Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நியூஸ் 18 போலி மெயில் மாரிதாஸ் மேலும் ஒரு வழக்கில் கைது!

கடந்த ஆண்டு நியூஸ் 18 தொலைக்காட்சியின் இமெயில் ஒன்றை போலியாக உருவாக்கி சில பத்திரிகையாளர்களின் பணிகளுக்கு சிக்கல் செய்த நிலையில் அந்த தொலைக்காட்சி நிர்வாகம் மாரிதாஸ் பயன்படுத்திய இமெயில் போலியானது என வழக்குப் பதிந்திருந்தது. அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தளபதிகள் பலியானது தொடர்பாக விஷமத்தனமாக பதிவு வெளியிட்ட மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று நியூஸ் 18 நிறுவனத்தில் பெயரில் போலி மெயில் ஐடி உருவாக்கி அவதூறு பரப்பிய வழக்கில் கைதாகியுள்ளார்.

மாரிதாஸ் கைதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்றுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்தி ஊடகங்களின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஊடகவியலாளர்களை நேர்மையான வகையில் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் என்பவரை, நியூஸ்18 தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. வினய் சரவாஹி அளித்த மோசடி புகாரில் கைது செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
போலியாக மின்னஞ்சலை உருவாக்கி, மோசடி செய்திருப்பதாகவும், அவரது செயலால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் திரு. வினய் சரவாஹி கடந்த 10.7.2020-ம் தேதி அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை புலன் விசாரணை செய்துவந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மாரிதாஸை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித் தனமாக அவதூறான வகையில் பேசியும் செயல்பட்டும் வந்த மாரிதாஸின் செயல்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் அப்போதே கண்டனம் செய்திருந்தது. சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவர் மீது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூர்கிறோம். தாமதமானாலும் தற்போதைய இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம்
*தங்கள் நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்காத பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதும், அவர்களைப் பற்றியும் குடும்பத்தினரைப் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசுவதுமான போக்கு ஆரோக்கியமானது அல்ல. பத்திரிகையாளர்களை அவர்களது பணியில் இருந்து விலக்குவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கும் போக்கை எவர் ஒருவர் முன்னெடுத்தாலும் அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். *
சமூகவிரோத சக்திகளிடம் இருந்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரது செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
11-12-2021

Exit mobile version