அமரிக்க அரசின் யுத்தகளமான பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்ரப் பார்விஸ் கயானி, இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வலைகளைக் கையாள்வதற்காக இந்திய அரசு சீனாவையும் பாகிஸ்தானையும் முன்வைத்து இலங்கையின் அரசுடன் இனச்சுத்திகரிப்பில் ஒன்றிணைகிறது. உலகம் முழுவதும் இவ்வாறு முரண்பாடுகளைக் கையாள்கின்ற புதிய ஒழுங்குவிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இலங்கைப் படையினருக்கு கூடுதல் பயிற்சிகளை வழங்குவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.இராணுவ விவகாரங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் பாகிஸ்தானிடமிருந்து இலங்கையை மீட்கிறோம் என்ற தலையங்கத்தில் இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பிற்கு இந்திய அரசு அத்தனை ஆதரவுகளையும் வழங்கும். பாகிஸ்தான் ஆதரவு வழங்கும் இலங்கை அரசை அழிக்குமாறு தமிழ் இனவாதக் கோமாளிகள் கூச்சலிட மற்றொரு மும்முனைப் போராட்டம் ஆரம்பமாகும். இந்த இடைவெளிக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் இந்திய பல்தேசிய நிறுவனங்களுக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் அபகரிக்கப்படும். ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கும் ஏகபோக அரசுகளின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு அழித்து முடியும்வரை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள் என்று மார்தட்டிக்கொள்பவர்கள்.