Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பயங்கரவாதத்தின் முகங்கள்! : கே. செல்வப்பெருமாள்

21ஆம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் அஜண்டாக்களில் ஒன்றாக பயங்கரவாதம் முன்னுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2001ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது மும்பையில் நடைபெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதலால் உலக மக்கள் பயங்கரவாதத்தின் கோரப் பிடியில் – அதன் சிக்கலான வலையில் சிக்கிக் கொண்டுள்ளதை காட்டுகிறது.

பயங்கரவாதத்திற்கு நாடுகளோ – எல்லைகளோ கிடையாது. அது எல்லைத் தாண்டும் கொடூர நோயாக வளர்ந்துள்ளது. மொத்தத்தில் பயங்கரவாதிகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலை உலகு தழுவியதாக அமைத்துக் கொண்டுள்ளதைத்தான் 21ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிரூபிக்கின்றன.

இதில் ஒன்றிரண்டு தாக்குதல்களை இந்த நேரத்தில் நினைவு கூர்வதும் பொருத்தமாக இருக்கும். இதில் 9/11 என்ற அடையாளமே பயங்கரவாதத்தின் குறியீடாக மாறியுள்ளதிலிருந்தே, பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த குரூரத்தை – அவர்கள் எப்படியெல்லாம் ஊடுருவ முடியும் என்பதை காட்டுவதாக அமைந்தது.

2002ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் – பாலியில் வெளிநாட்டு பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் செயலுக்கு பின் அல்கய்தாவின் கையிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், அதே ஆண்டு ரஷ்யாவில் – மாஸ்கோவில் உள்ள தியேட்டரை கைப்பற்றிக் கொண்ட செச்சென்ய பயங்கரவாதிகள் மக்களை பணய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

2002ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் அல்கயிதா தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

2004ஆம் ஆண்டு ஸ்பெய்னில் – மாட்ரிடில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 191 பேர் உயிரிழந்ததோடு 2000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இடா என்ற அமைப்பு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இவை அத்தனையையும் விட உலக மக்களின் இதயத்தை உலுக்கிய தாக்குதல் ரஷ்யாவில் – பெஸ்லேனில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மிகக் கொடூரமானது. குறிப்பாக இந்த பயங்கரவாதிகள் பள்ளி ஒன்றினை கைப்பற்றிக் கொண்டு – மாணவர்களை பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு கொலை வெறித்தாண்டவத்தை நடத்தினர். இதில் மட்டும் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர்.

இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பது மும்பை தாக்குதல். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

மேற்கண்ட ஒரு சில பயங்கரவாதத் தாக்குதல்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இன்றைக்கு பயங்கரவாதிகள் எந்த அளவிற்கு நாடுகளைக் கடந்து தங்களது கொலைவெறி நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க முடியும்.

குறிப்பாக, அல்கயிதா பயங்கரவாதம், சங்பரிவார பயங்கரவாதம், இடா பயங்கரவாதம், செச்சென்ய பயங்கரவாதம், எல்.டி.டி.ஈ, பயங்கரவாதம் என எதை எடுத்துக் கொண்டாலும் – அவர்களது நோக்கமும், குறிக்கோளும் வேறு வேறாக இருந்தாலும், பல்வேறு மதம் மற்றும் இனங்களைச் சார்ந்த அமைப்புகளாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் பின்பற்றும் வழிமுறை ஒரே வகையானது. அதாவது இவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்துவது அப்பாவி பொதுமக்களைத்தான். ஆயுத பாணிகளான இவர்கள் தங்களது குறிக்கோளை அடைவதற்கு நிராயுத பாணிகளான அப்பாவி பொதுமக்களை, ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகளை தங்களது இலக்காக வைத்து செயலாற்றுவதுதான். உண்மையில் இந்த பயங்கரவாதிகளை பெரும் கோழைகள் என்றே அழைக்க முடியும். அதாவது இவர்களது எதிரிகளாக கருதும் ஆட்சியாளர்களின் படைகளை நேரடியாக எதிர்த்து நிற்க முடியாத கோழைகள். பொது மக்கள் மீது தாக்குதல் தொடுத்து தங்களது கோரிக்கைகளையும், எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று துடிக்கும் பாசிச எண்ணம் கொண்டோராகவே இருக்கின்றனர்.

