Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிலம் உண்டு வளம் உண்டு. வறுமையும், ஊழலும் எங்கிருந்து வருகின்றன?- “The Pope’s Toilet”:ரதன்

   எங்களது வாழ்க்கையில் பல எல்லைகளை கடந்துள்ளோம். எமக்கருகில் உள்ள கனடா-அமெரிக்க எல்லையை பல தடவைகள் கடந்துள்ளோம். ஓவ்வொரு தடவை கடக்கும் பொழுதும் பல வித்தியாசமான அனுபவங்கள், பல கதைகள் உண்டு. அவ்வாறே பல எல்லைகளை நாம் கடந்திருப்போம். மெக்சிக்கோ – அமெரிக்க எல்லை, இந்தியா- நேபாள எல்லை, ஜரோப்பிய நாட்டு எல்லைகள் என பல எல்லைகளை கடந்த அனுபவங்கள் உண்டு. இந்திய- நேபாள எல்லையை சைக்கிள் ரிக்சாவில் கடக்கலாம். ஒரு தடவை போட் எரி (கனடா-அமெரிக்க எல்லை) எல்லையில் ஒருவர் சைக்கிளில் கடந்ததை கண்டுள்ளேன்.

 இவ்வாறான ஒரு எல்லைதான் பிரேசில் – உருகுவே எல்லை. இதனருகில் உள்ள ஊரின் பெயர் மெலோ (Melo). மெலோ உருகுவே நாட்டில் உள்ள ஊர். உருகுவே பெருமளவு ஜரோப்பியரைக் கொண்;ட லத்தீன் அமெரிக்காவின் இரண்டாவது சிறிய நாடு. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஊழல் குறைந்த நாடு. நீண்ட காலம் இராணுவ ஆட்சியி;ல் இருந்த நாடு. விவசாயத்தை பிரதானமாக கொண்ட நாடு. உருகுவே வெளிநாட்டு பொருட்களுக்கு தடை விதித்தது. இதன் காரணமாக பெருமளவு பொருட்கள் பிரேசிலில் இருந்து கடத்திவரப்படுகின்றன. இந்த மெலோவிற்கு ஒரு நாள் பெரும் அதிர்ச்சி. போப்பாண்டவர் இங்கு வரப்போகின்றார் என்பதே. அந்த மக்களுக்கு என்ன செய்வதே என்றே தெரியவில்லை. குழம்பியிருந்தார்கள்.

 அவ் ஊர் மக்களில் சில ஆண்கள் பிரேசில் எல்லையை சைக்கிளில் கடந்து வெளிநாட்டு பொருட்களை கொண்டு வந்து மெலோ வியாபாரிகளுக்கு கொடுப்பார்கள். சுமார் 60 கிலோ மீட்டர்களை ஒவ்வொரு தடவையும் இவர்கள் கடக்க வேண்டும். அப்படி கடந்து பொருட்களை வீதி வழியாக கொண்டு வரமுடியாது. எல்லையில் இராணுவ சோதனை முகாமுண்டு. வயல் வழியாகத்தான் கொண்டு வரவேண்டும். அப்படிக் கொண்டுவரும் பொழுது, வழமைபோல் கடத்தல் காரர்களது எதிரி சுங்க இலாகா அதிகாரி மறித்து பல பொருட்களை எடுத்து விடுவார். சுpல சமயங்களில் இதனால் வியாபாரிகளுக்கு இலவசமாக ஒரு பயணத்தை இந்த கடத்தல்காரர்கள் செல்ல வேண்டி வரும். கடத்தல்காரர்களது வேலை பொருட்களை மெலோ வியாபாரிகளிடம் கொண்டுவந்து கொடுப்பதே. என்ன என்ன பொருட்கள் என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. முழுப் பொருட்களையும் கொடுக்காத பட்சத்தில் இலவசமாக ஒரு தடவை சென்று வரவேண்டும். சுரண்டலின் முழு வடிவத்தை இங்கு காணலாம்

 இந்த கடத்தல்காரர்களில் ஒருவன் பீற்றோ. இவன் தனது மனைவி, மகளுடன் ஒரு சிறு வீட்டில் வாழ்ந்து வருகின்றான். எந்த பெரிய ஆசையோ, எதிர்பார்ப்புகளோ இன்றி மிகவும் அமைதியாக கழிகின்றது இவர்களது வாழ்க்கை. இவர்களிடம் ஒரு சிறு தொலைக்காட்சிப் பெட்டி உண்டு. இவ் ஊர் மக்கள் பெரும்பாலும் வானொலியையே தங்கியுள்ளார்கள். பீற்றோவின் மகளுக்கு வானொலி அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆசை. இதற்காக அவ்வப்போது மைக்முன்னால் நிற்பது போல் நினைத்துக் கொண்டு பயிற்சி எடுப்பாள்.

