Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சனாதிபதி தேர்தலில் என்ன செய்திட வேண்டும்? : பழ றிச்சர்ட்

pala_richardசில காலமாக சனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆருடம் கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தல் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பத்து தினங்கள் கடந்து விட்ட நிலையிலும் சிறுபான்மை மக்களை பிரதிநிதிதுவபடுத்தும் பெரும்பாலான கட்சிகள் நழுவல் போக்கை கடைபிடித்து வருகின்றன. பெரும்பான்மை சமூகத்தை பொறுத்த வரையில் சோபித தேரரும் அவரது ஆலோசகர்களும், மகிந்தவும் அவரது ஆலோசகர்களும், ரணிலும் அவரது ஆலோசகர்களும் என அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவில் இருந்ததோடு, அதன் அடிப்படையில் நீண்டகாலமாக காய்களை நகர்த்தி களத்தில் இறங்கி விட்டார்கள். ஆனால், மிக நீண்ட ஒடுக்குமுறைகளை அனுபவித்து துயருற்று வாழும் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சிகள் முடிவெடுக்க முடியாமல் நழுவல் போக்கை கடைப்பிடிப்பதானது, சிறுபான்மை மக்களை பிரதிநிதிதுவபடுத்தும் கட்சிகளுக்கு முறையான நீண்டகாலக் கொள்கை அடிப்படையிலான வேலைத்திட்டம் இல்லை என்பதை புடம்போட்டு காட்டுகிறது. அல்லது முடிவெடுத்து விட்டு அதனை மக்கள் முன் அறிவிக்கும் தைரியம் இல்லாத மக்கள் விரோத குற்ற உணர்ச்சியை கட்டியம் கூறுகிறது. இந்த புறநிலைமையில், நான் அங்கம் வகிக்கும் கட்சி உட்பட சகல சிறுபான்மை மக்களை பிரதிநிதிதுவபடுத்தும் கட்சிகளுக்கும், மக்கள் சார்பாக நின்று, ஓர் இடதுசாரி செயற்பாட்டாளன் என்ற வகையில் ஒர் பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன் !
அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் மகிந்தவிற்கும், ஏனையோர் மைத்திரிக்குமே ஆதரவளிக்க போகின்றார்கள். இந்த இருவருடன் சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநேகமானவர்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருக்கும், விரைவாக தீர்க்கப்பட வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும், பல நீண்ட அழிவுகளை ஏற்படுத்திய, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இருப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் வெளிக்காட்டாமல் இருப்பதோடு, பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட முழுத்தீவிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவி சிறுபான்மை மக்களின் இருப்பை அழித்தொழிக்கும் பேரினவாதத்திற்கு வெவ்வேறு வழிமுறைகளில் துணைநிற்கின்றார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியும், பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களை தொடர்ச்சியாக நவீன பண்ணையடிமைகளாகவே இருக்க செய்தும், அவர்கள் எந்த வகையிலும் எழுச்சியடையாமல் எல்லா வழிகளிலும் அடக்கி வைத்திருக்கின்றார்கள். சிறுபான்மை மக்களின் உரிமைகளிற்காக, சிறுபான்மை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக, தொழிலாளர்களின் உரிமைக்காக என கோசம் எழுப்பி செயற்படும் கட்சிகள் எந்த வகையிலும் இவர்களுக்கு ஆதரவளிப்பது மக்கள் விரோத நடவடிக்கையே ஆகும்.
இவ்வாறு ஆதரவளிப்பாதானது, ஆண் ஒருவரால் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் ஒரு பெண் அந்த ஆணிற்கு எதிராக வெளியில் குரல் எழுப்பிக் போராடிக் கொண்டே, அந்த ஆணை காதலிப்பதற்கு நிகரான செயலாகும்.
மேலும், சனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் வாக்குறுதிகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதோடு அவர்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த விதமான வேலைத்திட்டங்களையும் முன்வைப்பதும் இல்லை. வாக்குகளிற்காக ஓரிரு வரிகள் உள்ளடக்கப்பட்டாலும் அவை நடைமுறைக்கு என்றுமே வந்ததில்லை. கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும் படிப்பினைகள் இவ்வாறிருக்க எவ்வாறு எதிர்காலத்தில் இது நடக்கும் என்று நம்புவது?
