Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீர்ப் பூக்குழி…: எம்.ரிஷான் ஷெரீப்

தொலைவிலெங்கோ

புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை

ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும்

மலைமுகடுகளிடையே அமைந்திருந்தது

அந்த ஆதி மனிதர்களின்

நதிப்புறத்துக் குச்சு வீடு

ஊற்று..

ஓடையாகிப் பின்

நீர்த்தாரையாய் வீழ்ந்து

பெருகிப் பாய்ந்து

பரந்து விரிந்த பள்ளங்களில்

தரித்திராது ஓடும் ஆறு

கற்பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து

உண்டாக்கும் பூக்குழிகள்

நதியின் புராண தடங்களை

நினைவுறுத்தி வரலாறாக்கும்

தண்ணீரில் தம் இரைக்கென

காத்திருந்த பட்சிகளை

அலறிப் பறக்கச் செய்த

சிறுமியின் ஓலம்

அவளது குடிசையின்

மூங்கில் கதவு, களிமண் சுவர்களை

எட்டவிடாது துரத்தியது

அக் கணத்தில் தடதடத்துக் கூச்சலிட்ட ரயில்

குரூர வேட்டைக்காரனொருவனின்

கரம் தீண்டி சுவாசம் நின்றதிர்ந்த

பட்டு வண்ணத்துப் பூச்சியின் உடல்

ஒரு பூக்குழியில் மிதந்த நாளில்

கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும்

அச் சின்னஞ்சிறிய பெண்ணின்

சடலத்துக்குக் காவலிருந்ததைக் கண்டன

சின்னவளைக் காணாது

வனமெங்கும் தேடிய விழிகள்

ஆந்தைக் குரல்

அபாயத்தின் ஒலி
பறவைச் சிறகின் உஷ்ணம்

பாதுகாப்பைக் குறிக்கிறதென
சொன்னாயெனினும்

சிறுமியின் கூரிய பற்களும் நகங்களும்
வேட்டைக்கானவை என அவளுக்கு

ஏலவே அறிவுறுத்த

மறந்து விட்டாய் அம்மா

நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…

 

– எம்.ரிஷான் ஷெரீப்

mrishanshareef@gmail.com

Exit mobile version