Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாக்தாத் – காஸா – புதுக்குடியிருப்பு : யமுனா ராஜேந்திரன்

பௌத்த-சிங்கள-பெருந்தேசிய-பாசிச இலங்கை அரசின் கொடுமைக்கு ஆளாகி வரும் பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்களது உயிர்களுக்கு ஆதரவான பெருங்கொந்தளிப்பு தமிழக மக்களின் மனங்களில் பெருவெடிப்பாக எழுந்திருக்கிறது. அவர்களது கையறுநிலை தீக்குளிப்புகளாகவும், அம்மக்களது ஆத்திரமும் கோபமும் காவல்துறையினருடனான வழக்குரைஞர்களின் நேரடி மோதலாகவும் தமிழகத்தில் பரிணமித்திருக்கிறது.

எழுத்தாளர்கள் கோணங்கி, பிரபஞ்சன், அரசியல் தலைவர்கள் தா.பாண்டியன், தொல்.திருமாவளவன் போன்றவர்களின் வழி அறிவுமட்டத்தில் இந்தக் குரல் வேறொரு தளத்தில் தமிழகத்தில் தெளிவாகக் கேட்கிறது. தமிழக மக்கள் – கட்சி அரசியலுக்கு அப்பால் – ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழருக்கு ஆதரவான தமிழக மக்கள் இயக்கத்தில் பெரும் மாறுதலை நிகழ்த்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியனை என்னால் சில நிமிடங்கள் சந்தித்து உரையாட முடிந்தது. தா.பாண்டியன் தனது நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறார். வைகோ, மருத்துவர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் போன்றவர்களுடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கூட்ட மேடையைத் தான் பகிர்ந்து கொள்வது, இந்திய அரசியல் சார்ந்த கூட்டணித்தன்மை கொண்டதல்ல என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். இலங்கையில் நடைபெறும் தமிழ் மக்களின் மீதான சிங்கள அரசின் மிருகத்தனமான தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கையே அவரது நோக்கம்.

இலங்கை அரசை அரசியல் தீர்வை முன்வைக்க அவர் கோருகிறார். விடுதலைப் புலிகளின் பல்வேறு அரசியல் தவறுகளை – சகோதரப் படுகொலைகள் மற்றும் ஏகப்பிரதிநிதித்துவம் போன்றவை குறித்து அவர் மறக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. கம்யூனிஸ்ட் என்பவன் சமவேளையில் சர்வதேசியவாதியாகவும் தேசியவாதியாகவும் மனிதனாகவும் இருக்க அவர் கோருகிறார். இவற்றுக்கு இடையிலான இணக்கம் குறித்தும் அவர் அறிந்திருக்கிறார்.

மொழி-நிலம்-பண்பாடு போன்றவற்றுக்கான அவாவாக தேசிய கோஷத்தை, அதனது ஜனநாயக அவாவை அவர் புரிந்து கொண்டிருக்கிறார். சிங்கள இனவிஷமேறிய நிவையில் முழுத்தமிழ் இனத்தவர்களையும் கோமாளிகள் எனச் சரத் பொன்சேகா என்கிற சிங்கள ராணுவத் தளபதி ஏசுகிறபோது, தோழர்.தா.பாண்டியனுக்குள் தானும் தமிழன் எனும் பெருமிதம் எழுகிறது. இலங்கை சிங்களவருடையது என்றும், தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்றும் ஏசுகிற இனவாதி சரத் பொன்சேகா பற்றிப் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு, தோழர்.தா.பாண்டியனின் அரசியல் விவேகத்தின் மீது சந்தேகம் எழுப்புகிற சந்தர்ப்பவாதப் ‘பின்நவீனத்துவ முன்னுரை மன்னன்’ அ.மார்க்ஸ் மாதிரியில் தோழர். தா.பாண்டியனால் இருக்க முடியவில்லை.

தமிழக மக்களை, அதனது பிரதிநிதிகளை ஒரு பொருட்டாகவே கருதாத இந்திய அரசின் நடத்தையின் மீது அவருக்குத் தீராத கோபம் இருக்கிறது. மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிகிறது இலங்கை அரசு எனும் அவர், பிரச்சினையை ஐக்கியநாடுகள் சபைக்கு எடுத்துச் செல்வதில் முனைப்புடன் செயல்படுகிறார். குறிப்பான வரலாற்று அறிவு இல்லாமல் மார்க்ஸ்-லெனின்-ஸ்டாலின் மேற்கோள்களின் அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினையை மார்க்சியர்கள் அணுகுகிறார்கள் எனும் அவப்பெயரை அவர் மறுதலித்திருக்கிறார்.

சகலவற்றுக்கும் மார்க்சியம் நிவாரணி என்பதை நாம் காலப் போக்கில் மறுத்திருக்கிறோம். சகலவாற்றுக்கும் பெண்ணிலைவாதம் நிவாரணி என்பதையும் நாம் மறுக்கிறோம். சகலவற்றுக்குமான தேசிய நிவாரணியையும் நாம் மறுக்கிறோம். தற்போது சகலவற்றுக்கும் நிவாரணியாக தலித்தியப் பார்வை முன்வைக்கப்படுகிறது. இதனையும் நாம் மறுதலிக்கவே வேண்டியிருக்கும். பரஸ்பரம் ஊடறுத்துச் சிந்தித்தலும், பரஸ்பரம் ஏற்பதும் நிராகரித்தலும் எனவே இனியான விடுதலைக் கோட்பாடு உருவாக முடியும்.

