கடந்த மூன்று நாட்களாக மாவோயிஸ்ட் போராளிகளின் முற்றுகையால் திணறிப் போய் இருக்கிறது நேபாளத் தலைநகர் காதமாண்டு. 22 கட்சி கூட்டணி ஆட்சி இந்தியாவின் கைப்பாவையாக செயல்படக் கூடாது என்றும் நேபாள மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்து மாவோயிஸ்டுகள் இந்த ஜனநாயக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட் தொண்டர்களிடையே செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது இந்த குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இப்போதுள்ள அரசுக்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளும் இடம் பெறும் தேசிய அரசை வரும் ஜனவரி 24-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும்; நேபாள ராணுவத்தில் எங்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆயுதப்பயிற்சி பெற்ற தொண்டர்கள் அனைவரையும் சிப்பாய்களாகச் சேர்க்க வேண்டும். தேசிய அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் நேபாளத்தின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டும். மன்னராட்சியை எதிர்த்துப் போரிட்ட மாவோயிஸ்ட் தொண்டர்களை நேபாள ராணுவத்தில் அப்படியே சேர்க்க தயக்கம் காட்டக் கூடாது. இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நேபாள அரசு நிர்வாகம் நடைபெறக்கூடாது. நேபாளத்தில் எந்த இனத்துக்கும் பிரதேசத்துக்கும் தனி ஆட்சி உரிமை தரப்படக் கூடாது. இந்த நிபந்தனைகளை மாதவ்குமார் நேபாள் அரசு ஏற்றுக்கொள்ளாவிடில் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் எச்சரித்தார் பிரசண்டா. இந்திய அரசுக்கு மாதவ் குமார் நேபாள் தலைமையிலான இந்த அரசு கைப்பாவையாகச் செயல்படுகிறது; எதைச் சொல்வதானாலும் செய்வதானாலும் புதுதில்லியை ஆலோசனை கலந்தே செயல்படுகிறது. இனி நம்முடைய கோரிக்கைகளுக்காக புதுதில்லியுடனேயே நேரடியாகப் பேசிவிடலாம் என்றிருக்கிறேன் என்று குத்தலாகவும் அவர் குறிப்பிட்டார். நேபாள ராணுவத்தில் மாவோயிஸ்ட் தொண்டர்களை அப்படியே சேர்ப்பதால் ஆபத்து, அப்படிச் செய்யக்கூடாது என்று இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறியிருக்கிறார். அப்படிக் கூற அவர் யார்? நேபாளத்தின் உள் விவகாரத்தில் தலையிடவும் கருத்து கூறவும் இந்தியாவுக்கு அதிகாரம் யார் தந்தது என்று பிரசண்டா கேட்டபோது தொண்டர்கள் கைதட்டி அதை வரவேற்றனர்.