Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிழல் தேடிய ஓட்டமும் ஆட்லெறி வந்து விழாத ஓரு இடமும்…டி.அருள் எழிலன்

முள்ளிய வாய்க்காலில் இறுதிப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது யாழ் பல்கலைக்கழத்தின் விவசாய பீடத்திற்குச் சொந்தமான மனிக்ஃபாம் காடு. அதில் மரங்களை வெட்டி சமவெளி ஒன்றை உருவாக்க கூலி வேலைக்கு தமிழ் மக்களை அழைத்துச் சென்றது இராணுவம். ஏற்கனவே முகாம்களில் தஞ்சமடைந்த மக்களும் இவ்விதமான காடு வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அடர்த்தியான அந்த பருவ மழைக்காடுகள் வெட்டப்பட்டு சமப்படுத்தப்பட்டது . அடர்ந்த அந்தக் காடுகளை வெட்டியது எதற்காக என்றோ? யாருக்காக? என்றோ? அவர்களுத் தெரியவில்லை. ஆனால் மே மாதம் பதினெட்டாம் தேதி பெருந்தொகையான மக்கள் முள்ளியவாய்க்காலில் இருந்து வெளியேறி நந்திக்கடல் என்னும் நீரேரியைக் கடந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது அவர்களை அடைத்து வைக்க இலங்கை அரசு உருவாக்கிய கண்காணிப்பு முகாம்தான் புதிதாக வெட்டி உருவாக்கப்பட்ட மனிக்ஃபாம் முகாம்.இப்போது மனிக் முகாமில் மட்டும் 1,60,000 பேர் இருப்பதாக ஆதரமற்றச் செய்திகள் சொல்கின்றன.

இந்த நூற்றாண்டின் மிக மோசமான துர்பாக்கியசாலிகள் அவர்களாகத்தான் இருப்பார்கள். இறுக்க வேயப்பட்ட வேலிகளுக்குள் மந்தையில் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் ஆடுகளைப் போல அவர்கள் முகாம்களுக்குள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளுக்குள் பல நூறாய் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைக்குள் அம்மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பாரம்பரீயமான அவர்களின் நிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு மூடப்பட்ட கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளிலும், மருத்துவமனைகளிலும், பல் நோக்கு கூட்டுறவு வளாகங்களிலும் கடுமையான கண்காணிப்பின் கீழ் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கம்பி வேலிகளுக்குள் அவர்கள் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதை நம்ப முடியாமல் சோர்வுடன் வாழ்வைக் கழிக்கிறார்கள். இனி எப்போது தங்களின் வீடுகளுக்குத் திரும்புவோம் என்கிற உத்திரவாதம் இல்லாமல் பெரும் சுமையைச் சுமக்கிறார்கள். குழந்தைகள் கம்பிவேலிகளைப் பிடித்தபடி யாராவது வருவார்களா? என்று எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள்.அந்த எதிர்பார்ப்பில் உண்ண உணவோ, அல்லது சில பிஸ்கெட் துண்டுகளையோ பெற்று விடும் ஏக்கம் அவர்களிடம் இருக்கிறது. பெரியவர்களோ தலை குனிந்து இராணுவச் சிப்பாய் முன்னால் மண்டியிட்டு நிற்கிறார்கள். பிடித்துச் செல்லப்பட்ட தங்களின் இளம் பிள்ளைகள் குறித்து எவ்விதமான கேள்விகள் கேட்கவும் திராணியற்றவர்களாய் வெறுமையால் நிரைந்திருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அந்த கொட்டகைக்குள் வரிசையில் நின்று உணவு வாங்க கூச்சப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கூச்சம் தேவையற்றது ஏனென்றால் அங்கு வரிசையில் நிற்கிற எல்லோருமே தங்கள் வாழ்வு இப்படியானது குறித்து தங்களைத் தாங்களே சபித்துக் கொண்டும் கழிவிரக்கத்தால் அழுது கொண்டும். இருக்கிறார்கள். இந்த ஹைடெக் யுகத்தில் வெளியுலகத் தொடர்புகள் ஏதுமற்று கூனிக் குறுகி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அவர்கள் இந்த பேரினவாதப் பிசாசுகளிடம் சிக்கியவர்கள். கிளர்ச்சிக் குழுவின் பலவீனமான போர்த் தந்திரத்திற்குப் பலியானவர்கள்.அவர்கள் நம்மிடம் சொல்ல ஏராளமான கதைகள் உண்டு. போரின் கூரூரம் பற்றி, கிளிநொச்சியில் தொடங்கிய இடப்பெயர்வு நந்திக்கடலில் முடிந்து பற்றி.யாரிடம் வாழ முடியாது என்று வன்னியில் இருந்து விலகி இருந்தார்களோ அவர்களிடமே வந்து சரணடைந்த கொடுமை பற்றி.