எனவே தங்கள் நீண்ட வரலாற்றில் என்றும் சிறுபான்மை ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக செயற்பட்ட அதற்கு துணை நின்ற மகிந்தவை அல்லது மைத்திரியை ஆதரிப்பதானது, மக்கள் விரோதமானதே ஆகும். அவ்வாறு ஆதரிப்பீர்கள் ஆயின், நீங்கள் மக்கள் முன் கூறும் சிறுபான்மை மக்களின் நலன்கள், சுயநிர்ணய உரிமை, தொழிலாளர்களின் நலன் என்ற கோசங்களை பகிரங்கமாக கைவிட்டு, உண்மையான உங்களின் மகிந்த சரணம் கச்சாமி, மைத்திரி சரணம் கச்சாமி என்ற கோசத்தை முன்வைத்து வாக்கு கேளுங்கள்.
கொள்கை வழியில் செயற்படும் கட்சிகள் தங்களது அனைத்து நடவடிக்கையிலும் அந்த கொள்கையை வெளிக்காட்டிட வேண்டும். அந்த வகையில் சிறுபான்மை கட்சிகள் மகிந்தவை அல்லது மைத்திரியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுப்பதானது, இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழும் செயலே ஆகும்.

என்ன செய்ய வேண்டும்?
அப்படியானால் என்ன செய்வது? தேர்தலை புறக்கணிப்பதா? அல்லது சிலர் சொல்வது போல் இந்த தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு தேவையில்லாத ஒன்றா? அல்லது அற்ப உட்கட்டமைப்பு வசதிகளிற்காக இவர்களுக்கு வாக்களித்து பேரினவாதத்தின் முன் நிர்வாணமாக நிற்பதா?? அல்லது நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிப்பதற்கான வாக்களிக்க வேண்டுமா?
ஐக்கிய இலங்கையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் மண்டியிட்டு சத்திய கடதாசி வழங்கியவர்களுக்கு, சிறுபான்மை மக்களிற்கு இது தேவையற்ற தேர்தல் என்று சொல்ல எந்த தகுதியயும் இல்லை. இந்த தேர்தல் நடப்பதும், அந்த தேர்தலில் தெரிவு செய்யப்படுபவர், செயற்படுவதும், வெற்றி பெறுபவர் மக்களை அடக்கி ஆள்வதும், நாம் பருப்பிற்கு 30 ரூபாய், டீசலிற்கு 120 ரூபாய், சீனிக்கு 33 ரூபாய், எரிவாயுவிற்கு 1250 ரூபாய் என அனைத்து பாவனை பொருட்கள், சேவைகள் ஊடாக செலுத்தும் மறைமுக வரி மூலம் கிடைக்கும் பணத்தில் தான், எனும் போது எப்படி இந்த தேர்தல் எமக்கு சம்பந்தமில்லாத தேர்தலாகும்? இந்த தேர்தலில் தெரிவு செய்யப்படும் நபர் படைப்பிரிவின் தலைவராக செயற்பட்டு மக்களை அடக்கி ஆள்பவர் எனும் போது, எமது மண்ணில் பௌத்த விகாரை தவிர வேறெந்த வழிப்பாட்டு தலங்களும் இந்த நபரின் அனுமதி இல்லாமல் அமைக்க முடியாது (அரசியலமைப்பின் 386 வது பிரிவு) என்றளவிற்கு சிறுபான்மையினரை அடக்கி ஆளும் உரித்துகளை பெறுகின்றார் எனும் போது எவ்வாறு இந்த தேர்தல் எவ்வாறு சம்பந்தமில்லாத தேர்தலாகும்?? ஆகவே புறக்கணிப்பு என்பது எமது தேவைகளையும் அபிலாசைகளையும் வெளிபடுத்தும் சந்தர்ப்பத்தை தவறவிடும் முட்டாள் தனமே ஆகும்.
