Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீட் தேர்வு கடும் விவாதங்களுக்குப் பின்னர் நிறைவேறிய மசோதா-தனிமைப்பட்ட பாஜக!

இந்தியா முழுமைக்கும் மருத்துவக்கல்விக்கான நீட் என்னும் தேர்வை கடந்த காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த போது தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும், அதன் பின்னர் 2011-ல் முதல்வரான ஜெயலிதாவும் கடுமையாக எதிர்த்தனர். அதனால் நீட் தேர்வில்  இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திருந்தது ஒன்றிய அரசு.

அதிமுக-திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது என்ற நிலை ஜெயலலிதா மரணக்கும் வரை இருந்தது. அவர் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் அனுமதித்தார்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக நீட் தேர்வை ஒழிக்க முயல்வோம் என்றது. இந்நிலையில் தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில்  இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர்.  அப்போது பாஜக சட்டமன்ற தலைவரான நயினா நாகேந்திரன் நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசி வெளிநடப்புச் செய்தார்.

பழையது போன்று பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின்  கொள்கை முடிவு. அதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவே இந்த மசோதா.

நீட் தேர்வை ஒழித்துக் கட்டுவோம் என்று சொன்ன திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது எனக் கேட்டு அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றம் வந்திருந்தனர். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?  என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் போது ஜெயலலிதா இருக்கும் போது கூட நீட் தேர்வு வரவில்லை  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா சட்டசபையில்  இன்று தாக்கல் செய்யப்படுகிறது என  கூறினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கூறிய ஒரு கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதனால்   அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில்  திமுக – அதிமுக எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர்,

பின்னர் மசோதாவை மதியத்திற்கு மேல் முதல்வர் தாக்கல் செய்ய அந்த மசோதாவை ஆதரிப்பதாக  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

நீட் தேர்வில்  இருந்து நிரந்தர விலக்குக் கோரும் மசோதாவுக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் பாஜக மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.

Exit mobile version