இன்று முகாம்களை பார்வையிடுவதற்காக வந்து சென்று படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருக்கும் ஐநாவின் சிறப்புத் தூதர் விஜய் நம்பியாருக்கோ அல்லது ஐநாவின் தலைவர் பான்கிமூனுக்கோ, அவர்கள் வழமையான ஒரு வாழ்வை வாழ்ந்தவர்கள் என்றோ செழிப்பான ஒரு நாகரீத்தின் விவாசாயக் குடிகளாக வாழ்ந்தவர்கள் என்பதோ தெரியாது. அவர்கள் தங்களின் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவே விரும்புகிறார்கள். தன்னார்வக் குழுக்கள் கொடுக்கும் உணவை அருந்தவோ இராணுவத்திடம் கையேந்தி நிற்கவோ அவர்கள் விரும்பவில்லை. தமிழ் சமூகத்தின் இந்துப் பண்பாட்டின் எல்லா கூறுகளும் அவர்களிடமும் உண்டு. சாதி,ஆண்மரபு வழி சொத்துக்களை பேணுதல், தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வரதட்சணை கொடுத்து மணம் முடித்தல் என்று எளிய சடங்குகளோடு வாழ்ந்தவர்கள் அவர்கள். சேமிப்புகளில் அதிக கவனம் செலுத்தினார்கள். போருக்கு, போராளி அமைப்புக்கு என்று தங்கள் பிள்ளைகளை அனுப்பி அவர்கள் ஏராளமான உயிர்களை விடுதலையில் பெயரில் இழந்திருந்தாலும் அம்மண்ணில் இராணுவ அதிகாரத்தின் கீழான ஒரு வாழ்வை விட மரியாதையான வாழ்வையே வாழ்ந்து வந்தார்கள்.

வன்னி நிலம்

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விவாசய நிலம்தான் வன்னி எனப்படுவது. வவுனியா, மன்னார் மாவட்டங்களின் 40% சதப் பகுதியையும் முல்லைத்தீவில் 90% சதப்பகுதியையும் கிளிநொச்சியின் முழு நிலப்பரப்பையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் புலிகள். இலங்கையின் வட பிராந்தியமான வன்னி பெருநிலத்தின் வடக்கை கிளிநொச்சியும், கிழக்கை மதவாச்சியும், கிழக்கு மேற்கை கடலாகவும் கொண்டு அமைந்த நிலம்தான் வன்னி நிலம். கடந்த முப்பதாண்டுகளாக விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகின் கீழ் ஆளப்பட்டு வந்தது. முப்பதாண்டுகால புலிகளின் நிர்வாக அலகின் கீழான வாழ்வு என்பது பல்வேறு சாதக பாதகங்களைக் கொண்டது. பெரும்பாலான விவசாயிகள் சொந்தமான காணிகளைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். பாலாலியில் இருந்து வீசப்படும் ஆட்லெறி வந்து விழாத தொலைவில் வாழ்வது அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. அதுவே அவர்களின் பாதுகாப்பு ஆசையாகவும் இருந்தது.

கிளிநொச்சியை எடுத்துக் கொண்டால் அங்கு இரணைமடுக்குளமும், விசுமடுக் குளமும் பிரதான விவசாய நீர் பயன்பாட்டுக் குளங்களாக இருக்கின்றன. மாங்குளத்தில் தொடங்கி இரணைமடு வரை பரந்து விரிந்திருக்கும் இரணைமடுக்குளம் அவர்களின் பிரதான விவசாய பயிர்செய்கைக்குப் பயன்படுகிறது. அது போல விசுவமடுக்குளமும் அவர்களின் தண்ணீர் தேவையை வருடம் முழுக்க பூர்த்தி செய்யும். இதனாலேயே கிளிநொச்சியும் அதனை அண்டிய வன்னிப் பிரதேசமும் மழையில்லாத காலங்களில் கூட முப்போக விளைச்சலைக் கண்டிருந்தது. அது போலவே முல்லைத் தீவிலும் முத்தையன்கட்டுக் குளம். தண்ணீர் முறிப்புக் குளம் போன்றவை விவாசார நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. பெரும் தென்னை வளத்தைக் கொண்ட முல்லைத் தீவு சணல் ஆலைத் தொழிலையும் பிரதானமாகக் கொண்டிருந்தது. உலகின் பல்லுயிர் வாழ்வுக்கு உகந்த சூழல் வன்னிப் பெருநிலத்தில் இருப்பதாக அறியமுடிகிறது. இலங்கை அரசும் கிளிநொச்சியின் 155&ம் கட்டையில் பட்டுப்பூச்சி சந்திப்பில் ஒரு வேளாண் ஆய்வு மையத்தை நடத்திவருகிறது. பருவமழை பொய்த்துப் போனாலும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு கண்மாய்களும் குளங்களும் அதன் மண் வளத்தை பாதுகாத்து வருகின்றன.

பிரதானமாக விவசாயத்தையும் இன்னொரு பிரதானத் தொழிலாக (கடற்தொழில்) மீன் பிடித்தலையும் கொண்டிருந்தாலும் முப்பதாண்டுகளில் பல் வேறு பொருளாதாரத் தடைகளையும் கடந்த ஒரு சுகவாழ்வேனும் அவர்களுக்கு சாத்தியமாகியிருந்தது. பொருளாதார நெருக்கடிகள் வந்த ஆரம்பகாலத்தில் அவர்கள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்காக அதிக விலையைக் கொடுத்தார்கள். விதை நெல்லுக்கு பற்றாக்குறை இல்லை ஆனால் விதைப்பதற்கும் உரத்திற்கும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டார்கள். அப்படியே விளைந்தாலும் நெல்லுக்கு விலையில்லாமல் அவர்கள் சந்தித்தது புதிய நெருக்கடி. 95, 96, காலப்பகுதியில் யாழ்குடா நாடு இராணுவ முற்றுகைக்குள்ளானது பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து குடாநாட்டு மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார்கள். செயலிழந்த இலங்கை அரசின் நிர்வாகம் போரின் காரணமாக புனரமைக்கப்படாத சாலைகள் என்று அன்றைக்கு போதுமான கட்டமைப்புகளை வன்னி கொண்டிருக்கவில்லை. அவர்களிடம் இருந்ததெல்லாம் பசுமையான நிலம். 1997&ல் ஜெயசிக்குரு போர் நடவடிக்கையின் போதும் மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார்கள். பெருந்தொகையான மக்கள் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் போரை எதிர் கொண்ட போது நிர்வாக வசதியின்மை, போக்குவரத்து சிரமம். பொருள் உற்பத்தி என்று அன்றைய மக்கள் சந்தித்த நெருக்கடிகளில் இருந்தே புலிகளின் நிர்வாக அலகுகள் விரிவு படுத்தப்பட்டது. பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு உணவு உற்பத்தி நீண்ட கால சேமிப்பு என நிர்வாகத்தை தொலை நோக்கோடு விரிவு படுத்தியது அதன் பிறகுதான்.

மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் ரேஷன் சிஸ்டத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கும் தங்களுக்குமான விநியோகத்தைக் கொண்டு வந்ததும் புலிகள்தான். ஐம்பது கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லை சேரன் அரிசி ஆலை தொள்ளாயிரம் ரூபாயில் தொடங்கி ஆயிரம் ரூபாய் வரைக் கொடுத்து கொள்முதல் செய்து அதை தங்களின் அரிசி ஆலையில் அடித்து அரிசி ஆக்கி அதை ஏற்றுமதியும் செய்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகளின் மூலம் ரேஷன் சிஸ்டத்தையும் நடத்தி வந்திருக்கிறார்கள் புலிகள். வன்னிப் பகுதி மட்டுமல்லாமது இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் புலிகள் அரிசி ஏற்றுமதி செய்து வந்ததும் தெரிகிறது.பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து பல மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் திட்டம் இருந்தாலும் சர்வதேச அளவில் எழுந்த பொருளாதார நெருக்கடியும் புலிகளின் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டமையும் அவர்களின் நெருக்கடியை ஒரு பக்கம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது.ரணில் ஆட்சிக்கு வந்த சமாதானக் காலத்தில் வன்னி மக்கள் பல்வேறு அனுகூலங்களை அடைந்ததும் உண்மைதான் தாராளமாக அவர்களுக்கு உரங்கள் கிடைத்தது. ரேஷன் பொருட்களில் தட்டுப்பாடில்லை, தொலைத் தொடர்பு வசதிகளும் இருந்தது. இந்நிலையில் வெளி உலகின் அங்கீகாரம் இல்லாத புலிகளின் நிர்வாக அலகின் கீழ் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். வன்னி மக்கள் மீது ஏவப்பட்டு கொடூரமான போரை ராஜபட்சே நடத்தி முடித்திருந்தாலும். வெளிப்படையாக அல்லாமல் ரணிலின் ஆட்சிக்காலத்தில் ஏவப்பட்ட மறைமுகப் போர் ஒரு சுகமான சுமையாக மக்கள் மீது ஏவப்பட்டதும் தெரிகிறது. இக்காலத்தில் வன்னிக்கு ஏராளமான வசதிகள் வந்த போது தன்னார்வக் குழுக்கள் என்ற போர்வையில் உள்நாட்டு, வெளிநாட்டு உளவாளிகள் வன்னிக்குள் நீள அகலமாக ஊடுறுயதும் இப்போது தெரியவந்திருக்கிறது.

வன்னிக்கு அப்பால் பாலாலி விமான தளத்தை பிரதான தங்கு தளமாக கொண்டியங்கும் இலங்கை இராணுவம் பலாலியில் இருந்து தங்களின் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்ததே தவிற வன்னிக்குள் கடந்த முப்பதாண்டுகளில் இலங்கை இராணுவம் நுழைந்ததில்லை. முப்பதாண்டுகளில் இராணுவத்துக்கு நேரடியாக முகம் கொடுக்காத வன்னி மக்கள் புலிகள் தங்களை பாதுகாப்பார்கள் என்றே கடைசி வரை நம்பினார்கள்.வன்னி மக்களின் தாக்குதல் தளமாக இருந்த பலாலி விமானத்தளத்தை புலிகள் பல முறை தாக்க முயர்சித்தார்கள் சில முறை கடுமையாக அதை தாக்கிச் சிதைத்திருக்கிறார்கள். அதன் விமான ஓடுபாதைகளை சேதப்படுத்தி பலாலியை செயல்பட முடியாதபடி ஆக்கியும் இருக்கிறார்கள். ஆனால் பலாலியை பல முறை புனரமைப்புச் செய்து கொடுத்தது இந்தியாதான். பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை இலங்கை இராணுவம் நவீன போர்க்கருவிகளையோ அதி சிறந்த காமாண்டோ படைகளையோ திறமையான புலனாய்வுக் கட்டமைப்பையோ கொண்டிருக்கவில்லை. இலங்கையின் புலனாய்வுப் பிரிவிவை விட புலிகளின் புலனாய்வு பத்தாண்டுகளுக்கு முன்னர் திறம்பட இருந்தது. ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் புலிகளின் உளவாளிகள் இருந்தார்கள். அரசு நிறுவனங்களிலும் அவர்கள் ஊடுறுவி இருந்தார்கள். தங்களின் கமாண்டோக்களின் திறமையான இராணுவ நடவடிக்கைகளாலும் தற்கொலை தாக்குதலாலும் அவர்களுக்கு ஒரு விதமான பாதுகாப்பு இருந்ததும் உண்மைதான். இவ்விதமாய் கடந்த முப்பதாண்டுகளாய் வன்னி மக்கள் இலங்கை இராணுவத்தை வன்னியில் கண்டதில்லை. கிடுகுவேலிக் காலாசாரத்திற்குள் வாழ்ந்த அந்த மக்கள்தான் இன்று ஒட்டு மொத்த ஈழப் போராட்டத்தின் சாட்சியங்களாய் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கிலோ, யாழ்பாணத்திலோ திறந்த வெளி சிறைக்குள் அன்றாடம் கண்காணிப்புக்குள் வாழும் மக்களை விட இவர்களின் நிலை மோசமானது காரணம் இவர்கள் புலிகளோடு வாழ்ந்தார்கள் . அரசை எதிர்த்து போராடுகிற கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வாழும் மக்களின் நிலை என்னவோ அதுதான் வன்னி மக்களின் நிலையாகவும் இருந்தது.அவர்களின் எளிமையான நிலத்தோடு தொடர்புடைய விவசாய வாழ்வு சிதைக்கப்பட்டு இன்று அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.