அற்பமான உட்கட்டமைப்பு வசதிகளிற்காக மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். மகிந்த அவரது, மெதமுல்லையில் தேங்காய் விற்ற பணத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை செய்வார் என்றால் இப்படி சொல்வதில் நியாயம் இருக்கின்றது. இந்த அபிவிருத்திகள் அனைத்தும் எம் வரிபணத்தின் மூலமும், கடன்கள் பெறுவது மூலமுமே மேற்கொள்ளப்படுகின்றன. அந்த கடன்களும் அதற்கான வட்டியும் எமது வரி பணத்தின் மூலமே செலுத்தப்படும். அடுத்த வருடம் அரசாங்கம் பெறப்போகும் கடனுடன் சேர்த்து அண்ணளவாக ஒவ்வொரு பிரசையும் ஐந்து கோடி ரூபாய் கடனாளி ஆகின்றார். அவ்வாறாயின் அபிவிருத்தியை பெறும் உரிமை வெற்றி பெறுபவர்க்கு வாக்களித்தால் தான் கிடைக்குமா? அது உரிமை. அது எமக்கு கிடைத்தே ஆக வேண்டும். அதற்காக மாத்திரம் வாக்களித்து எம் கோவணத்தையும் மகிந்தவிடம் கழற்றி கொடுப்பதா??? உங்கள் வங்குரோத்துக்கு மக்களை பலிகடாவாக்கலாமா??
நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்கும் கோசம், அந்த முறை அறிமுக படுத்தப்பட்ட காலத்திலிருந்தே எழுப்பப்படுகிறது. இதனை ஒழிக்கின்றேன் என்றே சந்திரிக்காவும் கூறினார், மகிந்தவும் கூறினார். ஆனால் நடக்கவில்லை. தற்போது வேறுபட்ட நிலை என்று எவரும் சொல்வார்கள் என்றால் கூட, மகிந்தவும், மைத்திரியும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக தானே கூறுகின்றார்கள். அப்படியானால் யார் வென்றாலும் இது நடக்க தானே வேண்டும்? உண்மையில் நிறைவேற்று அதிகாரம் என்பது பாதுகாப்பு படையை கட்டுபடுத்தும், அதற்கு கட்டளையிடும் அதிகாரமாகும். இந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும் போது மாத்திரமே நிறைவேற்று அதிகாரம் உண்மையில் ஒழிக்கப்படும். ஆனால் சொல்லி வைத்தாற் போல் மகிந்தவும், மைத்திரியும் இந்த அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க போவதில்லை என்றே கூறுகின்றார்கள். எனவே குறைந்தபட்சம் நிறைவேற்று அதிகாரத்தில் சில சீர்த்திருத்தங்கள் செய்யப்படலாம் அல்லது பெயர் மாற்றப்படலாம். அதற்கு மேல் ஒன்றும் நடக்காது. இந்த ஏமாற்று தனத்திற்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும்.
ஆட்சி மாற்றம் என்பது அவசியமானதே. தனி குடும்பத்தின் அதிகாரம் ஒழிக்கப்படவேண்டும். அதனை செய்ய வேண்டிய கடப்பாடு, அதனை உருவாக்கி விட்டவர்களையே சாரும். காரணம் மகிந்தவிற்கு மாற்றாக முன்வந்திருப்பவர்கள், சிறுபான்மை மக்களின் மீதான ஒடுக்குமுறையை வேடிக்கை பார்ப்பவர்களாக மகிந்த செய்தததை தொடர்பவர்களாக இருக்கும் போது சிறுபான்மை இனத்தவர்களால் அவர்களை ஆதரித்திட முடியாது. இன்றைய நிலையில் பேரினவாத கட்சிகள் இரண்டும், ஒரே நபர்கள் மாறி மாறி அங்கம் வைக்கும் ஒரே கொள்கை உடைய கட்சிகளே ஆகும். அதனை விட எதிர் முகாமில் இருப்பவர்கள் சிறுபான்மை மக்கள் மீதான அழித்தொழிப்பிற்கு எதிராக குறிப்பாக தமிழ் மக்கள் யுத்தத்தில் திட்டமிட்டு கொல்லப்பட்ட போது எதிர்பெதனையும் வெளிக்காட்டாமல் ஆதரவு கொடுத்தவர்கள். உண்மையை சொல்ல போனால், சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது எதிர்த்து போராடி ஜெனீவா சென்ற, பலஸ்தீன மக்களிற்காக குரல் எழுப்பிய மகிந்த எதிர்கட்சியில் இருந்திருந்தால், யுத்தத்தில் நடந்த அநீதிகளுக்கு எதிராக குறைந்த பட்ச அளவிலேனும் குரல் கொடுத்திருப்பார் என்பது என் நம்பிக்கை ஆகும். அந்த மகிந்தவே இவ்வாறு என்றால், மைத்திரி அல்லது அந்த பாசறையின் ஏனையவர்கள் எப்படி செயற்படுவார்கள் என்று ஊகிப்பது கடினமல்ல. எனினும் இன்றைய சூழலில் தேர்தல் முடிவுகளுடன் தங்கள் செயற்பாடுகளை முடித்து கொள்ளும் நிலையில் இரண்டு பேரினவாத முகாம்களும் இல்லை. தேர்தலிற்கு அப்பால் கண்டிப்பாக செயற்பட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றார்கள். ஆகவே தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழாவிட்டாலும் அதற்காக எதிரணி செயற்பட்டே ஆகவேண்டும். ஆகவே சிறுபான்மை கட்சிகள் ஆட்சி மாற்றம் குறித்து கவலைக் கொள்ளாது, அதனையூம் தாண்டி சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவே சிந்திக்க வேண்டும்.
