Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நியூயோர்க்கில் கூடும் நாடுகடந்த தமிழீழ அரசும் பதிலற்ற மடலும்

நாடு கடந்த அரசாங்கம் அரசியல் அமைப்புச் சபையாக இன்று நியூயோர்க் நகரில் கூடுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த அமர்வு ஐ. நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு எதிரில் அமைந்துள்ள மிலேனியம் யு என் பிளாசா எனப்படும் மாநாட்டு அரங்கில் நடைபெறுகின்றது.
இவ் அமர்வின் முதல் நாளின் போது முக்கிய விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து நாடு கடந்த அரசாங்கத்தின் அரசியலமைப்பு வரைவு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இம் முதல் நோக்கத்துக்கு அப்பால் அரசியலமைப்பு அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நாடு கடந்த அரசாசாங்கத்தின் கட்டமைப்பு இடைக்கால நிலையில் இருந்து நிரந்தரமான நிலைக்கு ஒழுங்கமைக்கப்படுவதே இவ் அமர்வின் இரண்டாவது முக்கிய நோக்கமாக அமைகிறது.
இவ் அமர்வின் போது நாடு கடந்த அரசாசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை நிறுவுவதற்கு வழிகோலும் என்பதும் இன்றைய நிலையில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு அபிவிருத்தி வேலைகளை கொள்கையளவிலும் நடைமுறையிலும் எவ்வாறு மேற்கொள்வது என்பதும் இவ் அமர்வின் போது ஆராயப்படும்.
நாடு கடந்த அரசாசாங்கமும் வாசிங்ரனில் அமைந்துள்ள அமெரிக்கன் பல்கலைக்கழத்தின் சட்டவியல் மனித உரிமைகள் செயற்பாட்டுக்குழுவினருடன் இணைந்து எம் இனத்திற்கான நீதி தேடும் முயற்சிக்கு சட்டவியல் முறைகள் பெற்றுத் தரக் கூடிய வாய்ப்புக்களை ஆராய்ந்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்துலக மனித உரிமை விதிகள் மீறப்பட்டதால் பாதிப்படைந்த மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதில் இவ் அமைப்புகள் சிறப்பான அனுபவம் பெற்றவை.
ஈழத்தமிழர்கள் பெருமளவில் வாழும் 15 முக்கிய நாடுகளில் இருந்து 112 பிரதிநிதிகளை நாடு கடந்த அரசாங்கத்தின் அரசியல் சபைக்கு தெரிவு செய்யும் முயற்சி சென்ற ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது எல்லோரும் அறிந்த விடயம். ஒரு சில நாடுகளில் இத் தேர்தல் முயற்சிகள் முற்றுப்பெறாத நிலையில் அவ்வகையான 8 நாடுகளின் நிலை பற்றி இங்கு அறியத்தருகிறோம்.
அவுஸ்திரேலியா: அவுஸ்திரேலியாவில் இருந்து தெரிவு செய்யப்படவிருந்த 10 பிரதிநிகளில் 6 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நியு சவுத் வேல்சில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 4 பிரதிநிகளின் தெரிவு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை பற்றி விசாரிப்பதற்கு டாக்டர் போல் டொமினிக் அவர்களை தலைவராகக் கொண்டு டாக்டர் கௌரிபாலன், திரு பத்மநாதன் ஆகியோரையும் உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. செப்ரெம்பர் 10ம் திகதி விசாரணையை முடித்து அறிக்கையைத் தருமாறு கேட்டிருந்த போதும் இவ் விசாரணைக்குழு இயல்பான நியாயம் எல்லோருக்கும் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கால அவகாசம் கேட்டிருந்ததால் முடிவுத் திகதி செப்ரெம்பர் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தகவலின்படி விசாரணை முடிவுற்றுள்ளது. தமது தீர்மானத்தை உறுதி செய்யும்நிலையில் தாம் இருப்பதாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யேர்மனி: யேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்பட இருந்த 10 பிரதிநிகளில் 6 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மற்றைய நால்வரின் தேர்தல் பற்றி எழுந்த கேள்விகளின் அடிப்படையில் மீள் வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருந்த வேட்பாளர்கள் சிலர் தேர்தலில் இருந்து விலகி விட்டதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து மற்றைய நான்கு வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தோம். இதன் பின்னர் இரு வேட்பாளர்கள் தாம் தேர்தலில் இருந்து விலகவில்லை என