இந்த மாதிரியான பயங்கரவாதச் செயல்களை செய்வதற்கு பல ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டு – திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபடும் வாலிபர்களின் மூளைகளை நன்றாக மூளைச் சலகை செய்து, இவர்களது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் ஒரு தத்துவார்த்த முலாமை பூசுகின்றனர். பொதுவாக இசுலாமிய பயங்கரவாதத்திற்கு (உண்மையான இசுலாமியர்கள் இதனை விரும்புவதில்லை) ஜீகாத்திற்கு – புனித போர் என்ற பெயர் சூட்டி, அது அல்லாவின் பெயரால் – கடவுளின் பெயரால் நடத்தப்படுவதாகவும், அது கடவுளின் பணி என்று அதற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்து அதன் பெயரால் அப்பாவி பொது மக்களை கொல்லும் நாசகரச் செயலில் ஈடுபடுத்துகின்றனர்.

இதேபோல்தான் இந்துத்துவாவாதிகளும் ராமரின் பெயராலும், மதத்தின் பெயராலும், இந்து மதத்தின் புனிதத்தை காக்கப்போவதாகவும் கூறிக்கொண்டு தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இன்னொரு மதத்தை எதிரியாக கற்பித்து – மதவெறியைத் தூண்டி கூட்டுப் படுகொலைகளை நடத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தற்போது எழுந்துள்ள இந்துத்துவா பயங்கரவாதம் என்பது அரசியல் ரீதியாகவும், சதிச் செயல்களின் வாயிலாகவும் நிறைவேற்ற முயலும் அபாயத்தை இந்திய மக்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இப்படித்தான் எல்.டி.டி.ஈ.யினர் இனத்தின் அடிப்படையிலும், தமிழினத்திற்காக சிங்கள இனத்திற்கு எதிராக மட்டுமின்றி, அந்த அமைப்பை யார் எதிர்த்தாலும் அவர்களை அழித்து விட வேண்டும் என்ற வெறியோடு செயல்பட்டு இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட, பல தமிழ் அமைப்புகளின் முன்னணித் தலைவர்களையும் தனது பயங்கரவாதச் செயலால் படுகொலை செய்ததையும், தனது பகுதியில் உள்ள இசுலாமியத் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றிதையும் காண முடியும்.

அதேபோல் பயங்கரவாதிகளின் முகங்கள் பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தாலும், ஒரு பயங்கரவாதத்திற்கு இன்னொரு பயங்கரவாதம் நடைமுறையில் உதவுவதை காண முடியும். அதாவது இந்துத்துவா பயங்கரவாததிற்கு எதிராக தோன்றியதே இசுலாமிய பயங்கரவாதம், அல்கயிதா பயங்கரவாத்திற்கு எதிராக தற்போது தோன்றியுள்ளதோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதம்… என ஒரு தொடர் சங்கிலி இணைப்பு உள்ளது. மொத்தத்தில் இந்த பயங்கரவாதிகளுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறது. அல்லது எதிரிகளை இவர்களே திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என்பது இதற்குள் ஒளிந்துக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த பயங்கரவாதிகள் அனைவரும் நவீன அரசியல் தத்துவமான ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், பெண்ணுரிமை, மண்ணுரிமை போன்றவற்றிற்கு தத்துவார்த்த ரீதியாகவே எதிரானவர்களாக செயல்படுவதை காண முடியும். தாலிபானிய அடிப்படைவாதமும், அல்காயிதா அடிப்படைவாதமும் இசுலாமிய பெண்களை ஒட்டுமொத்தமாக மூடி பர்தா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதோடு, அவர்கள் டி.வி. உட்பட நவீன சாதனங்கள் எதனையும் பார்க்கக் கூடாது என்று நிர்ப்பந்திக்கின்றனர். அதாவது 2000 வருடத்திற்கு முன்னால் தோன்றிய குரானிய வழிமுறையிலான வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த நவீன காலத்திலும் நிர்ப்பந்திப்பதை காண முடியும். இதேபோல்தான் இந்துத்துவாவும் செயலாற்றுவதை நாம் நன்கு உணர்வோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களை சேர்த்துக் கொள்வதில்லை என்பதோடு, மனுதர்ம கால பெண்ணடிமைத்தனத்தை போற்றக்கூடிய பிற்போக்குவாதிகளாகவும் இந்த மத அடிப்படைவாதிகள் இருப்பதை காண முடியும்.
எனவேதான் இந்த பயங்கரவாதிகள் அனைவரும் அந்த மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வெகுஜன போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மாறாக, அரசியல் ரீதியாக அந்த மக்களை அணி திரட்டுவதற்கு மாறாக, சதிச் செயல்களின் மூலம் உருவாகும் பயங்கரவாதத் தத்துவத்தை தனது கவசமாக பயன்படுத்துகின்றனர். அடிப்படையில் இவர்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லாத தத்துவார்த்த பலகீனம்தான் இவர்களை பயங்கரவாதம் எனும் கோழைத்தனத்தின் மீது நம்பிக்கைக் கொள்ளச் செய்கிறது.

