தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் ஜூன் 10-ஆம் தேதி நீட் தேர்வின் சாதக பாதகங்கள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.
இந்தக் குழு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இன்னொரு பக்கம் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசும் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் கிராமப்புற மாணவர்களை மேம்படுத்துவது தொடர்பாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்லலாம் என்றும் அப்படிச் செல்லும் போது உச்சநீதிமன்றம் நீட் தேர்வு நடத்தச் சொன்னால் மாநில அரசு நடத்தலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மாநில அரசின் நுழைவுத் தேர்வு, ப்ள்ஸ் 2 மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு மருத்துவ சேர்க்கை நடத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பரிந்துரையை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றால் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், நீட் தேர்வு இல்லாத காலங்களில் நடந்த மாணவர் சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறைவாகவே இருந்துள்ளது எனவும், நீட் தேர்வு இல்லை என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் தனி உள்ஒதுக்கீடு தேவை எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், பெறப்பட்ட 86,462 மனுக்களில் 85,000க்கும் மேல் நீட் தேர்வு வேண்டாம் என்று தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.