Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீட் தேர்வு மறு ஆய்வு செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு-மே.வங்கத்திலும் எதிர்ப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் பற்ற வைத்த நெருப்பு  வட இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மகாராஷ்டிர மாநிலமும் நீட் தேர்வை மறு ஆய்வு செய்வோம் என அறிவித்துள்ளது.

நீட் என்ற கொடிய தேர்வு முறை தமிழ்நாட்டின்  கிராமப்புற முதல் தலைமுறை இளையோரின் வாழ்வை நசமாக்கி வந்த நிலையில், அநீதியான நீட் தேர்வில் இருந்து  தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அவையில் தாக்கல் செய்துள்ளது தமிழ்நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் இந்த புதிய சட்டவரையின் அடிப்படை ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது.

86 ஆயிரத்து 342 பேரிடம் கருத்துக் கேட்டு, அரசுப் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.  தமிழக அரசின்  இந்த முடிவுகள் வட இந்தியா வரை எதிரொலிக்கிறது. மேற்கு வங்கம், மகாராஷ்டிர மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிராம குரல்கள் வலுக்கத் துவங்கி விட்டது.

நீட் மோசடிகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் நீட் தேர்வில் மாபெரும் ஆள் மாறாட்ட மோசடி நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்துள்ளது. 50 லட்ச ரூபாய்க்கு ஆள் மாறாட்டம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாக்பூரில் உள்ள ஆர்.கே. கேரியர் கைடன்ஸ் என்ற நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பி நீட் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களைத் தொடர்புகொள்ளும் இந்த நிறுவனம், ஆள் மாறாட்டம் செய்வதன் மூலம் நீட்டில் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என தெரிவிக்கும். இதையடுத்து, சேர விரும்புவோரின் பெற்றோர் இவர்கள் சொல்லும் தொகைக்கு Post – Dated காசோலையைத் தர வேண்டும். பாதுகாப்பிற்காக அந்த மாணவரின் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு சான்றிதழ்களையும் தர வேண்டும். இதற்கான தொகை சுமார் 50 லட்ச ரூபாய் வரை இருக்கும். நீட் தேர்வுக்கான User Id மற்றும் passwordகள் சம்பந்தப்பட்ட மாணவரிடமிருந்து பெறப்பட்டு, இந்த நிறுவனமே ஒரு குறிப்பிட்ட சென்டர் வருவதுபோல ஏற்பாடு செய்யும். பிறகு சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படம் மார்ஃப் செய்யப்படும். சம்பந்தப்பட்ட மாணவரின் ஆதார் கார்டு பெறப்பட்டு, போலி ஆதார் கார்டு உருவாக்கப்படும். இதற்குப் பிறகு, ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு, இந்த நிறுவனத்தால் ஏற்பாடு செய்பவர்கள் அந்தத் தேர்வை எழுதுவார்கள். தற்போது நடந்து முடிந்த தேர்வில், இதுபோல ஐந்து பேர் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ராஞ்சியில் உள்ள மையத்திலும் மற்றவர்கள் தில்லியிலும் இதைச் செய்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  நீட் தேர்வுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம்  விரைவில் தமிழ்நாட்டில்  நீட் என்ற இருண்ட தேர்வு முறை நீங்கும். அதுவரை மாணவர்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையை புதிய கோணங்களிலும் அணுக முன் வரவேண்டும்.

Exit mobile version