தேர்தல் என்பது எமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடப்பது. அந்த தேர்தலில் எமது அபிலாசைகளை வெளிபடுத்திட வேண்டும். தேர்தலில் அவ்வாறு அபிலாசைகள் வெளிபடுத்தப்பட வேண்டுமாயின் அதனை தங்கள் கொள்கையாக கொண்டு செயற்படும் கட்சி, வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் மாத்திரமே செய்திட முடியும். அவ்வாறான கட்சிகளும், வேட்பாளர்களும் இல்லாத பட்சத்தில் எமது வாக்குகளை நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக அளிக்கலாம்.
யார் அந்த வேட்பாளர்?
எனினும் இந்த தேர்தலில் அவ்வாறான வேட்பாளரை இனங்காண்பது, அரசியலில் ஒரளவு ஆர்வம் உடைய எவருக்கும் கடினமானதல்ல. யார் அந்த வேட்பாளர்? சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், அவர்கள் மீதான வன்முறைகளிற்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளிற்காகவும், சமத்துவத்திற்காகவும் அன்றும், இன்றும் என்றும் குரல் கொடுத்து வரும் ஐக்கிய சோசலிச கட்சியின் சார்பில் முச்சக்கர வண்டி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரியவே அவர் என்பது போட்டியிடும் வேட்பாளர்களை அவதானிக்கும் எவராலும் முடிவு செய்யக் கூடியதொன்றாகும். இடதுசாரி முற்போக்காளரான இவர், இவரது முழுவரலாற்றிலும் எவ்வித தனிப்பட்ட பிரதிபலனும் எதிர்பாராமல் சிங்கள பேரினவாதத்தின் முன் சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளிற்காகவும், சிறுபான்மை மற்றும் தொழிலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருபவர் ஆவார்.
ஏனைய இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன?
சிறிதுங்க ஜெயசூரியவை விட மேலும் சில இடதுசாரிகளும் போட்டியிடுகின்றனர். அவர்களில் என்றும் கொள்கையளவில் அடக்கி ஆளும் பேரினவாதத்தின் பக்கம் நின்ற,நிற்கும் தேசியவாத இடதுசாரிகளான முன்னிலை சோசலிச கட்சி தலைமை வகிக்கும் இடதுசாரி முன்ணனி ஒன்றாகும். இவர்களுடனே சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்கும், விக்ரமபாகு கருணாரத்னவும் நிற்கின்றார். சிறுபான்மை மக்கள் இந்த இடதுசாரி முன்ணனியை ஆதரிக்க மாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே, இவர் போட்டியிடாமல், தனியாக கட்சி சார்பில் சுந்தரம் மகேந்திரன் என்ற வேட்பாளரை களமிறக்கி உள்ளார். இவரின் இந்த நிலைப்பாடானது இதுவரை காலம் இவர் மீது இருந்த நம்பக தன்மையை இழக்க செய்துள்ளது. சோசலிச சமத்துவ கட்சியினரை பொறுத்த வரை, இதுவரை காலமும் சிங்கள மக்கள் மத்தியில் தைரியமாக அவர்களது கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் கூற முயற்சிகளை எடுத்ததில்லை.