 போப்பாண்டவர் வருகின்றார் என்ற அறிவித்தலுடன் ஊடகங்கள் நிறுத்தவி ல்லை. சுமார் இருபதனாயிரம் பேர் மட்டில் பிரேசில், மற்றும் சுற்றுப்புற நகரங்களில் இருந்து வருவார்கள் எனக் கூறியது. ஊர் மக்கள் இத்தருணத்தை எப்படி சாதகமாக மாற்றுவது என யோசிக்கத் தொடங்கினார்கள்.

இருபதானாயிரம் பேருக்கு என்ன என்ன தேவை என பட்டியலிட்டு ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். தேநீர், கோப்பி, பலகாரங்கள் (கொட் டோக், பேகர்) டொனட், நினைவுப் பொருட்கள், போப்பாண்டவரின் உருவப் படங்கள் என தயாரிப்புக்கள் அமர்க்களப் படத்தொடங்கின. பீற்றோவின் குடும்பமும் இதனை சாதகமாக்க யோசனைகளில் ஈடுபட்டது. பீற்றோவின் மனைவி யேசுவின் உருவ சிலையை அடங்கிய நினைவுச் சின்னத்தை விற்கலாம் என யோசனை கூறினார். இதனை பீற்றோ ஏற்கவில்லை. இறுதியில் பீற்றோவிற்கு ஒரு வித்தியாமான யோசனை தோன்றியது. இங்கு வருபவர்கள் மலசலம் கழிக்க சரியான இடமில்லலை. எனவே ஒரு மலசல கூடத்தை கட்டினால் என்ன என்பதே அது. ஆனால் இதற்கு பணம் தேவை. ஒரேயொரு வழி கடத்தலை கூட்டுவதே. அதாவது ஒரு நாளைக்கு இரண்டு தடவை செல்வது. ஒரு நாளைக்கு சுமார் 100 கி. மீறறர் சைக்கிள் மிதிக்க வேண்டும்.

 பீற்றோ தனது முயற்சியை தொடங்கி விட்டான். கடத்தல்காரர்களில் பீற்றோவிற்கு ஒரு பிரச்சினையும் உண்டு. ஒரு தடவை ஒரு வியாபாரி சொன்ன பொருட்களை கொண்டு வரும் பொழுது, இராணுவ சோதனைச் சாடியில் சோதனை இட்;ட பொழுது மாபையினுள் பற்றரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பின் சுங்க அதிகாரிகள் பீற்றோ மேல் ஒரு கண்வைத்திருந்தார்கள். இதற்கிடையில் ஒரு சுங்க அதிகாரி ஒருவரிடமிருந்து கடன் பெற்றான். இது மலசல கூடம் கட்டவும், அவனது கனவான மோட்டார் சைக்கிளுக்கு முற்பணம் கட்டவும் காணுமாக இருந்த:து. இதற்கு மாற்றாக சுங்க அதிகாரிக்கு பல கடத்தல் பொருட்களை கொண்டுவந்து கொடுக்க வேண்டும். பீற்றோவின் மனைவி, பீற்றோவிற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். மகளுக்கு தகப்பன் கடத்தல் செய்வதே அவமானம். இதனால் மகளுக்கும், தந்தைக்குமிடையில் ஒரு அகப்போரே நடந்து கொண்டிருந்தது. தனது ஊடகவியல் படிப்பிற்கு பல் கலைக்கழகம் செல்ல பீற்றோ தடைசொல்வதுடன், பணமில்லை என்பதும் மகளுக்கு அவமானமாகவும், கோபமாகவுமாக இருந்தது.

