Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியை ஆதரிப்போம் : புதிய திசைகள் அறிக்கை

80 களின் மத்திய பகுதி வரைக்கும் இலங்கைத் தீவில், ஊடக சுதந்திரம், பேசுவதற்கான சுந்தந்திரம், எதிர்ப்பியகங்களை நடத்துவதற்கான சுதந்திரம், தொழிற்சங்க உரிமை என்பனவெல்லாம் ஒரு குறித்த வரம்பிற்கு உட்பட்டளவில் வழங்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான சிறு பத்திரிகைகள், ஏராளமான விவாதங்கள், மாணவ அமைப்புக்கள், பெண்கள் முன்னணிகள், விவசாய அமைப்புக்கள், தொழிலாளர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என்று சிறுகச் சிறுக வளர்ச்சி பெற, இவ்வாறான மக்கள் போராட்டங்களை உள்வாங்கி, தலைமை வழங்கி, ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மாறாக ஆயுதப் போராட்டத்தை, மக்கள் போராட்டத்திற்கு எதிராக முன்வைத்தன் விளைவு அப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிந்து போனது.

இவ்வாறு முறியடிக்கப்பட்ட போராட்டத்தின் பின்னரான இலங்கையின் புற நிலை யதார்த்தம் கவலைக்கிடமான அரச பாசிசத்தை அதன் உச்ச நிலைக்கு வளர்த்துள்ளது. 80 களின் புறச் சூழலில் மக்களை அணிதிரட்டுவதற்காக நிலவிய குறைந்த பட்ச ஜனநாயகமும் பறிமுதல் செய்யப்பட்டு, முழுமையான இராணுவ சர்வாதிகார ஆட்சியை மகிந்த அரசு இலங்கை மக்கள் மீது திணித்துள்ளது.

இந்தச் சூழல், தனி நபர் ஆயுதப் போராடத்திலிருந்தே இன்னொரு போராட்டம் உருவக முடியும் என்ற அபாய அறிவிப்பையும் விடுக்கின்றது.

அவ்வாறன்றி மக்களை அணிதிரட்டி, மக்களமைப்புக்களில் இருந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏற்பதான 80 களில் நிலவிய குறைந்த பட்ச ஜனநாயக விழுமியங்களை மீட்டெடுக்க எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலையும் ஆயுதமாகப் பயன்படுத்த முனைய வேண்டும் என நாம் கருதுகிறோம்.

தேர்தல் என்பது ஜனநாயகத்தை வெற்றிகொள்வதற்கான இறுதியான கருவியல்ல ஆனால் அதற்கான பலமுனைப் போராட்டங்களில் தேர்தலைக் கையாளுதல் என்பது ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும். பாராளுமன்ற வழிமுறையூடாக நாம் விடுதலை அடைந்துவிடப் போவதில்லை. அது இறுதித் தீர்வும் இல்லை.

இலங்கைத் தேர்தலில் மூன்று வகயான அரசியல் சக்திகள் மோதிக் கொள்கின்றன. முதலாவதாக, இன்றைய பாசிச அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பேரினவாதக் கட்சியான மகிந்த குடும்பத்தின் அரசியல் கட்சி. இரண்டாவதாக அதிகாரத்தில் ஏற்பட்ட உள்முரண்பாடுகளின் அடிப்படையில் உருவான எதிரணியான சரத் பொன்சேகா,ஐக்கிய தேசியக் கட்சி போன்ற பேரினவாதிகளின் கூட்டு. முன்றாவதாக இந்த இரண்டில் ஒரு அதிகாரத்தோடு தம்மை நேரடியாகவோ மறைமுகமாகவோ அடையாளப்படுத்துகின்ற அரச துணைக்குழுக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, மலயக மக்கள் முன்னணி போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள்.இந்த மூன்று சக்திகளும் 80 கள் வரை நிலவிய அடிப்படை ஜனநாயக உரிமையை மீட்பதற்கான எந்த அடிப்ப்டை நோக்கங்களையும் கொண்டிருக்கவில்லை, மாறாக அவற்றை மேலும் ஒடுக்கமுனையும் சக்திகளுடனேயே கூட்டுவைத்துக் கொள்கின்றன.

இதற்கு அப்பால் குறுந்தேசியவாத நோக்கிலான விக்கிரமாகு – சிவாஜிலிங்கம் கூட்டணியை நாம் ஆதரிக்கவியலாத நிலையிலுள்ளோம்.

இவற்றையெல்லாம் நிராகரித்து ஆராய்ந்தால் இறுதியில் எஞ்சும் புதிய ஜனாநாயக் கட்சி,பாராளுமன்ற ஜனநாயகம் மக்களின் விடுதலைக்கான கடைசித் தீர்வாக அமைய முடியாது என்றும் மக்கள் போராட்டத்திற்கான அரசியல் தளத்தை உருவாக்குதலே இன்றைய தமது கடமை என்றும் கூறுகிறது. தவிர, பேரினவாத அரசியல் கட்சிகளின் அதிகாரத்தையும் அவற்ருடனான கூட்டையும் முற்றாக நிராகரிகிறது.

இவ்விரு குறித்த நோக்கங்களுக்காக புதிய ஜனநாயகக் கட்சியை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆதரிப்பதாகப் புதிய திசைகள் அமைப்பு முன்மொழிகிறது.

புதிய ஜனநாயகக் கட்சியையும் அவர்களின் கடந்தகால, நிகழ்கால அரசியலையும் விமர்சன அடிப்படையிலேயே நோக்கும் நாம், அவர்களின் பிரதிநிதிகளாக எம்மை அடையாளப்படுத்திக் கொள்வதையும் நிராகரிக்கிறோம்.

இன்றைய தேர்தல் என்ற குறிப்பான நிகழ்வில் புதிய ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் நாம், புலம்பெயர் சூழல் சார்ந்து அவர்கள் வெற்றியடைவதற்குரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு எமது கருத்துச் சார்ந்த அனைவரையும் வேண்டுகிறோம்.

Exit mobile version