Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிருபாமா – கருணாநிதி: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்

“போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியா உதவும். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும், அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ், போர் நடந்த பகுதியில் தமிழர்களின் வாழ்வும், மறுவாழ்வுப் பணிகளும் எப்படி நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிய இந்திய அரசின் மூத்த அதிகாரி அடுத்த மாதம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வார். “எங்கே வீடு கட்டித் தரவேண்டும் என்று (சிறிலங்க அரசு) இடம் ஒதுக்கித் தருகிறார்களோ அந்த இடத்தில் இந்தியா வீடு கட்டித்தரும்” என்று கூறியுள்ளார்.” என்று இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியும், இனப்படுகொலையின் பின்னணியில் செயலாற்றிய கருணாநிதி அரசு, மத்திய அரசு, இலங்கை அரசு என்ற முக் கூட்டணிக்கு எதிரான உணர்வலைகளும் இந்திய அரசிசைப் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவும் அதே வேளை தமிழ் நாட்டின் அதிகரித்துவரும் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட மிகவும் நுணுக்கமான முயற்சியே இந்த உதவியின் பின்புலமாகும்.

உழைத்து வாழ்ந்த வன்னி மக்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவர்களின் விளைநிலங்கள் பல் தேசிய முதலீட்டுக்காகவும், பௌத்த விகாரைகளின் புனிதப் பிரதேசங்களுக்காகவும், இராணுவக் குடியிருப்புக்களுகாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

வளம்மிக்க நிலங்களை வன்னி மக்களிடமிருந்து பறிமுதல் செய்து அவற்றில் சிங்களக் குடியேற்றங்களையும்,இந்திய- பல்தேசியக் நிறுவனங்களை அமைக்கவும், இராணுவக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்படுவதற்கான அறிகுறியே இந்த உதவியின் சாராம்சம்.

தவிர, இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு நிதிக் கொடுப்பனவுகளிலிருந்து வழங்கப்பட்ட பணத்தில் அரசால் அழிக்கப்பட்ட வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு அடிப்படையான உதவிகள் கூட வழங்கப்படவில்லை.

புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசு திட்டமிட்டது போல எழுச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழ் நாட்டில் இதனை மட்டுப்படுத்தி அழிப்பதற்கான ஆயுதமாகவும் இந்த உதவி பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்ப் பேசும் மக்களின் இனச் செறிவைக் குறைத்து அவர்களின் அடையாளத்தை அழிக்கும் இலங்கை – இந்திய அரசுகளிகளின் முதல் நோக்கமும் எழுச்சிகளை ஒடுக்கும் இரண்டாவது நோக்கமும் கொண்ட இலங்கை அரசிற்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகள் இனம்காணப்பட வேண்டும்.

Exit mobile version