வன்னி மீதானப் போர்.

இது ஒரு பெரும் ஓட்டம் நிற்க நிழல் வேண்டி ஓடத்துவங்கி ஒவ்வொன்றாய் இழந்து கடைசியில் படுகொலையாகி எஞ்சிய மக்கள் வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்ட கதை வேதனையானது. இன்று அவர்களின் கதை முடிவில்லாத கேள்வியற்ற நிர்கதியான மனிதர்களின் கதையாக மாறியிருக்கிறது. இரண்டு வருட காலமாக நீடித்த இந்தப் போரின் முடிவு இவ்விதமாக இருக்கும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. யாரேனும் ஒருவர் இந்த சண்டியரை தடுத்து தங்களை மீட்பார்கள் என்று நம்பியிருந்தார்கள். மலைக்காலத்தில் துவங்கி கோடை கொழுத்தும் கோடையில் முள்ளியவாய்க்காலில் அவர்களின் கதை முடிவதாக இருந்தது. சாட்சியமற்ற இனப்படுகொலையின் மௌனசாட்சிகளாக அவர்கள் இன்று முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். நான்காண்டுகால அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து போரின் தொடக்கம் கிழக்கை கைப்பற்றுவதிலும் மாவிலாறை கைப்பற்றுவதிலுமே இருந்தது. மாவிலாறை அண்டிய பகுதிகளில் புலிகளின் அரண்களை அவர்கள் கைப்பற்றிய போது, வடக்கின் மீதான போரை அறிவித்தார்கள். உண்மையில் மாவிலாறு ஒரு மறைமுக சமிக்ஞையாகவே இராணுவத்தால் புலிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் புலிகள் அதை எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. இராணுவ ரீதியாக இலங்கை இராணுவத்தை எதிர் கொள்ளும் வலும் தெம்பும் தங்களுக்கு இருப்பதாக புலிகள் நினைத்திருக்கக் கூடும்.

மாவிலாறு படையினரிடம் விழுந்ததை ஒட்டு வன்னி மக்கள் மீதான போர் 2007 மார்ச்சில் துவங்குகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நடந்த மிக மிக கொடூரமான இந்தப் போர் 2009& மே 18 முள்ளியவாய்க்காலில் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இலங்கையில் முப்பதாண்டுகால ஆயுதப் போராட்ட வரலாற்றில் மூன்றாண்டுகளையும் கடந்து நடந்த போர் இதுதான். பெருந்தைகையான மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டதும் இந்த மூன்று ஆண்டுகளில்தான். இத்தீவில் சிங்களர்களும் தமிழ் மக்களும் இனி எப்போதும் ஒன்று பட்டு சேர்ந்து வாழும் சாத்தியங்கள் அறுந்து விழுந்து அம்மக்கள் வெற்றி கொள்ளப்பட்டு அடிமைகளாக்கப்பட்டதும் இந்தப் போரில்தான்.

மாவிலாறில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல் வெடித்த போது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அதில் தலையிட எத்தனித்தார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பை இலங்கை அரசு கொடுக்கவே இல்லை அதே நேரம் தங்களின் இராணுவத் தந்திரங்கள் பின்னடவை சந்திக்கிறது என்பதை புலிகளும் உணரவில்லை. அது பிடறியில் அல்ல முகத்தில் விழுந்த அடி. அதை புலிகள் அவதானித்திருந்தால் இந்தப் போரின் போக்கு மாறியிருக்கக் கூடும். பெரும் அழிவை தவிர்த்திருக்கலாம். மணலாற்றில் நடந்தது ஒரு எச்சரிக்கைதான். மன்னாரில் 2006 ஜூலை மாதவாக்கில் தீவீரமான போது மன்னாரின் மேற்கு அடம்பன், ஆண்டாங்குளம், பெரியமடு போன்ற கிராமங்களில் அதிகளவான இடப்பெயர்வுகள் நடந்தது, இருபதாயிரத்துக்கும் அதிகமாக மக்கள் அங்கிருந்து வெளியேறி கிளிநொச்சி நோக்கி நகர்ந்தார்கள். அனைத்து சமூக மக்களாலும் நேசிக்கப்படும் மடு மாதா தேவாலயம் இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட போது அங்கிருந்த மாதா சிலை ஜூலை மாதத்தில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. பெருநிலப்பரப்பு என்று வர்ணிக்கப்பட்ட வன்னி நிலம் சுருங்கத் தொடங்கியது மன்னாரில் இருந்துதான் மன்னாரில் இருந்து ஓடத் தொடங்கி ஏ 32 சாலைவழியாக பூநகரியை அடைந்து அங்கிருந்து பரந்தனுக்கு வந்து ஏ 35 சாலைவழியாக புதுக்குடியிருப்பை வந்தார்கள் ஒரு தொகுதி மக்கள். இன்னொரு தொகுதியினர் பல் வேறு கிராமப்பகுதிகளினூடாகவும் ஏ 9 சாலையைக் கடந்தும் புதுக்குடியிருப்பு சந்திப்புக்கு வந்தார்கள் அல்லது முல்லைத் தீவிற்குவந்தார்கள். போர் நடவடிக்கை ஈவிரக்கமற்ற முறையில் இருந்ததாலும் கிட்டத்தட்ட நான்கு பெரும் பிரிவுகளோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக சிப்பாய்களைக் கொண்ட பல் வேறு பிரிவுகளால் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராலும் மக்கள் கடந்து சென்ன பகுதிகள் எல்லாம் இராணுவத்தினர் வசம் விழுந்தது. ஊடறுத்தோ உடைத்தோ எதிர் தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பங்களே புலிகளுக்கு வழங்கப்பட வில்லை. அவர்கள் ஒரு தற்காப்பு யுத்தம் ஒன்றை நடத்துகிற சூழலுக்குள் நிரந்தரமாகவே தள்ளப்பட்டார்கள். எதிர்தாக்குதல் நடத்தவோ பல முனைத் தாக்குதல் நடத்தவோ புலிகளுக்கு வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. அவர்களை ஒன்று சேரவிடாமல் ஒரு படுபயங்கரமான போர் நெறியை இலங்கை இராணுவம் பயன்படுத்தியது. இப்போதைய போரில் புலிகள் சந்திப்பது இதுவரை அவர்கள் சந்திக்காத இலங்கை இராணுவத்தை . முந்தைய காலப் போரில் விழுந்த இராணுவத்தினப் பார்த்ததும் ஏனையவர்கள் ஓட்டிப் போகவில்லை. அவர்கள் யுத்த வெறி ஊட்டப்பட்ட சிப்பாய்களாக இருந்தார்கள்.மாதாந்திர ஊதியம் அரசு வேலை போதிய பயிர்ச்சி இன்மை இள வயது என்பதை எல்லாம் தாண்டி அவர்களுக்கும் சிங்களத் தேசீய வெறி ஊட்டப்பட்டிருந்தது.

