Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்பது தமிழக தேர்தல் கோஷமா?

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்திய அளவில் ஏற்படும் எல்லா வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றங்களும் தமிழகத்தில் இருந்தே துவங்கின. முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமரின் (விபிசிங் ஆட்சி) தேசியக் கட்சிகளை இரண்டாம் நிலைக்குத் தள்ளி மாநிலக் கட்சி ஆட்சியமைத்தது. இட ஒதுக்கீடு என்ற கோஷத்தை அரசியல் அரங்கில் முதன் முதலாக வைத்தது என தமிழகம் இந்திய அரசியல் போக்கில் வேறுபட்ட போக்கைக் கொண்ட மாநிலம்.

2019-ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி படு தோல்வியைச் சந்தித்த போதும் இந்திய அளவில் மாற்றத்தை அது கொண்டு வரவில்லை. காரணம் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து விட்டது. அதன் கட்டமைப்புகள் பாஜகவால் நிர்மூலமாக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆளும் அதிமுக,  ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத இந்த தேர்தலில் எப்படியாவாது காலூன்ற நினக்கும் பாஜக அதிமுகவின் ஒரு பகுதி கட்டமைப்பை தன் கைக்குள் வைத்து தேர்தல் விளையாட்டை நடத்தி வருகிறது.

இதற்கிடையில்  “பாசிச பாஜகவை வீழ்த்துவோம்” என்று முற்போக்கு அமைப்புகள் தேர்தல் கோஷம் ஒன்றை முன் வைக்கின்றன. இது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

காரணம் பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்ற கோஷத்தை முதன் முதலாக அரசியல் அரங்கில் வைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். பாஜகவை திவீரமாக எதிர்க்கும் ஓவைசி, மம்தா பானர்ஜி, இடதுசாரிகள் கூட இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. உண்மையில் இந்த கோஷத்தை அரசியல் கோஷமாக மாற்றியது ஒரு மாணவி. அவர் பெயர்  சோபியா.

தூத்துக்குடிக்குச் சென்ற பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக “பாசிச பாஜக ஒழிக” என்று விமானத்தில் வைத்து கோஷமிட்டு கைதானவர் சோபியா என்ற மாணவி.  அதன் பின்னர்தான் அந்த கோஷம் தமிழகத்தில் வைரல் ஆனது.

அது நாடாளுமன்ற தேர்தல் கொஷம். அக்கோஷம் தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையை உருவாக்கி வீழ்த்தியது. ஆனால், இது சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையில்  நடக்கும் நேரடி யுத்தம். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நடக்கும் நேரடி யுத்தம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்ற கோஷத்தை வைத்து  எதிர்கொண்டது. இந்த தேர்தலில் அதிமுகவை புறக்கணிப்போம் என்ற கோஷத்தை வைக்கிறது. அதுதான் சரி  என்கிற நிலையில். சுமார் 50 முற்போக்கு அமைப்புகள் பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்ற பெயரில் பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ளது.

பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்வதோடு பாஜகவை எதிர்க்கும் வேட்பாளர்களை ஆதரிப்பதாகவும் முடிவு செய்துள்ளது. இது ஒரு வகையில் அதிமுகவை பாதுகாக்கும் கோஷம் என்ற  விமர்சனமும் எழுந்துள்ளது.

பாஜகவை தன் தோழில் சுமந்து வரும் அதிமுகவை வீழ்த்தினாலே பாஜக வீழ்ந்து விடும் காரணம் அந்த முகத்தில்தான் பாஜக வருகிறது. பாசிச பாஜகவை  வீழ்த்துவோம் என்றால் அதிமுகவை வீழ்த்த வேண்டாமா? என்ற கேள்வி வருகிறது. இந்த தேர்தலில் அதிமுகவை வீழ்த்தினால் மட்டுமே பாசிச  அரசியல் வீழும். இந்த தெளிவு முற்போக்கான தோழர்களுக்கு வேண்டாமா?

Exit mobile version