சிறிதுங்க ஜெயசூரியவிற்கு வாக்களிப்பதால் என்ன நடந்திடும்?
ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் தோழமை சக்திகளை பலப்படுத்த தவறும் தவறையே, இது வரை செய்து வந்துள்ளார்கள். எமக்காக எதிரியின் கோட்டையில் நின்று குரல் கொடுப்பவர்களை ஆதரித்து அவர்களை பலப்படுத்துவதானது அவர்களை மென்மேலும் உத்வேகத்துடன் செயற்பட வைக்கும். எமக்கான குரலை எதிரியின் கோட்டையில் மேலும் உத்வேகத்துடன் ஒலிக்க செய்யும்.
சிறுபான்மை இனங்கள் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமையை கோருவார்களாயின் நிச்சியமாக தேர்தலில் அதனை வெளிப்படுத்திட வேண்டும். சுயநிர்ணய உரிமையை வலியூறுத்தி வரும் சிறிதுங்க ஜெயசூரியை ஆதரிப்பதன் மூலம் இந்த தேர்தலில் எமது சுதந்திர வேட்கையின் மீதான விட்டுகொடுப்பின்மையையும், சமரசமின்மையையும் வெளிப்படுத்த வேண்டும். தரமறுக்கிறார்கள் என்பதற்காக கேட்காமல் விடுவது, ஒரு வகையில் தரவேண்டாம் என்று சொல்வதே ஆகும். இது வரை செய்த அந்த தவறை இனியும் செய்யாமலிருக்க வேண்டுமாயின் அதற்கான வழி முச்சக்ரவண்டி சின்னத்திற்கு வாக்களித்து சிறிதுங்க ஜெயசூரியை பலப்படுத்துவதாகும்.
நல்லிணக்கம், ஐக்கியம் குறித்து கதைக்கபடும் சூழலில், அது வலிந்து திணிக்கப்படும் நிலைமையில், நாம் யாருடன் எவ்வாறானவர்களுடன் நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த தயாராக இருக்கின்றோம், என்ற செய்தியை, எமது உரிமைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக குரல்கொடுப்பவர்களுடன் மாத்திரமே நல்லிணக்கத்தை, ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்ற செய்தியை சிறிதுங்கவிற்கு வாக்களிப்பதின் மூலம் உரக்க சொல்லிட வேண்டும்.
வாக்களிக்காமல் விட்டதின் மூலம், பொன்சேகாவிற்கு வாக்களித்ததின் மூலம், மகிந்தவிற்கு வாக்களிப்பதின் மூலம் அல்லது வாக்களிக்காமல் விட்டதின் மூலம் அல்லது மைத்திரிக்கு வாக்களிப்பதின் மூலம், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யாமல், இந்த தேர்தலில் மேற்கூறிய காரணங்களிற்காக நாம் சிறிதுங்கவை ஆதரிக்கும் முடிவை உறுதியுடன் எடுத்திட வேண்டும்.
யாரேனும் ஒருவரை வெற்றி பெற வைப்பதற்காக அல்லது சிறுபான்மை மக்களிற்கு கிடைக்காத நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அல்லது அற்பத்தனமான சலுகைகளிற்காக சிறுபான்மை கட்சிகள் முடிவுகளை எடுக்காமல் நீண்ட காலநோக்கில் மக்களின் சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில் தூர நோக்குடன் குறுகிய இலாப நோக்கங்களை கருதி செயற்படாது உறுதியான சரியான முடிவினை, சிறுபான்மை கட்சிகள் எடுக்க வேண்டும். முடிவெடுத்தவர்கள் மீள சிந்திக்க வேண்டும், என மேலே கூறிய கருத்துகளின்பால் நின்று மக்கள் சார்பாக இந்த கோரிக்கையை பகிரங்கமாக விடுக்கின்றேன். உண்மையாக மக்களிற்காக செயற்படுபவர்கள், கோப்புக்கள் இல்லாதவர்கள் ஒரே ஒரு முறையேனும் மக்களிற்காக சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில் முடிக்கின்றேன்.
நன்றி
பழ றிச்சர்ட்
இடதுசாரி செயற்பாட்டாளர்.

Exit mobile version