இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது வழமையாகிவிட்டது. இதனை தடுக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. தங்களது படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வர மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி, இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது,
நான் கடைசியாக இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள் என்பவர்கள் தொழிலாளர்கள். அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்து விடுங்கள். ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள், பணக்காரர்கள்.
தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பாண தமிழர்களும் கூறுகின்றனர்.
எனவே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டு விடுங்கள், ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
இந்து பாசிஸ்டும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் அடியாளுமான சுப்பிரமணியன் சுவாமி என்ற கோரமான கோமாளிக்கு தொழிலாளர்களும் படகுகளும் பிரச்சனையானவையல்ல பாசிஸ்டுக்களுடனும் இனக்கொலையாளிகளுடனும் உறவே பிரதானமானது. இந்தியாவில் நரேந்திரமோடியும் இலங்கையில் ராஜபக்சவும் தெந்தியாவில் ஜெயலலிதாவும் சுப்பிரமணியன் சுவாமின் நண்பர்கள்.