நாளை தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் அதிமுக பெரும்பான்மை தொகுதிகளில் தோற்று விடும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் அதிமுகவினர் தமிழகம் முழுக்க பண விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒரு வாக்கிற்கு இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தேர்தல் கமிஷன் கண் துடைப்பிற்காக சில இடங்களில் ரெய்ட் நடத்தி தாங்கள் நேர்மையாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும்,. பல இடங்களில் அதிமுகவினரை யும் பாஜகவினரையும் தேர்தல் கமிஷனால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
அதிமுகவுக்கு போட்டியாக பாஜகவும் பண விநியோகம் தங்க நாணய விநியோகங்களைச் செய்து வருகிறது.ஆனாலும் மக்களின் அதிருப்தியை தாக்குப் பிடிக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கே.என். நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதி உட்பட ஐந்து தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்குமாறு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் கமிஷனிடம் மனுக் கொடுத்துள்ளார்.
அதனால் இன்று இரவு இந்த தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற பதட்டம் நிலவுகிறது. ஒரு வேளை திமுக வென்றாலும் அதன் முக்கிய தலைவர்களை தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தி வெற்றி பெறும் திமுகவினரை கூவத்தூர் நாடகம் போல ஒன்றை அரங்கேற்றி தம் பக்கம் ஈர்க்கலாம் அல்லது ஆட்சியை கலைக்கலாம் என்ற திட்டம் ஆளும் பாஜகவிடம் உள்ளது என்ற தகவல் பரவிய நிலையில் தேர்தல் எந்த தொகுதிகளிலும் ரத்து செய்ய வில்லை என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
புதுச்சேரியில் 144 தடையுத்தரவை அறிவித்த தேர்தல் ஆணையம் குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் கும்பலாகச் சென்று வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளது.இது புதுச்சேரி அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. 144 தடையுத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளது காங்கிரஸ் கட்சி.