பாவனை : கவிதா (நோர்வே)
பாவனை
பகற்பொழுதின் அணுக்களை
கொத்தி முழுங்கும் இருள் அலகுகள் போல
விழுங்கிச் செமிக்கும்
பல பாவனைச் செயல்களினின்று கழன்றால்
நான் இப்படியானவள் அல்ல
ஒரு மர்மம் அவிழ்த்து,
சகுணம் பாராமல்
பரிகசிக்கும் பார்வைகளில்
பதுக்கிய தன்னிலிருந்து
முகத்தினை நோண்டி எடுக்க
நின்று எரிகிறது எனது சுயத்தின் கடல்
பாவனைகள் பலவிதம்
ஆற்றாத பொழுதெல்லாம்
கைச்சட்டைப் பொத்தான்களை சரிசெய்யும்
அப்பாவின் பாவனை
அக்கறையென அதட்டிப் போகும்
ஒரு அம்மா பாவனை
தெரியாதது போல நகர்ந்து செல்லும்
அப்பாவி பாவனை
ஒதுங்கி ஒடுங்கும்
ஒரு நல்ல பெண் பாவனை
பாவனைப் பாதாளத்தில்
குடுகுடுவென குதிக்கத் தயாராகும்
நாளைய என் குழந்தையை
பேரோசையின்றி எப்படிப் பூக்கவைப்பேன்
சிலருக்கு
வாழ்க்கை, பணயம்
பலருக்கு
பரிணாம வக்கிரம்
தோழரே!
விலைமகளின் ஒப்பனைக்காட்டிலும்
கேவலமான
உனதும் எனதுமான
பாவனை, கடப்பின்..