தேர்தல் ஆணையகத்திற்;கும் செயலகத்திற்கும் அறிவித்துள்ளனர். இவ் விடயம் தற்போது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் ஆணையகத்தினால் ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவித்தலை ஏற்றுக்கொள்வதோடு அதே வேளையில் நியாயத் தன்மையைப் பேணுவதன் அவசியம் கருதி இவ் விடயத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இனி நிறுவப்போகின்ற புதிய தேர்தல் ஆணையகத்திடம் கையளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ: பிரான்ஸில் இருந்து தெரிவு செய்யப்படவிருந்த 10 பிரதிநிகளில் 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட நால்வரின் தேர்தல் முறைகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. பிரான்ஸின் 93ம் 94ம் மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது முறைகேடுகள் நடை பெற்றதனால் அத் தேர்தல்கள் செல்லுபடியாகாதென தேர்தல் ஆணையகம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து விசாரணைக் குழு ஒன்று நிறுவப்பட்டது. இக்குழுவில் அங்கம் வகிப்போர் ஈடுபட்ட எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்கள்தான் என்பதும் அவதானத்துடன் நிறுவப்பட்டது. அதன் படி திரு தோமஸ் நுவலாந்தெ (சட்ட வல்லுனரும் பிரான்ஸின் அரசியல் கட்சியின் தேசிய மதியுரைக் குழு உறுப்பினரும்) திரு மிக்கேல் பராஸ் (பிரன்ச் சமூக அமைப்புத் தலைவர்) திருமதி லோறா புஜீ (பிரன்ச் பெண்மணி) திரு மைக்கல் லோறன்ற் (பாரிசின் 18 மாவட்ட பள்ளிகளின் பிரதிநிதி) செல்வி மலிக்கா அகலி (வரலாற்றாளார்) ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
விசாரணைக்குரிய தேர்தல் போட்டியாளர்கள் விசாரணைக்குழு தமக்கு அனுப்பிய அழைப்பு கிடைக்கவில்லை எனச் சொல்லி விசாரணையில் பங்கு பற்றவில்லை. ஆனாலும் விசாரணைக்கு வரும்படி இரு முறை அழைப்பு அனுப்பியதாக விசாரணைக்குழு கூறியுள்ளது. இக் குழு பிரான்ஸ் மொழியில் வெளியிட்ட 30 பக்கங்கள் கொண்ட அறிக்கை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு மதியுரைக்குழுவிற்;கும் அனுப்பப்பட்டது. விசாரணைக்குழு தேர்தலின் போது பாரிய முறைகேடுகள் நடைபெற்றதாகவும் போட்டியிட்டவர்களில் ஒருவர் பிரான்ஸ் சட்டத்துக்கு அமைய தேர்தல் எதிலும் போட்டியிட தகுதியற்றவர் எனவும் முடிவு செய்துள்ளது.
தனிப்பட்டவர்களின் விபரங்களை இவ் அறிக்கை கொண்டிருந்த படியால் இவ்வறிக்கையை வெளியிடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது. ஈடுபாடு உள்ள எல்லோரும் விசாரணையில் பங்கு பற்றவில்லை என்பதாலும் விசாரணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்ட விடயங்கள் அரசியல் அமைப்பு வரைவில் ஏற்;கப்பட்டுள்ளதாலும் இவ் விடயத்தினை வரப்போகும் புதிய தேர்தல் ஆணையகத்திடம் கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து: நெதர்லாந்து அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போதுள்ள நிலையில் அங்கு தேர்தல் நடாத்துவது சாத்தியம் இல்லையென அங்குள்ளவர்களால் கருதப்படுகிறது.
இத்தாலி: இத்தாலியில் தெரிவு செய்யப்பட வேண்டிய மூன்று பிரதிநிகளுக்கான விண்ணப்பங்கள் சென்ற வாரம் கோரப்பட்டு 3 பிரதிநிதிகளும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
அயர்லாந்து: அயர்லாந்து நாட்டுக்கான ஒரு பிரதிநிதி போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்
பின்லாந்து: இந் நாட்டின் ஒரு பிரதிநிதிக்கான தேர்தல் முயற்;சிகள் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்க உள்ளன.
இவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகளின் மொத்த எண்ணிக்கை 98 ஆகவும் மேலும் 14 பேருக்கான தேர்தல்கள் நடைபெறாமலோ அல்லது தீர்;வுகாணப்படாத கேள்விகளின் காரணமாக முடிவுகள் பின் போடப்பட்டும் உள்ள நிலை தெளிவாகிறது.
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் நியூயோர்க் நகர அமர்விலும் ஐரோப்பாவைச் சேர்ந்த பிரதிநிதிகளில் சிறுதொகையானோர் பாரிஸ் நகரத்திலும் இலண்டன் நகரத்திலும் வேறு ஒரு சில இடங்களில் இருந்தும் காணொளி ஊடாக நியுயோர்க் நகரில் உள்ளவர்களோடு கலந்து கொள்கிறார்கள்.
