இந்தப் பகுதியில் இனியொரு… இன் பிரதான கருத்தியலுக்கு முழுமையாக உடன்பாடற்ற, முழுமையான தொடர்பற்ற அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்கள் பதியப்படுகின்றன. விவாதத்தை நோக்கமாகக் கொண்டு கருத்துக்களைச் செழுமைப்படுத்தும் நோக்கில் இப் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன்,நீ அழுகிறமாதிரி அழு “,ஷோபாசக்தி என்கிற எழுத்தாளர் இந்த விடயத்தில் பலே கில்லாடியாக வலம் வருபவர். வழமையான இந்த விளையாட்டை வெளிநாட்டில் நடந்து வருகின்ற இலக்கிய சந்திப்பு விடயத்திலும் காட்ட வெளிக்கிட்டு விட்டார். இவருக்கு இலக்கிய சந்திப்பு இலங்கையில் நடாத்தப்பட வேண்டும். “அரசுடைய அராஜகங்களின் முன் வாய் பொத்தி நிற்பதும் இன்னுமொரு படி கீழிறங்கி இலங்கை அரசுக்கு இடதுசாரிப் பாத்திரத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாராட்டுப் பத்திரத்தையும் இந்த இணக்க அரசியலாளர்கள் வழங்குவது மக்களுக்குச் செய்யும் மோசமான துரோகமாகும்.” என சொல்லிக்கொண்டே இங்கு கொடூர மகிந்தவின் ஆட்சி நடக்கிறது.ஆகவே தன்னால் போக முடியாது, ஆனால் இலக்கிய சந்திப்பு இலங்கையில் நடந்தே ஆக வேண்டும் என்பார்.
அதுவும் தனது பிறந்த நாள் பரிசாக, “தோழர்களே இதைவிட தனது பிறந்த நாள் பரிசாக எதனை எனக்கு தரப்போகிறீர்கள்? “ என தனது முகநூலில் இப்படியொரு மகிழ்ச்சி பொங்கும் கருத்தும் இட்டு ,இலக்கிய சந்திப்பு இலங்கையில் நடைபெற ஆதரவு தெரிவித்த ஷோபாசக்தி , இங்கிருந்து வெளிவரும் ஞானம்’ சஞ்சிகைகைக்கு அளித்துள்ள பேட்டியை படித்ததும் எனக்கு தலை சுற்றி வருகிறது, தம்பி ஷோபாசக்திக்கு வர வரவருத்தம் கூடி வருவது நன்கு தெரிகிறது.
இலங்கையில் இலக்கிய சந்திப்பு நடைபெற ஆலோசனை குழுவில் அங்கம் பெற்ற ஷோபாசக்தி, இப்படியொரு கில்லாடி வேலையை செய்து அவரது நண்பர்களின் அரசியல் முகத்தினை கிழித்திருக்க தேவையில்லை. இதிலும் பலே கில்லாடி ஷோபாசக்தி.
இங்கு இலக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது,ஷோபாசக்தி மற்றும் வெளிநாட்டிலிருந்து கணபேர் வரப்போறாங்கள் என கதைவிட்டு கொண்டு ஆள்பிடிக்கும் ஆட்களுக்கு ஷோபாசக்தியின் பேட்டி பலத்த அடிதான். இலக்கிய சந்திப்பு குழுவில் உள்ள தம்பி (ஷோபாசக்திக்கு)கர்ணனிடம் இது என்ன எனக் கேட்டால்
கர்ணன் மேலும் கீழும் முழிக்கிறார். அவர முழிய பார்த்தால் அண்ண அப்பிடித்தான் கதைப்பார் என்கிற மாதிரி இருக்கிறது.
சரி இந்த ஷோபா சக்தி ஞானம்’ சஞ்சிகைகைக்கு என்ன சொல்லியுள்ளார் எனப்பார்ப்போம், அதுவும் இந்தப்பேட்டியை யாருக்கு கொடுத்துள்ளார் எனப்பார்த்தால் கடந்த இரண்டு வருசத்திற்கு முன் தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நாடாத்திய முருகபூபதிக்குத்தான். ஏன் நான் இந்த பேட்டியை இங்கு கோடு காட்டுகிறேன் என்றால் நீங்களும் நாலு வார்த்தை எழுதவேண்டும் என்பதுடன் பலே கில்லாடியின் இரண்டு முகங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் ,இனி கேள்வியையும் பதிலையும் வாசியுங்கள்.
௦. தங்களது அல்லைப்பிட்டி கிராமம் பற்றி சொல்லுங்கள்? எப்போது தாயகம் திரும்புவீர்கள்?
எனது கிராமம் யாழ் நகரத்திலிருந்து மூன்றரைக் கிலோ மீற்றர்கள் தொலைவிலிருக்கிறது. மிகவும் பின்தங்கிய தீவகக் கிராமம்.யுத்தத்தால் அல்லைப்பிட்டிக் கிராமம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மூன்று மிகப்பெரிய கூட்டுப் படுகொலைகளை எனது கிராமத்தில் இராணுவம் செய்திருக்கிறது. இப்பொழுதும் எனது கிராமம் இராணுவத்தின் கைகளிலேயே இருக்கிறது.