 பீற்றோ மட்டுமல்ல அவ்   ஊர் மக்கள் அனைவரும் தம் சக்தியை மீறி முதலிட்டு மூலப் பொருட்களை வாங்கி தயாரிப்புக்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். பீற்றோ தகரத்தில் அமைப்பதற்கு பதிலாக, சிமெண்டில் கட்டத் தொடங்கி விட்டான். இதற்காக இவனது கடத்தல் பயணங்கள் அதிகரிக்கத் தொடங்கின. நாள் நெருங்க, நெருங்க பதட்டமும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. மலசல கூடத்திற்கு கதவு மட்டும் தான் போடவேண்டும். அதனைக் கூட மரத்தில் கவர்ச்சியாக போட பீற்றோ முடிவெடுத்தான். மனைவி, மகளை எப்படி வருவோரிடம் கதைக்க வேண்டும் என பயிற்சியும் கொடுத்தான். சகல தயாரிப்புக்களும் முடிந்து கதவும் போட்டு தயாராக காத்து நின்றார்கள் மகளும், தாயும். அவ்  ஊரில் பொருட்கள், பட்சணங்கள் குவிந்திருந்தன.

 பீற்றோ அன்று காலையும் சைக்கிளில் பிரேசில் எல்லையைக் கடந்து கடத்தல் பொருட்களுடன் வரும் பொழுது, இராணுவ சோதனை முகாமில் ஏற்பட்ட தகராறில் சைக்கிள் உடைக்கப்பட்ட விட்டது. மகளும், தாயும் அவ்  ஊர் மக்களும். இருபதாயிரம் விருந்தினர்களை எதிர்பார்த்து காத்து நின்றார்கள். வீதியெங்கும் கடைகள்.  வியாபாரிகள் ஆவலுடன் தங்களை தாங்களே உற்சாகப்படுத்தி நின்றார்கள்.

 அந்த நாளும் வந்தது. பெருமளவு ஊடகவியலாளர்களும், சிறிதளவு பக்தர்களும் வந்திருந்தார்கள். பல கடைகளில் எவருமே காணப்படவில்லை. யேசுவின் உருவம் பொதித்த உருவச் சின்னங்களே பெருமளவு விற்கப்பட்டன. பீற்றோவின் மலசல கூடத்தை எட்டிப்பார்ப்பார்கள் எவருமே இல்லை. பல உணவுப் பொருட்கள் பெருமளவு வீணாகிவிட்டன. மிகுதி நாய்களுக்கும்,  புனைகளுக்கும் பன்றிகளுக்குமே வீசப்படும். வீணாவற்றை சாப்பிடுமளவிற்கு அவ்  ரில் மிருகங்கள் இல்லை.

 பீற்றோ சைக்கிளுமின்றி மலசல கூட வருமானமுமின்றி எதுவுமற்றவனாகிவிட்டான். அவ் ஊர் மக்கள் பலரின் கதியும் அதுவே. பீற்றோ இப்போ நடந்து கடத்தல் பொருட்களை கொண்டுவரத் தொடங்கிவிட்டான்.

 இப் படத்தின் இயக்குனர் César Charlone  ஏற்கனவே சிற்றி ஒப் கொட் என்ற தொலைக்காட்சி தொடரின் ஒளிப்பதிவாளர். புல காட்சிகள் இயற்கை ஒளியில் படமாக்கப்பட்டுள்ளன. பச்சைப் பசேல் என்ற வயல்கள், பச்சையை மீறி வெளிப்படும் வறுமை. மஞ்சள் வெயில் பிரகாச ஒளி வெளிப்படுகின்றது. பெரும்பாலான காட்சிகள் பகலிலேயே படமாக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த செலவில் முக்கியமான ஒளிக் கருவியாக சூரியனையே கொண்டு படமாக்கப்பட்டுள்ள முறை குறிப்பிடத்தக்கது.

 திரைக்கதையாசிரியர்கள் தமது நோக்கத்திலிருந்து சற்றும் மாறாமல் இறுதி வரை கதையை நகர்த்துகின்றார்கள். கதாசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ள உண்மை  சார் கேளவிகளும, மனச்சாட்சியின் வெளிப்பாடும் பாத்திரங்ளில் பதிவாகியுள்ளன. பீற்றோவும, அவனது மகளும் சமூகத்தை வௌ வேறு கோணங்களில் பார்க்கின்றார்கள். அவர்களது உணர்வுகள், சமூகம் மீதான பார்வைகள், கோபங்கள் இயல்பாக வெளிப்படுகின்றன. .இறுதியில் வறுமை காரணமாக ஒரே கோட்டில் பயணிக்கின்றனர்.

