ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்கும் எழுவரில் பேரறிவாளன் பரோலில் இருக்கிறார். இந்நிலையில் நளினிக்கும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று வேலூர் சிறையில் இருந்து நளினி வெளியில் வந்தார்.
1991-ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதையடுத்து முருகனோடு கைது செய்யப்பட்ட நளினிக்கு சிறையில் குழந்தை பிறந்தது. அவரது தாய் பத்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து முன்னர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இப்போது சுகவீனமுற்றிருக்கும் தன் தாய் பத்மாவை கவனித்துக் கொள்ள நளினி பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கும் நடந்த நிலையில் தமிழ்நாடு அரசு அவருக்கு பரோல் வழங்க முடிவெடுத்தது. அதனையொட்டி இன்று சிறையில் இருந்து நளினி விடுதலையாகி இருக்கிறார்.
எழுவர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை முடிவின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் திமுக அமைச்சரவை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.