எமது அரசவையின் இந்த அமர்வின் போது ஆக்க பூர்வமான உரையாடல்கள் மூலம் நாடு கடந்த அரசாங்கம் தன்னுடைய இலக்குகளைச் சென்று அடைவதற்;கான வேலையின் அடுத்த அதிமுக்கிய கட்டத்துக்கு வழிகோலும் என்பது எம்முடைய பெரும் எதிர்பாப்பாக உள்ளது.
திரு. விசுவநாதன் ருத்திரகுமாரன்
இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர்

~உருத்திரகுமாரை நோக்கி சத்தியன் வரைந்த மடல் பதில் தரப்படாமலேயே இருப்பதால் அதனை மீண்டும் பதிகிறோம்.~
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உருத்திரகுமார் அவர்களே!
நாடு கடந்த தமிழீழம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்பதே என்னால் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எதாவது செய்கிறார்கள் என்று புலிகள் இயக்கத்திற்கு மாதச் சம்பளத்தையே வாரிவழங்கிய வள்ளல்களில் நானும் ஒருவன். இப்போது பணம் எதற்காக வாங்கினார்கள் எங்கே போனது என்பதெல்லாம் எனக்குப் மட்டுமல்ல அனைவரினதும் மூளையில் குந்தியிருந்து குடையும் நாளாந்தக் கேள்வியாகிவிட்டது.
புலிப்படம் போட்ட கொடியோடு தெருத்தெருவாக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறோம். எல்லாம் எதற்காக? யாரும் எங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லையே! போர் நடந்துகொண்டிருக்கும் போது யாருமற்ற அனாதைகளாக எமது மக்கள் கொல்லப்பட்டுகொண்டே இருந்தார்கள். அதுவும் கத்தை கத்தையாக. கொசுக்கள் போல! புலிகள் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த போது புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே கொடியில் தான் அணிதிரண்டிருந்தார்கள்.
தமிழின ஒற்றுமையின் பொற்காலமது… புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள். அன்றிருந்த ஒற்றுமை ஒரு கனவு போல. புலிகளுக்கு எதிராகப் பேசியவர்கள் எங்கேனும் ஒரு மூலையில் சத்தம் சந்தடியில்லாமல் பத்துப் பதினைந்து தமிழர்களை வைத்துக் கூட்டம் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எல்லாமே புலிகளின் காலடியில் தான் இருந்தது. மக்கள் அனைவரும் புலிகளின் குடைக்குள் ஒற்றுமைபட்டிருந்தனர்.
இந்த ஒற்றுமையெல்லாம் இலட்சக் கணக்காக மக்கள் கொல்லப்படும் போது எந்தப் பாதுகாப்பையும் தந்துவிடவில்லை. எமது மக்கள் சாகடிக்கப்பட்டுவிட்டார்கள். மறுபடி நீங்கள் ஒற்றுமையைக் கோருகிறீர்கள். எதை நோக்கிய ஒற்றுமை? புலிகளின் அதே தோற்றுப்போன ஒற்றுமையைத் தானா நீங்களும் புலிப்படம் பொறித்த கொடியோடு கோருகிறீர்கள்?
-இது எனது முதல் கேள்வி.
புலிகளின் தோல்விக்குக் காரணம் அவர்களின் அரசியல் வழிமுறையில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. அதை மீளாய்விற்கு உட்படுத்தி விமர்சனம் செய்து கொண்டீர்களா? அப்படியானால் என்ன தவறு நடந்திருக்கிறது? தவிறுகளிலிருந்த படிப்பினையூடாக நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? உங்களது புதிய திட்டம் என்ன?
-இவை எனது மேலதிக வினாக்கள்..
புலிகளின் கொள்கைத் தவறு என்பதில் இன்னுமொரு விடயத்தையும் எனது மூளையின் முன் நரம்பில் ஒவ்வொரு இரத்த அணுக்கள் சந்திக்கும் போதும் பேசிக்கொள்கின்றன. நம்பக் கூடாதவர்களோடு, மாபியாக்களோடு, கொலைகார அரசுகளோடு, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளோடு அவர்கள் கூட்டுவைத்துக் கொண்டது தான் என்று குழந்தைகுக் கூட தெரிவதாக அது அமைகிறது. அப்படியானல் அது போகட்டும். இப்போது உங்களோடு இணைந்து கொண்டவர்கள யார்? யார் யாரோடெல்லாம் கூட்டுவைத்திருக்கிறீர்கள்? எந்த அரசுகள் உங்களது நண்பர்கள்? எந்தெந்த அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?
