Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாஜக ஆளும் கர்நாடகாவில் வைத்து ராஜேந்திரபாலாஜி கைது!

அதிமுக முன்னாள் அமைச்சரும் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளவருமான ராஜேந்திரபாலாஜி தமிழ்நாடு தனிப்படை போலீசால் கர்நாடக மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இதன் பின்னணியில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதனையொட்டி அவர் மீது வழக்குகள் பதியப்பட ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு ரத்து செய்யப்பட உடனே தலைமறைவான ராஜேந்திரபாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கடந்த 18 நாட்களாக அவரைப் பிடிக்க இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் காவல்துறை தேடுதல் வேட்டையை நடத்திய நிலையில் அவர் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஒரு பாஜக பிரமுகரின் ஆதரவில்  ஹசன் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்துள்ளார்.

விடுதிகளிலோ, ஹோட்டல்களிலோ தங்காமல் காரிலேயே தொடர்ந்து பயணித்துள்ள ராஜேந்திரபாலாஜி அவ்வப்போது சில வீடுகளிலும் தங்கியுள்ளார். இதைக் கண்டுபிடித்து அவர் சுற்றி வளைத்த போது அவர் தப்பியோட முயன்று பிடிபட்டுள்ளார்.

சுமார் 9 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது கர்நாடக மாநிலத்தில் வைத்து முதல் கட்ட விசாரணையை துவங்கியிருக்கும் போலீசார் அவரை  இன்று மாலை தமிழ்நாடு கொண்டு வருவார்கள் என்று தெரிகிறது.

Exit mobile version