தாயகம் திரும்ப வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் கனன்றுகொண்டேயிருக்கிறது. எனினும் சிங்கள ஊடகவியலாளர்களே மகிந்த ராஜபக்ச அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளிற்குத் தப்பி ஓடி வருகையில் நான் அங்கு செல்வது எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி எனக்குள் இருக்கின்றது. ஏனெனில் ஒரு சுற்றுலாப் பயணியாகாவோ அல்லது வாய் பேசாப் பிராணியாகவோ இலங்கைக்கு வர எனக்கு விருப்பமில்லை. நான் அகதியாக அய்ரோப்பாவுக்கு வருவதற்கு என்ன காரணங்களிருந்தனவோ அதே காரணங்கள் இப்போதும் நீடிக்கின்றன.
அரசின் இத்தனை ஒடுக்குமுறைகளிற்கும் கண்காணிப்புகளுக்குள்ளும் இருந்துகொண்டு எந்த அரசியல் பின்பலமோ அமைப்புப் பலமோ இல்லாமல் உண்மைகளை எழுதிவரும் தோழர்களை நான் மரியாதையுடன் வணங்குகிறேன். அவர்களை நான் தாயகத்தில் சந்திக்க வாய்ப்பிருப்பதைக் காட்டிலும் அவர்கள் என்னை அய்ரோப்பாவில் சந்திப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் கருதுகிறேன்.
௦. தமிழர்கள் யூத இனத்தவர்கள் போன்று தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்ளத் தவறிவிட்டார்கள் என்று தமிழ் புத்திஜீவிகள் சொல்லிவருகின்றனர். இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ முடியாதா? இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?
சிங்களப் பெரும்பான்மை இனத்துடன் ஏனைய சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்வதென்பது சிங்கள இனத்தவர்களின் கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. சிங்கள மக்களுக்குள்ள அரசியல், பொருளியல், பண்பாட்டு உரிமைகள் ஏனைய இனங்களிற்கும் நீதியுடன் பகிரப்பட்டால் மட்டுமே ஒற்றுமை சாத்தியாகும். சிறுபான்மை இனங்களின் தனித்துவமான மொழியும் பண்பாடும் பாரம்பரிய நிலமும் பெரும்பான்மை இன அரசால் சிதைக்கப்படக் கூடாது.
இலங்கையின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனங்களின் மீது இன வெறுப்பைக் கக்குவதை நிறுத்துவதே இனங்களிற்கிடையேயான ஒற்றுமைக்கான முதல் நிபந்தனை.
தமிழர்களோ மற்றைய சிறுபான்மை இனங்களோ பெரும்பான்மை இனத்தின்மீது அரசியல் ஐயுறவு கொள்ளவும் பிரிந்து செல்வது குறித்து யோசிக்கவுமான காரணங்களை இலங்கை இனவாத அரசுகளே உருவாக்கின. அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியேதானுள்ளன.
இப்போது ‘இணக்க அரசியல்’ என்றொரு சொல்லாடல் சில தமிழ் அரசியற் தரப்புகளால் முன்வைக்ப்படுகிறது. அரசுடன் இணங்கி மக்களிற்கான அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். அரசிடமிருந்து அபிவிருத்தித் திட்டங்களையும் சமூகநல உதவிகளையும் பெறுவது மக்களது அடிப்படை உரிமை. அதைச் செய்து கொடுக்க வேண்டியது அரசுடைய கடமை.
இந்த அபிவிருத்திட்டங்களிற்காக அரசினுடைய இனவாதப் போக்கைக் கண்டுகொள்ளாமலிருப்பதும் அரசுடைய அராஜகங்களின் முன் வாய் பொத்தி நிற்பதும் இன்னுமொரு படி கீழிறங்கி இலங்கை அரசுக்கு இடதுசாரிப் பாத்திரத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாராட்டுப் பத்திரத்தையும் இந்த இணக்க அரசியலாளர்கள் வழங்குவது மக்களுக்குச் செய்யும் மோசமான துரோகமாகும்.இணங்கி வாழ்வதற்கும் அடிமைகளாக வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகளுள்ளன. கைளில் விலங்குடன் இன்னொருவருடன் கைகளைக் குலுக்கிக்கொள்ள முடியாது.
இலங்கையிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 150வது இதழில் (நவம்பர் 2012) வெளியாகிய எனது நேர்காணல். மின்னஞ்சல் வழியே நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி.(ஷோபாசக்தியின் இணையத்தில் இந்த பேட்டியின் முழுமையையும் வாசிக்க முடியும்)
இந்த நிலைப்பாடு கொண்ட ஷோபாசக்தி இலங்கையில் இலக்கியசந்திப்பு குழுவில் எப்படி ஆலோசகராக இருக்கமுடியும்?இதனைத்தான் நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன்,நீ அழுகிறமாதிரி அழு என்பதா?
இலக்கிய சந்திப்பு தொடர்பாக தேடிப்பார்த்ததில், அங்கிருந்து இலக்கிய சந்திப்பினை கொண்டு வருவது ஒரு வில்லங்க நோக்கத்துடன்தான் என நான் நம்புகிறேன். வெளிநாட்டில் இருந்து கொண்டும், இங்கும் வந்தும் இதுவரை எங்கட காதில பூ சுத்தினது போதும். ஷோபாசக்தியின் வில்லங்க விளையாட்டிற்கும் சேர்த்துத்தான்.
அதுசரி இலங்கையில் இலக்கிய சந்திப்பினை நடாத்த வேண்டுமென மல்லுக்கு நிற்கும் நண்பர்களிடம் ஒரு கேள்வி. ஷோபாசக்தியின் இந்த பேட்டி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?