. இனி வரும் நாட்களை கற்பனை செய்ய முடியாது.