Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீட் விலக்கு தமிழக எம்பிக்களை ஆதமூட்டிய அமித்ஷாவின் செயல்!

2017-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட நீட் என்ற மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் இருந்து விலக்குக் கேட்க திமுக எம்பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஆனால் அவர்களை பிரதமர் மோடியோ உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ சந்திப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

திமுக அரசு பதவியேற்றதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்  என அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அது பற்றி ஆளுநர் முடிவு எதனையும் எடுக்கவில்லை.  இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளிலும்  உரிய பதில் கிடைக்காத நிலையில் மூன்று முறை ஆளுநரைச் சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மனுவோடு குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க திமுக எம்.பி டி.ஆர். பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டெல்லி சென்றது.

நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வராஜ், ஐயுஎம்எல் உறுப்பினர் நவாஸ் கனி, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார், அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் குடியரசு தலைவரைச் சந்திக்க முயன்ற போது  கொரோனாவைக் காரணம் காட்டி இரண்டுக்கும் மேற்பட்டோரை சந்திக்க விரும்பவில்லை என்று தகவல் சொல்லப்பட குடியரசு தலைவர் மாளிகையின் செயலாளரைச் சந்தித்து மனுவை கொடுத்து விட்டு திரும்பினார்கள்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முயன்றபோது, புதன்கிழமை நண்பகல் 12 மணிவாக்கில் வருமாறு கூறப்பட்டது. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை டி.ஆர். பாலு தரப்பு மேற்கொண்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேபதற்காக அமித் ஷா உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்ததால் அங்கிருந்து டெல்லி திரும்ப தாமதம் ஆவதாக அவரது சிறப்பு அலுவலர் சார்பில் டி.ஆர். பாலு தரப்பிடம் கூறப்பட்டிருக்கிறது.இதனால் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் டி.ஆர். பாலு இல்லத்தில் புதன்கிழமை காலை 10 மணியில் இருந்தே காத்திருந்தனர். ஆனால், நண்பகல் 12 மணிக்கு எதிர்பார்க்கப்பட்ட அமித் ஷாவின் அழைப்பு வராததால் அங்கேயே மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அமித் ஷா பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்துக்கு வந்தபோதும், அவர் தமிழக எம்.பி.க்கள் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

தமிழக  எம்பிக்களை அமித்ஷா சந்திக்காத காரணத்தால்  டி.ஆர் பாலு, திருமாவளவன், சு.வெங்கடேசன் ஆகியோர் அமித்ஷா வீட்டிற்குச் செல்ல அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்தி திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனால் கோபமடைந்த தமிழ்நாடு எம்பிக்கள் அமித்ஷா வீட்டு வாசலில் வைத்து அமித்ஷாவின் உதவியாளர்களிடம் கோபமாகப்  பேசி விட்டு திரும்பி விட்டனர். அமித்ஷாவின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு எம்பிக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கிவிடுவது என்று திவீரமாக பணியாற்றி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநரும் மத்திய அரசும் திமுக அமைச்சர்களை சந்திக்காமல் போக்குக் காட்டி வருகிறார்கள்.

Exit mobile version