பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசிய நிலையில் அது பாஜக அதிமுக இடையே கடும் சர்ச்சைகளை உருவாக்கியது.இந்நிலையில் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி தொடரும் எனக் கூறினார்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கட்சி நிர்வாகிகளிடையே பேசும் போது “அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழந்து விட்டது.அதிமுகவின் தோல்விக்கு இதுவே காரணம்” என்றார்.
இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதனையும் கூறவில்லை. ஆனால் பாஜகவினர் சிவி சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். பாஜக தலைமையிடம் சிவி சண்முகம் மீது புகார் கூறுவோம் என்றும் பேசினார்கள். இது இரு கூட்டணிகளுக்கிடையில் பிரச்சனைகளை உண்டு பண்ணிய நிலையில் இந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் சூழலை உருவாக்கும் படி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,“பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும். அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை,” என்று கூறியுள்ளார்.
இது அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும் அதில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இல்லை. பன்னீர்செல்வம் தன்னிச்சையாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறார். பாஜகவின் தேவைகளுக்காகவே அவர் அதிமுகவில் இருப்பதாக பலரும் பல்வேறு காலங்களிலும் கருத்து தெரிவித்துள்ளனர்.