இந்தியாவில் தலித் மக்கள் முஸ்லீம்கள்,பிற்படுத்தப்பட்ட மக்கள், ஆங்கிலோ இந்தியர்கள், பழங்குடியினர் என பெரும்பான்மை மக்கள் மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் உடையவர்கள்.பசுவை பிரமாணர்கள் புனிதமாகக் கருதும் நிலையில் மாட்டுக்கறி உண்டார்கள் என்ற காரணத்திற்காக இந்தியாவில் பலரும் இந்துத்துவ அமைப்புகளால் அடித்தே கொல்லப்பட்டுள்ள நிலையில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது.
பாஜக ஆளும் பல மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. இம்மாநிலங்களில் மாட்டுக்கறியை உண்ணும் மக்கள் மீது கடுமையான தாக்குதல்களும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்பல் பகுதியில் ஜாவித் என்பவர் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி பசுக்களைக் கடத்தினார் என்று கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த போது அந்த மனுவை விசாரித்த நீதிபதி,
“இந்திய கலாச்சாரத்தில் பசு ஒரு பகுதியாக இருக்கிறது. இப்போதுள்ள சூழலில் பசுவை தேசிய விலங்காக அரசு அறிவிக்க வேண்டும். பசுவைக் காப்பது இந்துக்களின் அடிப்படை உரிமை என்பதாக இந்துக்கள் உணர வேண்டும். நாட்டின் கலாச்சாரம் நம்பிக்கைகள் பாதிக்கப்படும் போதும் தேசம் பலவீனமாகி விடுகிறது எனவே பசுவை துன்புறுத்துகிறவர்களை கடுமையாகத் தண்டிக்க உரிய சட்ட திருத்தம் தேவை. ஒரு சிலரின் சுவைக்காக பசுவின் உயிரை பறிக்க முடியாது. மாட்டிறைச்சி உண்பதை அடிப்படை உரிமையாக ஒரு போதும் கொள்ள முடியாது. எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்க முடியாது. வெளியில் வந்து மீண்டும் அதே தவறைச் செய்வார்.பசுவின் முக்கியத்துவத்தை முஸ்லீம்களும் உணர்ந்துள்ளனர். பேரரசர் பாபர், ஹுமாயூன், அக்பர் போன்றோர் பசுவதையை அமல் படுத்தினார்கள்.நாம் நம் கலாச்சாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றி உள்ளது போல நம் நாடும் ஆகி விடும்” என்று ஜாமீன் மனுவை நிராகரித்தார் நீதிபதி.