இந்த நிலையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஜனநாயகத்திற்கான ஆயுதமேந்திய நேபாள மக்களின் போராட்டம் என்பது 21ம் நூற்றாண்டில் வெற்றிபெற்ற முதலாவது போராட்டமாகும்.
ஏகாதிபத்தியங்களதும் வல்லரசுகளதும் பின்பலமின்றி, கொல்லைப் புறத்திலிருந்து இந்திய அரசியல் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு போராட்டத்தின் முதலாவது கட்டடத்தை வெற்றிகொண்டது நேபாள மாவோயிசக் கட்சி. இந்திய ஆதரவு மன்னர் ஆட்சியின் கொடுமையை அழித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வரைக்கும் நகர்ந்திருக்கிறார்கள்.
மக்கள் பற்றோடு போராட்ட எண்ணுகின்ற ஒவ்வொருவருக்கும் நேபாளம் கற்கைக்காக பல படிப்பினைகளை விட்டுச் சென்றிருக்கின்றது.
ஜனநாயகப் புரட்சி ஒன்றில் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும் போது வர்க்க சக்திகளிடையேயான முரண்பாடுகளைக் காணலாம். ஒடுக்கப்படுவோரும் ஒடுக்கவோருக்கும் இடையான போராட்டம் தொடர்வது வரலாற்று நியதி.
“போராட்டம் வெற்றிபெற்ற போது, உழைக்கும் மக்களுக்கு நிலங்கள் சொந்தமாக்கப்படுவதைக் பார்த்தோம். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமை பெற்றுக்கொள்வதைக் கண்டோம், சமூகக் குறைபாடுகளை ஒழிப்பதற்கான வாசற்கதவு திறக்கப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியுற்றோம். இவை அனைத்துமே இப்போது மாற்றனடைகின்றன. நிலங்கள் மறுபடி நிலப் பிரபுக்களுக்கு வழங்கப்படுகின்றன. அதுவும் நட்ட ஈடுகளோடு. இந்தியாவோடு சுமூகமான உறவு வேண்டும் என்ற் தலையங்கத்தில் இந்திய அரசியல் இராணுவத் தலையீட்டை அனுமதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் விடுதலை இராணுவத்தை நேபாள இராணுவத்தோடு இணைக்கிறார்கள்.
இவற்றிற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. மத்திய குழுவின் பெரும்பகுதியிலிருந்து, அடிமட்ட மக்கள் வரைக்கும் புதிதாக முளைத்துள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராட ஆரம்பித்துள்ளார்கள். பாபுராம் பட்டாராய், பிரசண்டா ஆகியோரின் தலைமை வகிக்கும் புதிய அதிகாரத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்கிறது. இதில் யார் வெற்றிகொள்கிறார்கள் என்பதிலிருந்தே புரட்சியின் முழுமையான வெற்றி தங்கியுள்ளது” என்று தனது கருத்தை லண்டனில் 02/11/11 அன்று நடைபெற்ற ஒன்றுகூடலில் கூறினார் தோழர் பசந்தா.
தோழர் கிரன், தோழர் பசந்தா போன்றோர் நேபாளத்தில் தொடரும் புரட்சியின் முன்முகங்கள். உலகில் நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் அப்போராட்டங்களின் ஒவ்வோர் திரும்பல் புள்ளியிலும் இவ்வாறான மாற்றங்களைக் காணலாம்.
ஒன்று கூடலின் முடிவில் கேள்விகளும் பின்னதாகக் கலந்துரையாடலும் முன்வைக்கப்பட்டது. நேபாளத்தின் இன்றைய நிலையில் புரட்சிகரப் பிரிவினர் பலம் பெறுவதன் அடிப்படைகள் குறித்து ஆராயப்பட்டது.
நேபாளப் போராட்டத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் நடைபெறுகின்ற போராட்டங்களிடையே இயங்கியல் உறவு(dialectical interchange) ஒன்று அவசியமானது என்றும், ஒன்று மற்றையத்தைப் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும் இனியொரு… சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.
“இலங்கையில் ராஜபக்ச அரசு ஐமபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மூன்றே நாட்களில் அழித்து இனப்படுகொலை நடத்திய போது, இடதுசாரிகள் உரக்கக் குரல்கொடுக்கவில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்ட ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசிற்கு எதிரான முழக்கங்களை தமது கைகளில் எடுத்துக்கொண்டு இனப்படுகொலைக்கு எதிரான முற்போக்கு அரசியலைச் சீர்குலைத்துவிட்டன. இனப்படுகொலைக்கு எதிராகவும், ராஜபக்ச அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும் நேபாள மாவோயிஸ்டுக்கள் போன்ற அமைப்புக்கள் மத்தியில்ருந்து தொடர்ச்சியான குரல் எழுப்பப்பட்டிருக்குமானால் அது ஈழ மக்கள் மத்தியில் இடதுசாரிகளைப் பலப்படுத்தியிருக்கும். இந்த உதாரணம் ஐரோப்பிய மக்களின் போராட்டங்களிலிருந்து அனைத்துக்கும் பொருந்தும். இவ்வாறான இயங்கியல் தொடர்பு போராட்ட சக்திகள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.
இனப்படுகொலைக்கு எதிராக நேபாள முற்போக்கு சக்திகள் மத்தியில்ருந்து குரல் எழுப்பப்பட்டிருக்குமானால் தெற்காசியாவில் மற்றொரு இடதுசாரி இயக்கம் உருவாவதற்கான ஆரம்பப்புள்ளியாகக் கூட அது அமைந்திருக்கும்” என்ற இனியொரு.. சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஈரானிய இடதுசாரிகள் இன்னும் ஆழமாக வேறு உதாரணங்களோடு உறுதிப்படுத்தினர்.
பொதுவாக அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தாக இவ் விவாதம் தொடர, பசந்தா தனது முடிவுரையில் இவ்வாறான சர்வதேசத் தொடர்பாடல்களை ஆழப்படுத்த வேண்டும் என்பதை மேலும் வலியுறித்தினார். இவற்றிற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமானது என்றார்.
பல்வேறு சமூகக் குழுக்கள் கலந்துகொண்ட இந்த உரையாடலில் இந்த நூற்றாடின் மிகப்பெரும் படுகொலையைச் சந்தித்த ஈழத்தமிழர்கள் மத்தியிருந்து ஒருவர் மட்டுமே கலந்துகொண்டதை சிலர் இறுதியில் சுட்டிக்காட்டினார்.