மாணவர்களை விடுதலை செய்தால் அவர்கள் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பிரச்சனைகளைத் தூண்டுவார்கள் என்றும் அதனால் புனர்வாழ்வு பூர்த்தியான பின்னரே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கட்டளைத் தளபதி மாணவர்களை விடுதலை செய்யமுடியாது என்று கூறியதும் பெற்றோர் முழங்காலில் மண்டியிட்டுக் கெஞ்சியதாகவும், அதனைக் கண்டுகொள்ளாமல் திரும்பிச் சென்றார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்கலைகழகம் திறக்கப்படுகிறதோ இல்லையோ, புனர்வாழ்வு முடிந்ததாக தாம் கருதும் பட்சத்திலேயே தாம் மாணவர்களை விடுதலை செய்வோம் என இராணுவத் தளபதி திமிரோடு தெரிவித்தார்.
உலகில் மற்றைய தேசிய இனங்களின் இயல்பிற்கு மாறாக உலகம் முழுவதிலும் தமது நீட்சிகளைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் அழிவுக்குள்ளான அரசியலையும், குறுக்குவழிகளையும், இனவாதத்தையும் கையிலெடுத்துக்கொண்டு பழம் பெருமைகளைப் பேசியே காலத்தைக் கடத்த பேரினவாதம் தனது அழிப்பை தடையின்றி நடத்துகிறது. சிறீ ரெலோ அலுவலகத்திற்கு குண்டு வீசியதாகப் போலிக் குற்றம் சுமத்தப்பட்டு கைதான மாணவர்கள் இன்று புலி உறுப்பினர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
சமூகத்தின் அறிவின் உயர்பீடமாக முதலாளித்துவ நிறுவனங்களே நிராகரிக்காத பல்கலைக்கழகம் குறித்து உலகின் கொடிய இராணுவங்களில் ஒன்றான இனப்படுகொலை இராணுவத்தின் தளபதி முடிவெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.