-இவையெல்லாம் எனது வினாக்கள் மட்டுமல்ல இதுவரைக்கும் போராட்டம் வெற்றிகொள்ளப்பட வேண்டுமென்று கனவு கண்ட, பங்களித்த ஆயிரமாயிரம் தமிழர்களின் கேள்விகள்.
காஷ்மீரிலும், நாகாலாந்திலும், நேபாளத்திலும், லத்தின் அமரிக்காவிலும் ஏன் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் கூட மக்கள் எங்களைப் போல ஒடுக்கப்படுகிறார்களாமே; அவர்களும் எங்களைப் போலப் போராடுகிறார்களாமே! இவர்களோடெல்லாம் நீங்கள் பேசிப் பார்த்திருக்கிறீர்களா? தொடர்பு கொண்டிருக்கிறீர்களா? அவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? சந்தர்ப்பவாதிகளால் ஏமாற்றப்பட்ட எமக்கு அவர்கள் உறு துணையாக வருவார்களா?
-இவைகள் எதிர்காலம் குறித்த எனது கேள்விகள்.
காசாவில் இஸ்ரேலிய அரசு குண்டுபோட்டு மக்களைக் கொலைசெய்யப்படும் போதெல்லாம் ஐரோப்பாவில் மனிதாபிமானிகளும், ஜனநாயக விரும்பிகளும், இடதுசாரிகளும் போராட்டம் நடத்துகிறார்களே, இலங்கையில் ஒரு குக்கிராமத்தில் ஐம்பதாயிரம் மனிதர்கள் சதைகளும் எலும்புகளுமாக சிதைக்கப்பட்ட போது இவர்கள் ஐரோப்பிய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லையே ஏன்?
பிரித்தானியாவில் ரொனி பிளேரும் அமரிக்காவில் ஜோர்ஜ் புஷ் உம் மக்களால் நிராகரிக்கப் பட்டமைக்கு இவர்கள் நடத்திய போராட்டங்களே காரணம் என்கிறார்கள். இந்தப் பிரிவினருடன் நீங்களும் தொடர்புகளை ஏற்படுத்தி வேலை செய்கிறீர்களா? அவர்களை எங்கள் போராட்டங்களுடன் இணைத்துக் கொள்ள என்ன செய்தீர்கள்? உங்கள் திட்டம் என்ன?
-நேரமிருக்கும் போது இவை பற்றியும் சிந்தித்துப் பதில் தருவீர்கள் என நம்பிக்கையோடு காத்திருப்பேன்.
இறுதியாக புலிகள் பில்லியன் கணக்கில் சொத்துக்களும் பணமும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறதே அவையெல்லாம் எங்கே? நீங்கள் விசாரித்துப் பார்த்தீர்களா? யார்யார் பணம் வைத்திருக்கிறார்கள், சூறையாடினார்கள் என்பதை எல்லாம் மக்கள் மத்தியில் எப்போது அம்பலப்படுத்தப் போகிறீர்கள்?
உங்களிடமும் மக்களின் பணம் உள்ளதா? அப்படியானால் அதன் மதிப்பு என்ன? பணம் இருந்தால் இலங்கை அரசின் இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் அம்பலப்படுத்த அதனைச் செலவிட முடியாதா? ஐக்கிய நாடுகளும், மன்னிப்புச் சபையும் தான் எம்மைக் கைவிட்டுவிட்டதே, முறையான ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஐரோப்பிய அமரிக்க மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஐ.நாவிற்கு ஏன் அழுத்தத்தை நீங்கள் வழங்கக் கூடாது?
பிற்குறிப்பாக, கே.பி ஆரம்பித்துவைத்து தான் நாடுகடந்த தமிழ் ஈழம். இப்போது கே.பி இலங்கை அரசின் கையாள் என்று கூறப்படுகிறதே. இது குறித்து மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தவில்லை? ஒரு குட்டி அறிக்கைகூட வெளியிடவில்லை? உங்களுக்கும் இலங்கை அரசிற்கும் ஏதாவது………..? நான் இதுவரை 7500 யூரோக்களைப் பணமாக புலிகளின் போராட்டத்திற்கு வழங்கியுள்ளேன். எனது பணத்தைப் பெற்றுக்கொள்ள உங்களிடம் நான் முறையிடலாமா?
இவை எல்லாமே எனக்கும் என்போன்ற விடுதலை உணர்வுள்ள ஆயிரக்கணக்கனோருக்கும் முன்னால் உள்ள கேள்வி. உங்களுக்கு வசதியான தளத்தில் உங்கள் பதிலை எதிர்பார்க்கும்..
(விடுதலை உணர்வோடு..)
N.சத்தியன்

https://inioru.com/?p=13367

Exit mobile version