லால்கர் அனுபவம்

விளைவு புலிகள் பின்வாங்கினார்கள் பின்வாங்கினார்கள் பின்வாங்கிக் கொண்டே இருந்தார்கள். மக்களும் அவர்களுடனே சென்றார்கள். அல்லது அழைத்துச் செல்லப்பட்டார்கள். மக்கள் இந்தப் போரின் கொடூரத் தன்மையை கிளிநொச்சி வரை உணரவில்லை. புலிகள் பெரும் தவறைச் செய்து இராணுவ ரீதியாகவோ அல்லது இன்னொரு நாட்டு ஒன்று தலையிட்டு போரை நிறுத்தும் என்றோ நம்பிக் கொண்டிருந்தார்கள். புலிகள் அமெரிக்காவை நம்பிக் கொண்டிருந்ததும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் மூலம் காங்கிரஸ் அரசு அல்லாமல் வேறு ஒரு அரசு அமையுமானால் அது போரை நிறுத்த வழி பிறக்கும் என்றோ நம்பியிருக்கிறார்கள். ஒரு போராளி அமைப்பு தனது இராணுவ பலத்தையோ, மக்களையோ, அரசியலையோ நம்பியதைக் காட்டிலும் ஏகாதிபத்தியங்களையும் பிராந்திய வல்லரசுகளையும் நம்பியிருப்பது எவளவு துர்பாக்கிய நிலை. இந்த இடத்தில் நாம் சரியாகச் சுட்டிக்காட்டினால் லால்கரில் மாவோயிஸ்டுகளைச் சொல்லலாம். கடந்த எட்டு மாதத்திற்கும் மேலாக மேற்குவங்க அரசிடம் இருந்து மாவோயிஸ்டுகள் விடுவித்து தங்களின் கட்டுக்குள் வைத்திருந்த லால்கரை ஒட்டிய பகுதியை மீட்கும் நடவடிக்கையை இந்திய இராணுவம் முன்னெடுத்த போது அவர்கள் இன்னொரு சக்தியின் தலையீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. நிலங்களை விட்டு விட்டு மக்களையும் விட்டு விட்டு ஜார்கண்டுக்கு நகர்ந்து விட்டார்கள். பத்து பொது மக்களின் மரணங்களுடன் லால்கரை மீட்டிருக்கிறது இந்திய இராணுவம். ஆனால் இந்த மீட்பு நடவடிக்கையின் போதும் அதற்குப் பின்னரும் மேற்குவங்கச் சூழலைப் பார்க்கும் போது அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மாவோயிஸ்டுகளுக்காகப் போராடுகிறார்கள், பழங்குடிகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். மாவோயிஸ்டுகளோ ஜார்கண்டில் இந்த படியே போராட்டம் தொடரும் என்கிறார்கள். பழங்குடிகளோ மிக வலுவான முறையில் மாவோயிஸ்டுகளை ஆதரித்து நிற்கிறார்கள். இந்தப் போர் மக்களை பலவீனமாக்க வில்லை மாறாக ஒரு வர்க்கப் போரில் மக்களின் பங்களிப்பை முன்னிலும் பார்க்க உறுதிப்படுத்தியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இராணுவ ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ மாவோயிஸ்டுகளை இந்திய அரசு வெல்ல நீண்ட போராட்டம் ஒன்றை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் போது. நடந்து முடிந்த வன்னிப் போரில் புலிகள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். என்பதோடு மக்களும் புலிகளிடமிருந்து மனம் வேறு பட்டி நிற்பதைக் காணமுடிகிறது. இன்று அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு ஆயுதப் போராட்டத்தின் முடிவின் ஒரு பயங்கரவாத அரசின் கொடூர இரத்த வெறிக்கு பலியாகி நிற்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஜனவரி முதலாம் நாள் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்த அன்று சிங்கள இராணுவத்தினர் கிளிநொச்சிக்குள் நுழைந்து சிங்கக் கொடியை ஏற்றிய போது அந்த நகரமும் அதை அண்டிய கிராமங்களும் துடைத்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அப்படியானால் அவர்கள் திரும்பி வருகிற உத்தேசத்தோடு முல்லைத் தீவு நோக்கி சென்றிருக்கிறார்கள். முல்லைத்தீவும் புதுக்குடியிருப்பும் விழுந்த பிறகு செல்வதற்கு கடலைத் தவிற வேறு இடங்கள் ஏதும் இல்லாத சூழலில் முள்ளியவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் பொறி வளைக்குள் சிக்கிக் கொண்டார்கள்.

