இன்று(27.02.2013) காலை பத்துமணிக்கு ஆரம்பமன இந்தக் கூட்டத்தில், இலங்கை அரசிற்கு இன அழிப்பு நடைபெற்ற போது மட்டுமல்ல இன்றும் ஆயுதங்களை வழங்க அனுமதித்த பிரித்தானிய அரசின் உதவிப் பிரதமர் கலந்துகொண்டார்.
தாராளவாதக் கட்சியைச் சேர்ந்த கூட்டரசாங்கத்தின் உதவிப் பிரதமர் நிக் கிலேக் சனல் நான்கின் இனப்படுகொலை ஆவணத் தொகுப்பைப் பார்த்து அதிர்ந்து வேறு போயிருக்கிறார். நிக் கிலேக் அதிந்துபோனதைப் பார்த்து அங்கிருந்த ஊடகவியலாளர்களும் அறிவு சீவித்தவர்களும் புல்லரித்துப் போயிருக்கிறார்கள்.
பன்றித்தொழுவத்தில் பெரும் விவாதங்களை நடத்தும் மூன்று பிரதான கட்சிகளது பிரதிநிதிகளும் ஒரே மேடையில் இருந்து வீடியோ பார்த்து அதிர்ச்சியடைந்தாலும் பிரித்தானியப் பாரளுமன்றக் கட்டடம் கல்லுப் போல அசையாமல் இருந்தது வியப்பை ஏற்படுத்தியது.
சிங்கள பௌத்த பேரினவாத்தைத் தோற்றுவிக்கும் போதும், உலகம் முழுவது அழிக்கப்படுவதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த பாராளுமன்றம் எத்தனை இனப்படுகொலைகளுக்குக் களம் அமைத்துக்கொடுதிருக்கும்?
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒடுக்குமுறை ஆரம்பித்த அதே இடத்தில் இன்று அரசியல் முள்ளிவாய்க்காலுக்காக ஒன்று கூடியிருந்தார்கள்.
இன்றுவரைக்கும் பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குப் பொறுக்கும் தொழிலுக்காக அவ்வப்போது நினைவு நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் தலைகாட்டும் ஆளும் கட்சி எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் கூடியிருந்த கூட்டத்திற்கு ஏற்றவாறு தமது கருதுக்களைக் கூறி மறைந்தனர். ஆர்பாட்டங்களுக்கோ கூட்டங்களுக்கோ நிகழ்வுகளுக்கோ இவர்கள் தங்களது தொகுதிகளிலிருந்து பத்துப் பொதுமக்களையாவது கூட்டிவந்தது கிடையாது.
பி.ஏ.காதர், இரா.சம்பந்தன் போன்றோரும் மடக்கி வைத்திருந்த தமது வீரவசனங்களை ஒப்புவித்துவிட்டு ஓய்ந்தனர்.
2009 ஆம் ஆண்டு பிரித்தானியப் வெளிவிவகரச் செயலரும் பிரஞ்சு வெளிவிகார அமைச்சரும் இணைந்து இலங்கை போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று அறிக்கைவிடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து இன்று அடிமைகளும் எஜமானர்களுமாக எமது போராட்டம் அடகுவைக்கப்பட்டுவிட்டது.
தன்னுரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் புலம் பெயர் பிரதிநிதிகள் என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக்கொண்டவர்கள் போராட்டத்தை நேரடியாகவே காட்டிக்கொடுத்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் போராட்டம் அழிக்கப்பட்டது. கஷ்மீரில் மக்கள் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடுகிறார்கள். அருகிலிருக்கும் பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பிற்கும் இந்திய ஆக்கிரமிப்பிற்கும் எதிராகப் உறுதியோடு நெஞ்சை நிமிர்த்திப் போராடுகிறார்கள். நாகாலந்தில் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் மக்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அரசு அவர்களின் பிரதிநிதிகளை நெதர்லாந்திலே பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது.
உலகில் எந்தப்ப்க்கம் திரும்பினாலும் வீரம் செறிந்த மக்களின் போராட்டம் அதிகாரவர்க்கத்தை அதிரவைக்கிறது. இவர்களை அனைவரது எதிரிகளோடும் கைகோர்த்துக்கொண்டு பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்திலிருந்து ‘தமிழ்த் தேசிய இனம் உங்களின் எதிரிகள்’ என்று பிரகடம் செய்திருக்கிறார்கள் ஜீரிஎப் உம் அதன் விசில்களும்.
ஒடுக்கப்படும் மக்களின் எந்தப்பிரதிநிதிகளும் இழைக்காத வரலாற்றுத் தவறை இவர்கள் திறம்படச் செய்து முடித்திருக்கிறார்கள்.
கோட்டு சூட்டு போட்ட தமிழ் மேட்டுகுடிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வியாபாரம் இன்று அதே கோட்டு சூட்டு போட்ட கனவன்களால் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் வரலாற்றுத் துரோகத்தை நடத்தி முடித்திருக்கிறது.