வெள்ளை நிறத்தில்
’பென்டர்’ மட்டுமாய்
பெரும் கிணறொன்றைத் தாண்டுவதாய்
ஒரு உருவம்
நினைவில் நிற்கிறது
அவ்வுருவம்
எங்கேயும் எப்போதும்
யாருக்காகவும் நின்றதில்லை
உயர் மதில்களையும் வேலிகளையும்
தாண்டியும் குதித்தும்
பனைமரங்களிடை சுற்றியும்
இன்றைய என் நினைவுகளிலும்
ஓடிக்கொண்டே இருக்க்கிறது
நெடிய உருவம்
முகம் நினைவில்லை
கண்ணில் சிவப்பு
எப்போதும் தீவிரம்
அடுத்தது ஓட்டம்
ஈரம் சொட்டச் சொட்ட
அரைக்குளியலுடன்
யார் யாரோ துரத்த
ஓடிய ஒருநாள்…
பின்கோடி மதிற்சுவரை
தாண்டிய பின்
தகவல் ஏதுமில்லை…
மாரியாய் குண்டுகள்
கொட்டித்தீர்த்த பின்னும்
இடியாத மதிற்சுவரும்
இரு துவாரங்களும் பார்க்கையில்
ஆழ்மனதில் துமிக்கிறது
ஒன்று உனக்கு
இரண்டாவது
பக்கித்தில் நின்றதற்கு
அன்றுன்னைத் தேடிப்போன
மூத்தவனுக்கான துவாராம்
எந்த மதில் சுவரில் படிந்திருக்கும்?
எந்த ஒரு மதிலையும்
பழஞ்சுவறென்று இடித்துவிடாதீர்
அத்துவாரங்களினூடு பார்க்க வேண்டும்
ஏதாவது தகவல் வரலாம்…
………………
போராளி சிவனேஸ்வரனுக்கு (1954 – 1983) சமர்ப்பணம்
குறிப்பு(இனியொரு) : புளட் இயக்கப் போராளியும் அதன் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவருமான சிவனேஸ்வரன் அந்த இயக்கத்தின் உள்முரண்பாடுகளால் கொலைசெய்யப்பட்டார். சிவனேஸ்வரனைத் தேடிச்சென்ற அவரின் சகோதரரும் கவிதாவின் தந்தையுமான விக்னேஸ்வரனும் அதே இயக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கபடுகிறது. சிவனேஸ்வரனின் மற்றொரு சகோதரர், சிவனேஸ்வரனைக் குறிவைத்த இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிப்போனார்.