பெப்ரவரி மாதவாக்கில் புதுக்குடியிருப்புக்குப் போன ஒரு கிளிநொச்சிப் பெண்ணின் வாக்குமூலம் இப்படியாக இருந்தது .

”நாங்கள் வன்னிப் பிரதேசத்து மக்கள். முதலில் எங்களையும் தமிழீழத்தின் ஏனையப் பகுதி மக்களுக்குமான வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே இங்கே நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் போரின் ஆரம்ப காலம் தொட்டே வன்னிப் பகுதிதான் அதன் இதயப்பகுதியாக இருந்து வந்திருக்கிறது. வடக்கு,கிழக்கின் எல்லாத் தமிழ் குடும்பங்களும் ஈழ விடுதலைப் போரில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தாலும் அங்குள்ள மக்கள் எல்லாக் காலத்திலும் அரசப் படைகளின் கண்காணிப்புக்குள்ளேயே வாழ நேர்ந்து வந்திருக்கிறது. ஆனால் வன்னி மக்களை மட்டும் புலிகளிடமிருந்து வேறு படுத்திப் பார்த்து விட முடியாது. ஒவ்வொரு வன்னிக் குடும்பமும் ஒரு புலிக்குடும்பமே. நாங்கள் யாரும் புலியாக பிறந்ததில்லை. புலியாக வேண்டும் என வளர்ந்ததும் இல்லை. இன்று தம்பியும், நானும் விரும்பியா சாகிறோம். அல்லது வேண்டி விரும்பி மரணத்தை நேசிக்கிறோமா? 

இல்லை நாங்கள் வாழ்வதற்காகவே போராடுகிறோம். வாழ்வதற்கான உரிமையை இந்திய அரசு உங்களுக்கு எப்படி வழங்கியிருக்கிறதோ அதே உரிமை எனக்கும் என் குழந்தைக்கும் உண்டு. ஆனால் ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் அதிலும் குறிப்பாக வன்னித் தமிழனுக்கும் வாழ்வதற்கான உரிமையை மறுத்து சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத் தூவி இந்தியாவின் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் வேகமாக ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது சிங்களப் பேரினவாதம். 

கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றிய போது நாங்கள் முல்லைத்தீவிற்குப் போனோம். எங்கள் உடமைகளையும், கால்நடைகளையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனோம். புலிகள் எங்களை முல்லைத் தீவிற்கு கடத்திச் சென்று விட்டதாக சிங்கள ராணுவம் சொன்னது. ஒரு வேளை புலிகளோடு நாங்கள் செல்லாமல் கிளிநொச்சியில் ராணுவத்தை வரவேற்றிருந்தால் இன்றைக்கு வவுனியாவிலும் மன்னாரிலும் என்ன நடக்கிறதோ அது எங்களின் தாய்வீடான கிளிநொச்சியிலேயே நடந்திருக்கும். நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரத் துவங்கியது  ஒரு மழைக்காலத்தில். சிங்களப் படைகளின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகள் சேரும் சகதியுமான சதுப்பு நிலத்திற்குள் சிக்கி கிட்டத்தட்ட பத்து நாட்கள் தடை பட்டபோது நாங்கள். பரந்தன் முல்லைத்தீவு ஏ&35 நெடுஞ்சாலையோரமாக குடும்பம் குடும்பாக இடம்பெயர்ந்தோம் ஏற்கனவே நாங்கள் கடும் யுத்த சூனியத்துக்குள் சிக்கியிருந்த படியால் இடப்பெயர்வுக் காலத்தில் உண்ண போதுமான உணவு எங்கள் யாரிடமும் இருக்க வில்லை. ஆனாலும் வழிநெடுகிலும் நாங்கள் நம்பிக்கையை மட்டும் இழக்க வில்லை. தருமபுரம், விசுவமடு, உடையார்க்கட்டு, புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு கிராமமாக போனோம். ஒவ்வொரு கிராமத்தையும் சிங்கள ராணுவம் ஆக்ரமித்தது. எந்த இடத்தை பிடிக்கப் போகிறார்களோ அந்த இடத்தை பாதுகாப்பு வலயமாக( sணீயீtஹ் க்ஷ்ஷீஸீமீ) அறிவிக்கிறது சிங்கள ராணுவம். நாங்களும் பாதுகாப்பு வலயமாக இருக்கிறதே என அங்கு செல்கிறோம். உண்மையில் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை அரசு உருவாக்குகிற இடங்களுக்குள் செல்கிற மக்களின் கதி என்ன தெரியுமா? நரிவளைக்குள் போய் சிக்கிக் கொண்ட முயல்களுக்கு என்ன கதி நேருமோ அதே கதிதான் இன்று எங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு இடமாக ஓடினோம். ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் ஒதுங்கினோம். கிடைத்ததை உண்டோம். வள்ளிப்புனம், தேவிபுரத்திற்குப் போனோம்,( இவை இரண்டும் மக்கள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடங்கள்) அங்கிருந்தும் கடைசியில் ஓட வேண்டியதாயிற்று. ஓடி ஓடி இப்போது நாங்கள் வந்து நிற்பது முல்லித்தீவின் கடைசி கடலோர சிறு நகரமான முள்ளியவாய்க்காலில், நாங்கள் இந்த ந்ந்திக்கடலுக்கு அருகில் வந்து சேர்ந்த போது கிளிநொச்சியிலிருந்து நாங்கள் எடுத்து வந்த எதுவும் எங்களுடன் இல்லை. கால்நடைகள், தார்ப்பாய்கள், என எதுவும் இல்லை அது மட்டுமல்ல ஒரு குடும்பத்தில் இன்னும் எஞ்சியிருப்பது ஒரு சில உயிர்கள் மட்டுமே.கண்ணெதிரில் குழந்தையை துளைத்துச் சாய்க்கிறது குண்டு. வீதியில் சாகிற இளையவளைத் தூக்கச் சென்றால் இருக்கிற இரண்டு குழந்தைகளையும் இழக்க நேரிடலாம் அதனால் நாங்கள் எங்கள் குழந்தைகளின் பிணங்களை அப்படியே விடுகிறோம். முல்லைத்தீவு முழுக்க வீதியோரம் புதைக்க ஆளில்லாமல் சிதறிக்கிடக்கிறது ஆயிரக்கணக்கான உடல்கள். அத்தனையும் பாதுகாப்பு வலயத்திற்குள் வீசப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளால் எரிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள், தமிழர்கள் என்பதால் எரிந்து சாம்பாகிக் கிடக்கிறார்கள். இப்போது நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் உறவென்று சொல்லிக் கொள்ளவோ,தஞ்சமடையவோ எங்களுக்கென்று ஒரு இடமில்லை. 