பயங்கரவாத அமைப்புகள் வலுப்பெறுவதற்கும், தோன்றுவதற்கும் அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருப்பது ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசியல் அடிப்படைகளே! அதாவது முதலாளித்துவத்தால் ஏற்படும் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்பதற்கு ஜனநாயக இயக்கங்கள் உரிய முறையில் முகம் கொடுக்காத போதும், வெகுஜனங்கள் இவர்கள் அரசியல் மீது நம்பிக்கை இழக்கும் போதும் ஏற்படும் வெற்றிடங்களைத்தான் இந்த பிற்போக்குவாத சக்திகள் தங்களுக்கான களமாக பயன்படுத்துகின்றனர். அதேபோல் அமெரிக்க ஏகாதிபத்தியம் சோலிச ரஷ்யாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபான்களை உருவாக்கி மறைமுக போரை தொடர்ச்சியாக நடத்தியதும், அவர்களுக்கு ஆயுதம் உட்பட, பொருளாதர உதவிகளையும் வழங்கி தொடர்ச்சியாக ஊக்குவித்ததும் பின்னர் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து உலகளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஏகாதிபத்திய கரங்களால் முற்றிலுமாக ஆக்கிரமிக்க முயலும் போது, வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற முதுமொழிக்கேற்ப இன்றைக்கு அது அல்கய்தாவாக உருவெடுத்து அமெரிக்க ஆட்சியாளர்களை மட்டுமல்ல அமெரிக்க குடிமக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியம் தொடர்ச்சியாக தனது நலனை முன்னிறுத்தி நாடுபிடிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதையும், அதற்கு ஈராக்கிற்கு சொல்லப்பட்டதுபோன்று – பேரழிவுமிக்க ஆயுதங்கள் உள்ள நாடு என்ற பொய்யைச் சுமத்தி அதனை முற்றிலுமாக ஆக்கிரமித்து – அந்நாட்டின் ஜனாதிபதி சதாம் உசைனை போலி விசாரணைகளின் மூலம் எதிர்கொண்டு தூக்கில் ஏற்றியதுமான நிகழ்வுகள் இசுலாமிய மதத்தில் நம்பிக்கை கொண்ட மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்பிட பிற்போக்கு சக்திகள் – இதனை புனிதப் போர் என்று அறிவித்து பல பின்லேடன்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவாக்கியுள்ளது.

தற்போது ஏகாதிபத்தியம், பயங்கரவாதத்திற்கு எதிராக வேறு ஒரு மொழியில் புனிதப் போரைத் துவங்கியிருப்பதாக – பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போர் என்ற முறையில் மேலும் தனது ஆக்கிரமிப்பிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டது. இந்த முதலாளித்துவமும் – ஏகாதிபத்தியமும் பெற்றெடுத்துள்ள முரட்டுக் குழந்தைதான் பயங்கரவாதம் என்ற உண்மையை நாம் உலகுக்கு எடுத்துரைக்க வேண்டியுள்ளது.தற்போது இந்த முரட்டுக் குழந்தைகள் உலகையே தங்களது விளையாட்டுக் களமாக மாற்றத் துடித்துக் கொண்டுள்ளன.

எனவே, நம்மைப் பொறுத்தவரையில் – உலக மக்களைப் பொறுத்த அளவில் இந்த பயங்கரவாதம் என்ற முரட்டு குழந்தையை வீழ்த்துவதற்கு அது எப்படி செயல்படுகிறதோ அதேபோன்று அந்த கருத்தாக்கத்திற்கு எதிராக உலகளவில் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. நவீன சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒத்து வராத இந்த பயங்கரவாதத்தை தத்துவார்த்த ரீதியாக முறியடிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இதனை எதிர் கொள்வதற்கு ஒரு வெகுஜன எழுச்சியை உருவாக்க வேண்டியுள்ளது. இவ்வாறான வெகுஜன எழுச்சி என்பது வெறுமனே முரட்டுக் குழந்தைகளை எதிர்ப்பதாக – பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக மட்டும் அமைந்து விடக் கூடாது.