 படத்தின் களம் புதியது. மனிதர்கள் எம்முடன் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள். இவர்களது இயல்பு மாறாமல் பதிவாக்கியுள்ளார்கள். பிற்றோவுக்கும், மனைவிக்குமான உறவு, பிற்றோவுக்கும் மகளுக்குமான காட்சிகள் பெரும்பாலும் வசனமற்று, இயல்பாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. கவித்துவமான காட்சிகள். இது லத்தீன் அமெரிக்க படங்களேக்குரிய தனிச் சிறப்பு.

 ஊடகங்களின் அதீத கற்பனையையும். அதீத விளம்பரமும் ஒரு சிறு கிராமத்தையே சூறையாடிவிட்டது. 20,000 பேர் என்ற கணிப்பு எந்த அடிப்படையில்? பொறுப்பு வாய்ந்த ஊடகத்தின் பொறுப்பின்மையும்.  விளம்பர மோகத்தின் எதிர்விளைவையும் இச் சிறு சமூகம் பரிசாகப் பெற்றுள்ளது. தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்ட வேண்டிய நிலையை ஊடகங்கள் ஏற்படுத்திவிட்டன. இங்கு பீற்றோ மட்டுமல்ல தோல்வியாளர். முழுச் சமூகமுமே. இதற்கு யார் காரணம் அரசா? மத நிறுவனமா? என்ற கேள்வி எழுகின்றது.

   ஒரு சிறு சமூகத்தை சுரண்டும் ஊழல் அதிகாரிகள், அதனைச் சுற்றியுள்ள அரசு ஆகியவற்றையும் படம் கடுமையாக சாடுகின்றது.

 போப்பாண்டவர் ஒரு ஊருக்கு வரும் பொழுது அவ் ஊ ர் மக்கள் அவரது தரிசனத்தையே தேடி நிற்பார்கள். இங்கு மாறாக இவ் ஊர் மக்கள் இதனால் தாங்கள் எவ்வாறு சிறிது பணம் பெறலாம் என நினைக்கின்றார்கள். வறுமையில் வாழபவர்களுக்கு வயிறு முக்கியம். ஷஎத்தனை முறை தோல்வியடைந்தாலும் தொடர்ந்து வாழ்வுக்காக போராடும் மக்கள். சைக்கிளை இழந்த போதும். நடந்து கடத்தலை தொடங்கும் பீற்றோ. இங்கு சட்ட விரோதம் என்பது அவர்களது வாழ்வு. பார்வையாளர்களுக்கும் பீற்றோ குழவினர் அவ்வாறு தெரியவில்லை. மாறாக அங்கு செயல்படும் அதிகாரிகளே சட்டவிரோதிகளாக தெரிகின்றனர். லத்தீன் அமெரிக்க படங்களின் சிறப்பே இந்த யதார்த்தமே.

 நிலம் உண்டு வளம் உண்டு. வறுமையும், ஊழலும் எங்கிருந்து வருகின்றன? என்ற கேள்வி இப் படத்தைப் பார்க்கும் பொழுது எழுகின்றது. இவ் ஊர் மக்களின் வில்லனாக போப்பாண்டவர் வருகை அமைந்துவிட்டது. இப் படம் ஒஸ்கார் பட்டியலில் இடம் பெறாமைக்கு காரணம் படத்தின் தலைப்பு. மேற்கத்தியம் தமது வாழ்வு முறை என எதிர்பார்க்கும் அமைதியும், நேர் கோட்டு வாழ்வு முறைக்கும் எதிரான திரைப்படங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

 இப் படம் உண்மைச் சம்பவங்களைக் கொண்டது. போப்பாண்டவர் 1998ல் லத்தீன் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போதே இது நடைபெற்றது. இதனை பார்த்த பின்னர் சீனாவில் இருந்து பெருமளவு சுற்றுலாப் பயணிகள் தைவானுக்கு வருவார்கள் என்ற சீன அரசாங்கத்தின் அறிவிப்பை தைவான் பெரிதாக எடுக்கவில்லை. இப் படத்தின் எதிர்விளைவு இது என தைவான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

 Cast: César Troncoso, Mario Silva, Virginia Méndez and Virginia Ruiz
Directors/Screenwriters: Enrique Fernández and César Charlone

Exit mobile version