கடைசியில் எதிரியிடமே சரணடைந்தால் என்ன என்று விசுவமடுவில் நாங்கள் கைகளைத் தூக்கினோம். யாழ்பாணத்தையும். மட்டக்களப்பையும் சிங்கள ராணுவம் கைப்பற்றிய போது அங்குள்ள மக்களை எப்படி அவரவர் இல்லத்தில் குடியமர்த்தி மொத்தமாக அந்தப் பிரதேசங்களை திறந்த வெளிச்சிறைச்சாலையாக்கினார்களோ அப்படி எங்களையும்  எங்கள் பூர்வீக நகரமான கிளிநொச்சிக்கு அனுப்புவார்கள் என நம்பினோம். ஆனால் நாங்கள் எங்கு சரணடைந்தோமோ அந்த இடத்திலேயே எங்கள் பிள்ளைகள் இருவேறாக பிரிக்கப்பட்டார்கள். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், என வடிகட்டினார்கள் அதில் குழந்தைகளையும், முதியவர்களையும் எங்கோ கொண்டு சென்றார்கள். இளைஞர்களையும் இளம் பெண்களையும் சிறப்பு முகாம் என அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவிற்கு கொண்டு சென்றார்கள். எத்தனை பேர் சரணடைந்தார்கள் என்றோ அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றோ எந்த விபரமும் யாருக்கும் தெரியாது. கிளிநொச்சியில் ஒரு குடும்பம் கூட குடியமர்த்தப்படவில்லை. ஆனால் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். பெண்களை அவர்கள் அபகரிக்கிறார்கள் எங்களுக்கு மாற்று உடைகள் இல்லை உள்ளாடைகள் இல்லை ஏனைய ஆண்களுக்கு முன்னால் சகஜமாக நடக்கக் கூட கூச்சமான ஒரு வாழ்வையே நாங்கள் வாழ்கிறோம். எங்களின் ஆடைகள் எல்லாம் ரத்தக் கறைகள். இப்போது என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. புலிகளும் அழிகிறார்கள் நாங்களும் அழிகிறோம்.” என்று நீண்டு செல்கிறது அந்த வாக்குமூலம். 

இன்றைக்கு சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது இந்த வாக்குமூலம் மிகைப்படுத்தப்பட ஒன்றாக தெரியவில்லை. சமாதானக் காலத்தில் அங்கு ஏராளமான தன்னார்வக்குழுக்கள் பணி செய்து வந்தார்கள். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் தன்னார்வக்குழுக்களும் அங்கு பல் வேறு பணிகளை ஆற்றி வந்தார்கள். சமாதானத்திற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்ட பிறகு முதன் முதலாக அங்கிருந்து யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறினார்கள். ஐநாவின் மனித உரிமை கண்காணிப்பகமும் அங்கிருந்து வெளியேறியது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை போர் பகுதிக்குள் இராணுவம் அனுமதிக்க வில்லை இருந்தவர்களையும் வெளியேற்ற நெருக்கடிகளை உருவாக்கி வந்தது. சில மருத்துவர்கள், சர்வதேசப் பணியாளர்களும் மக்களோடு மக்களாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்னும் சூழலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி தமிழக உறுப்பினர்கள் போர் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது வெறும் எழுபதாயிரம் மக்களே போர் பகுதிக்குள் சிக்கியிருப்பதாகச் சொன்னார். பிரணாப் இலங்கையிடம் என்ன தகவலைக் கேட்டாரோ அந்த தகவலை மறு திருத்தமோ விசாரணையோ இன்றி அப்படியே இந்திய மக்களுக்குச் சொன்னார். இரண்டு லட்சம்  மக்கள் போர்ப் பகுதிக்குள் சிக்கியிருக்க எழுபதாயிரம் பேருக்கு மட்டுமே போதுமான உணவு நீண்ட இடைவெளி விட்டு அனுப்பப் பட்டது. அது சுத்தமாக அவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் பட்டினிச்சாவுகள் மிக அதிக அளவில் அங்கு நடந்திருக்கிறது. குழந்தைகள் ஊட்டச் சத்தில்லாமல் இறந்தது போக முதியோர்களும் கடும் மன நெருக்கடியிலும் குண்டுக் காயங்களிகும் மடிந்தார்கள் இன்றும் மடிந்து கொண்டிருக்கிறார்கள். 

