கடந்த வாரம் பருத்தித்துறையைச் சேர்ந்த முன்னாள் பேக்கரி உரிமையாளர் ஒருவர் டிப்பர் கனரக வாகனத்தினால் மோதிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த படுகொலைச் சம்பவமானது இன்னொருவரை படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டதாகவும், குறித்த நபர் அன்று வருகை தராத காரணத்தினால் குறித்த பேக்கரி உரிமையாளர் டிப்பரினால் மோதி படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவமானது, பருத்தித்துறை மதுபான விற்பனை நிலையத்தில் நடைபெற்றுள்ளதுடன், சம்பவத்தின் சூத்திரதாரியான நபர், திடீரெனச் சென்று டிப்பர் வாகனத்தை மது அருந்திக்கொண்டிருந்த கூட்டமொன்றுடன் மோதினாலும், மற்றயவர்கள் தப்பியோடியுள்ளனர்.
குறித்த படுகொலையின் சூத்திரதாரியை காவல்துறையினர் கைதுசெய்திருந்தாலும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட குறித்த முன்னாள் பேக்கரி உரிமையாளர் மூன்று பிள்ளைகளின் தந்தையார் என்பதுடன், மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட நிலையிலேயே குறித்த குடும் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையிலேயே இப்படுகொலைச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
இக்குடும்பத்தினரால் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தாக்கல் செய்வதற்கு இயலாத நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படாத நிலையில், குற்றவாளி தப்பிக்கும் நிலையே உருவாகும்.
இலங்கை குற்றவியல் சட்டத்தின்படி, திட்டமிட்ட படுகொலை மேற்கொள்ளும் நபர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக குறித்த நபருக்கு மரணதண்டனையோ அல்லது நீண்ட கால சிறைத்தண்டனையோ வழங்கப்பட்டு வருகின்றது.
பாதிக்கப்பட்ட இக்குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
அண்மைக்காலமாக மக்கள் தமது விரோதங்களையோ, முன்கோபங்களையோ தீர்த்துக்கொள்வதற்கு கொலை செய்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்வதுடன், அக்கொலைகளை இன்னொருவரை வைத்தோ, அல்லது இன்னொரு கும்பலினூடாகவோ செய்து வருகின்றனர்.
இதற்கு அனைத்து மக்களும் உடந்தையாக இல்லாவிட்டாலும், நாட்டில் வாழ்கின்ற இளம் தலைமுறையினரிடம் இக்கலாச்சாரம் மேலோங்கிக் காணப்படுகின்றது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றபோதிலும், குறிப்பாக போதைப்பொருள் கலாச்சாரம், தென்னிந்தியச் சினிமாவின் தாக்கம், அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளே முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.