தமிழக தலித்திய-பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் கோட்பாட்டளவில் மார்க்சியத்துக்கு எதிரில் தம்மை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வழிகாட்டுதலிலான தலித்தியம் தமிழகத்தில் இப்போது தேங்கிப் போய்விட்டது. மார்க்சியர்களையும், புரட்சியாளர்களையும் விமர்சிப்பதில் காட்டிய முனைப்பை இவர்கள் அடக்குமுறையாளர்களிடமும் இனவெறியர்களிடமும் ஏகாதிபத்தியங்களிடமும் மதஅடிப்படைவாதிகளிடமும் முதலாளித்துவத்திடமும் காட்டவில்லை. இவர்களது அரசியல் சாதிநீக்க அரசியல் அல்லாமல், சாதிகாக்கும் அரசியலாக ஆகிப் போனது. பிறர்விலக்க இயல்பு என்பது அடையாள அரசியலின் தர்க்க நீட்சி. இதனாலேயே இவர்கள் பிளவுண்டு கிடக்கிறார்கள். இந்த சாதிகாக்கும் அடையாள அரசியலைத் தற்போது ஆதிக்கசாதியினரான கொங்குவேளாளர்கள் வெளிப்படையாக எடுத்திருக்கிறார்கள்.

ஆதிக்க சாதிகாக்கும் அரசியலுக்கு எதிர் அரசியல் என்பது சாதிநீக்க-இடதுசாரி அரசியல் ஒற்றுமையின் மூலமே சாத்தியம். அதற்கான திசை நோக்கி தலித்திய அரசியல் நகர்வதற்கான தடம் தெரியவில்லை. தேர்தல் அரசியலில் தமது சாதிக்கான அதிகாரம் என்பதாகவே அடையாள அரசியல் சென்று அடைந்திருக்கிறது. இதனது பிறிதொரு பரிமாணமாகவே மார்க்சியம் மற்றும் தேசியம் குறித்த விமர்சனமாகத் துவங்கி, சிங்கள பௌத்த அரசதிகாரத்தின் பங்காளியாக இந்த தலித்திய அடையாள அரசியல் இலங்கை நிலைமையில் ஆகியிருக்கிறது.

சேகுவேரா பெயரையும் சொல்லிக் கொண்டு, சுத்தி அரிவாள் கொடியுடன் சிங்கள இனவாதம் பேசுகிற ஜே.வி.பி.குறித்து ஒரு நிiபாட்டுக்கு வருவதற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியிருப்பதை நான் சந்தித்த முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கச் செயலாளர் தோழர்.ச.தமிழ்ச்செல்வன் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சி இப்பிரச்சினையில் தமிழக மக்களிடமிருந்து அந்நியமாகியிருப்பதை தனிப்பட்ட வகையில் நான் பேசிய பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஒப்புக்கொண்டார்கள். இனத்தின் அடிப்படையில் அல்லாவிட்டாலும் ஒரு சர்வதேசியக் கடமையாக போரை நிறுத்த வேண்டுவது தமது கடமையாக இருக்கிறது என்பதனையும் நான் பேசிய தோழர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றுபட்டுச் செயல்படுகிற இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஈழப் பிரச்சினையில் ஒத்த கருத்துக்கு வந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பல தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். சிற்சில நடைமுறைப் பிரச்சினைகள் இருந்தாலும், இலங்கை இனப் பிரச்சினை குறித்து இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆழ்ந்த அக்கறையும் அவதானமும் கொண்டிருக்கிறார்கள். சிக்கலை ஆழ்ந்து பயின்று வருகிறார்கள். சிங்கள இனவாத அரசு, ஜே.வி.பியின் இனவாதம், விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகள் என்பனவற்றை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தத் தெளிவிலிருந்துதான் ‘ தமிழ் மக்களின் மீதான யுத்தத்தை நிறுத்து, அரசியல் தீர்வை முன் வை’ என இலங்கை அரசை அவர்கள் வலியுறுத்திக் கேட்கிறார்கள்.

ஸதாம் குஸைன் ஆட்சிக்கு வந்ததும் கம்யூனிஸ்ட்டுக்களைத் தான் முதலில் வேட்டையாடினான். இந்தக் காரணத்தினால் பாக்தாத் மீது அமெரிக்க மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் குண்டு போட்டபோது கம்யூனிஸ்ட்டுகள் அமெரிக்காவை எதிர்க்காமல் பின்வாங்கியதில்லை. ஹமாஸ் இஸ்லாமியக் குடியரசையும் மத அடிப்படைவாதத்தையும் பேசுவதால், இஸ்ரேல் எனும் பிசாசு காஸாவின் மீது குண்டுபோட்டதை எதிர்க்காமல் கம்யூனிஸ்ட்டுகள் கண்பொத்தி வாளாயிருக்கவில்லை. ‘அரசியல் தீர்வை முன்வை, மக்களைக் கொல்லாதே’ என்றுதான் கம்யூனிஸ்ட்டுகள் குரலெழுப்பினார்கள்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் திசைவழி, போராளி இயக்கங்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் முரண்பாடுகளைக் கையாண்ட வழிமுறைகள் போன்றவற்றில் எமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அரசியல் தீர்வை அரைநூற்றாண்டாக முன்வைக்காத சிங்களப் பெருந்தேசிய அரசு, இப்போது தமிழ் மக்களின் மீது குண்டு போடுகிறது. காஸாவுக்கும் பாக்தாத்துக்கும் புதுக்குடியிருப்புக்கும் மனித அவலம் எனும் அளவில் என்ன வித்தியாசம்? இதனால்தான் ‘இலங்கை அரசே, மக்களைக் கொல்வதை உடனடியாக நிறுத்து, அரசியல் தீர்வை முன்வை’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் தோழர்.தா.பாண்டியன்.

Exit mobile version