மே 14&ஆம் தேதி வரை புதுமாத்தளன் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. நான் அன்றாடம் நள்ளிரவில் தொலைபேசி செய்து மக்களின்  நிலை குறித்து விசாரித்து வந்தேன். அங்குள்ள தாதிகள் சிலரிடமும் பிரதான மருத்துவப் பணியாளர்கள் சிலரிடம் என்னால் கடைசி நேர தொடர்புகள் பேணப்பட்டிருந்தது அனால் 16&ஆம் தேதி நான் மருத்துவமனை எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அந்த எண் செயலிழந்திருந்தது. அதற்கு முன்னர் பேசிய போதெல்லாம் நாங்கள் செயலிழந்து கொண்டிருக்கிறோம். எங்களின் மருத்துவர்கள் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் காயமடைந்தவர்களை இங்கு கொண்டு வரவோ அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவோ எங்களால் இயலவில்லை கடும் எரிகணைத் தாக்குதலில் நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். ஏதாவது அற்புதங்கள் நடந்தால் மட்டுமே மீதியிருக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என்று அங்கே கடைசியாக பணியிலிருந்த ஒரு தாதிப் பெண் என்னிடம் குறிப்பிட்டார். அவர் சொன்னக் கணக்கில் பிணங்கள் மட்டும் பல ஆயிரங்களைத் தாண்டி இருந்தது. அங்கிருந்து கடைசியாக வந்த புகைப்படங்களும் கனரக ஆயுதங்களின் பிரயோகிப்பட்டதை உறுதிப்படுத்தின.ஆனால் இந்தியாவும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் அங்கே கனகர ஆயுதங்கள் பயன்படுத்த வில்லை என்று தொடர்ந்து சொல்லி வந்தனர். கலைஞர் தன் உண்ணாவிரதத்தை ஒட்டி அந்த கோடூரமான இறுதிப் போரை இப்படி வர்ணித்தார் ” மழை விட்டும் தூரல் இன்னும் விட வில்லை ” என்றார். 

கிளிநொச்சியில் இருந்து தங்கள் வீட்டின் நிலைகளைக் கூட பெயர்த்துக் கொண்டு டிராக்டர்களிலும் மாட்டு வண்டிகலிலும் இரு சக்கர வாகனங்களிலுமாக

குழந்தைகள், பெண்கள், ஆண்கள், அவர்களுக்கான உடுதுணிகள், குடைகள், சமையல் பாத்திரங்கள், உழவு இயந்திரங்கள், நகைகள், பணம், கால்நடைகள், கோழிகள், நாய்கள் என வீட்டுப் பிராணிகளையும் எடுத்துக் கொண்டு சென்றவர்கள் இப்போது உடுத்த துணியோடு எஞ்சிய தங்களின் உறவுகளைச் சுமந்தபடி இராணுவ முகாமகளை நோக்கி வந்தார்கள். அவர்கள் நந்திக்கடலைக் கடக்க வேண்டியிருந்தது . அது ஒரு வேதனையாக திரும்புதல். முல்லைத்தீவு கடலில் தரையிரங்கும் முயர்ச்சியின் போது பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டு கடைசியாக அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலையமும் உடைக்கப்பட்டபோது புலிகள் சில நூறு அடிகளுக்குள் குறுகிய எல்லைக்குள் முடக்கப்பட்டார்கள் மக்கள் உடைக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்திலிருந்து வெளியேறத் துவங்கினார்கள். குற்றுயிரும் குலையிறுமாக அவர்கள் நந்திக்கடலை கடக்க வேண்டியிருந்தது. வயது முதிர்ந்த முதியவர்களை நந்திக்கடலில் வழியே மீட்டு வர முடியாத சூழலில் பெரும் வேதனையோடு தாய்மார்கள் குழந்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை கைவிட்டபடியே கடந்து வந்தார்கள். பலரும் தங்களின் முதிய தாய்களை இவ்விதமாய் வேதனையோடு கைவிட்டதை நினைவு கூர்கிறார்கள். அவர்கள் இப்போது என்ன ஆனார்கள் என்ற தகவல் யாரிடமும் இல்லை. வருகிற வழியில் நந்திக்கடலில் ஏராளமான பிணங்கள் மிதந்ததையும் பலர் அந்த நீரேரியிலேயே விழுந்து மடிந்ததையும் காயங்களுக்கு மருந்தில்லாத சூழலில் வருகிற வழியிலேயே நடக்க முடியாமல் காவிச் செல்வதற்கான கழிகள் கூட இல்லாமல் பலரும் மடிந்திருக்கிறார்கள். பசி, காயம், மனநலப்பாதிப்பு, உடல் உபாதைகள், நீண்ட கால ஓட்டம் என எல்லாமே அவர்களை நிர்கதியாய் கொண்டு வந்து சிங்களச் சிப்பாய்களிடம் நிறுத்தியது. இன்று அவர்கள் முகாம்களுக்குள்.

Exit mobile version