அதன் பெற்றோர்களான முதலாளித்துவ – ஏகாதிபத்திய சக்திகளின் பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராகவும், இனவாதம், மதவாதம் போன்ற தத்துவார்த்த பிரிவினைகளுக்கு எதிராகவும், மதப்பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, ஏகாதிபத்திய எதிர்ப்பில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மேலும் இது ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்களது வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் கல்வி, வேலை, வீடு, சுகாதாரம், ஜனநாயக உரிமைகள், அரசியல் உரிமைகள், பாலின வேறுபாடு இல்லாமை போன்றவற்றை உத்திரவாதப்படுத்தும் வகையில் விரிவடைந்த வகையில் இந்த சிந்தனைகளை முன்னிறுத்தும் போராட்டங்களை கட்டியெழுப்புவதும்தான் இந்த பயங்கரவாததிற்கு எதிரான சரியான நடவடிக்கையாக அமையும்.

இதனை விட்டு, விட்டு இந்தியாவில் – மும்பையில் பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறினால் அதற்கு பாகிஸ்தான் தான் அடிப்படைக் காரணம் என்று திசை திருச்சி உணர்ச்சி வயப்பட்ட அரசியலுக்கு இந்திய மக்களை இரையாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திற்கும், மதவாத சக்திகளுக்கும் எதிராக நாம் போராட வேண்டியுள்ளது.
பயங்கரவாதம் என்பது இந்தியாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி போன்ற தலைவர்களின் உயிர்களையும் பறித்துள்ளது. இதேபோல்தான் பாகிஸ்தானிலும் பெனாசிர் பூட்டோ உட்பட, பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் உயர்கள் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையாகியுள்ளது. இந்த இடத்தில் ஒரு விசத்தை நாம் கவனப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதாவது பாகிஸ்தானில் யார் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுகிறார்கள், அங்கும் இசுலாமிய பிற்போக்கு சக்திகள்தான் அது லஷ்கர் – இ தொய்பாவாக இருக்கலாம் – அல் கய்தாவாக இருக்கலாம் யார் மீது இந்த அடிப்படைவாதிகள் தாக்குதல் தொடுக்கின்றனர் இசுலாமை பின்பற்றும் சொந்த மக்கள் மீதுதான். எனவே பயங்கரவாதிகளின் தத்துவத்திற்கு இரு பக்கமும் கூர்மை கொண்ட வாள் உள்ளது. அது சொந்த நாட்டு மக்களையும் – வேற்று நாட்டு மக்களையும் இரையாக்கும் என்பதுதான். எனவே, பயங்கரவாதத்திற்கு மதமோ, இனமோ, மொழியோ அடையாளப்படுத்த முடியாது. அது இவைகளைத்தாண்டிய மனிதவிரோத சிந்தனையைக் கொண்டது என்பதுதான்.

குறிப்பாக இந்தியாவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வினை வழங்கிட மத்திய அரசு முன்வரவேண்டும். அந்த மக்களுக்கு நமது அரசின் மீதான நம்பிக்கையை உண்மையிலேயே ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் இருப்பவர்கள் இசுலாமியர்கள் என்பதாலேயே அதற்கு உள்ள விசேச உரிமைகளான 370வது பிரிவு உட்பட பல உரிமைகளை மறுக்கும் பா.ஜ.க. – சங்பரிவார பாணிகளுக்கு அடிபணியாமல் இதற்கு தீர்வு காண வேண்டும்.

அடுத்து பெரும்பான்மை மக்களாக உள்ள இந்துக்களை தாஜா செய்வதற்காக சங்பரிவார அரசியலைப் போன்று சாப்ட் இந்துத்துவா பாணியை காங்கிரஸ் கைவிட வேண்டும். அது மட்டுமல்ல இந்தியாவில் இந்துத்துவ பாசிசமாக உருவெடுத்துள்ள பா.ஜ.க.வுடன் அரசியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ள – திராவிட இயக்கங்கள் உட்பட முற்படும் போது எப்படி ஒரு மதச்சார்பற்ற அரசியல் வலுப்படும் என்ற கேள்வி அடிப்படையிலேயே எழுகிறது. எனவே மதவாதத்தை உறுதியாக முறியடித்திட காங்கிரசும் – மற்ற ஜனநாயக அமைப்புகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான முதல் அடிப்படையாக அமையும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல – உலக நாடுகள் அனைத்திற்கும் அடிப்படை!

நன்றி :  சந்திப்பு

Exit mobile version