நார்வே காப்பகத்தில் வைக்கப்பட்டு இருந்த இரு குழந்தைகளையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லலாம் என்று, கோர்ட் உத்தரவிட்டது.
நார்வே நாட்டில் வசித்து வந்த இந்திய தம்பதியின் இரு குழந்தைகளான அபியான் (வயது 3), ஐஸ்வர்யா (1) ஆகிய இருவரும் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தின் பராமரிப்பில் வைக்கப்பட்டு இருந்தனர்.
குழந்தைகளுக்கு கரண்டி இல்லாமல் கைகளால் உணவு ஊட்டியது, பெற்றோர், தங்கள் படுக்கையிலேயே குழந்தைகளையும் படுக்க வைத்து இருந்தது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, அந்த நாட்டின் குழந்தைகள் நல சேவை அமைப்பு சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்திய தம்பதியினர் நார்வே நாட்டில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும் தங்கள் நடவடிக்கையில் குழந்தைகள் நல சேவை அமைப்பு உறுதியாக இருந்ததால், காப்பகத்தில் இருந்த குழந்தைகளை மீட்க முடியவில்லை. இதற்கிடையில் மத்திய அரசும் தூதரகம் மூலம் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தது.
அதைத் தொடர்ந்து குழந்தைகள் நல சேவை அமைப்புடன் இணைந்து இந்திய தம்பதியினர், நார்வேயின் ஸ்டாவன்கர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், இரு குழந்தைகளும் பெற்றோரிடம் அல்லாமல், இந்தியாவில் உள்ள குழந்தைகளின் தந்தையின் சகோதரர்களின் பராமரிப்பில் வளர்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, குழந்தைகள் இருவரையும் தந்தையின் சகோதரர் பராமரிப்பில் வளர்ப்பதற்காக இந்தியா அனுப்பி வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்ததும் அவர்கள் இந்தியா செல்லலாம் என்று, குழந்தைகள் நல சேவை அமைப்பு அறிவித்து இருக்கிறது.
வழக்கு விசாரணையின்போது இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் மற்றும் நார்வேயில் ஆஸ்லோ நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். இந்த வழக்கில் சுமூக தீர்வு ஏற்படுவதற்கு உதவி செய்த இந்திய மற்றும் நார்வே அரசுக்கு குழந்தைகள் சேவை அமைப்பின் ஸ்டாவன்கர் மாவட்ட தலைவர் குன்னார் டார்சன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
நார்வே கோர்ட்டு உத்தரவு தனக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்து இருப்பதாக குழந்தையின் தந்தை அனுரூப் தெரிவித்து இருக்கிறார். குழந்தையுடன் சேர்ந்து இந்தியா போவதற்கு கோர்ட்டு அனுமதி அளிக்கவில்லை என்பதால மேலும் சில மாதங்கள் அங்கேயே தங்கி இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.