Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நான் எப்படி மறக்க?.. – சேரன் – கவிதை பகிர்வு 7 : கவிதா (நோர்வே)

பரந்து விரிந்த பூமி, நில்லாது ஓடும் நதி, காற்றாடும் மேகம், சுடும் நெருப்பு, உணர்வைத் தொடும் காற்று என்று ஐம்பூதங்களையும் மட்டுமல்ல நேற்றைய இன்றைய பொழுதின் குருதி தோய்ந்த சமூகம், முகவரி தொலைத்த மனிதர், முகம் இல்லாத மனிதம் என்று அத்தனையும் தம் குரலில் பதிவுசெய்யும் மொழிக் காதலர்கள் கவிஞர்கள்.

படிமங்களாலும், உவமானங்களாலும் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த கவிதையின் பாதை, அதே வழியில் தன்னை இழுக்கும் செக்குமாடு போலல்லாது கயிறறுத்து இன்று பல தளங்களிலும் தன்னை பரீட்சித்துக் கொண்டிருக்கிறது. தளத்திலும் புலத்திலும் தன் விரல்கள் வரித்துச் செல்லும் கவிஞர் சேரனுடைய கவிதைகள் கவித்துவம் பற்றிய பேச்சாக மட்டும் நில்லாது ஒட்டுமொத்த அனுபவங்களை அள்ளி வருகிறது. கவிஞர் சேரனுடைய கவிதைத் தொகுதிகள் அனைத்தும் என் கைகளுக்கெட்டவில்லை. படித்து நான் ரசித்த சில வரிகளை நாம் பகிர்ந்து கொள்வோமே.

”தொடரும் இருப்பு” என்ற கவிதைத் தொடரின் இறுதிவரி இப்படிச் சொல்கிறது.

அலைக் கரங்கள் மணலுக்கு
ஆகாய வெளியிருந்த
செம்பரிதி கடலுக்கு
ஆழப் பதிந்தபடி
என் கவிதைச் சுவடுகளோ
உயிர் வாழும் துடிப்பிற்கு

கவிஞர் சேரனின் ” இரண்டாவது சூரிய உதயம்” என்ற கவிதையில் இருந்து இந்த வரிகள் என்பதாம் ஆண்டுகளில் கவிஞரை அடையாளப்படுத்திய கவிதைளில் ஒன்று சிரஞ்சீவிதம் கொண்;டு எம் முன்னுடன் இன்றும் காற்றோடு வருகிறது.

…..
என்ன நிகழ்ந்தது
எனது நகரம் எரிக்கப்பட்டது
எனது மக்கள் முகங்களை இழந்தனர்
எனது நிலம் எனது காற்று
எல்லாவற்றிலும்
அன்னியப் பதிவு
கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்கள்மீது நெருப்பு
தன் சேதி எழுதியாயிற்று
சாம்பல் பூத்த தெரு;களில் இருந்து
எழுந்து வருக

முன்பெல்லாம் கவிதை என்றால் ஓசைநயத்தில் சொற்கள் மிளிரவேண்டும். இன்றெல்லாம் ஓசை நயம் பற்றிய சிந்தணையே கவிஞர்களுக்கு இருப்பதில்லை. இன்றைய உணர்வுகளின் சிந்தனை வீச்சை இலக்கண மரபிற்குள்ளே அடைத்து வைக்க புதுக்கவிஞர்கள் தயாராகவும் இல்லை. முன்பு போல சத்தம்போட்டு வாசிக்கப்படும் கவிதைகள் எல்லாம் இன்று மனதிற்குள்ளே மீட்டப்படுகின்றன. அவை கிளப்பிவிடும் உணர்வலைகள் எங்கோ ஒரு மூலையில் சிறு அதிர்வையாவது ஏற்படுத்திவிடும் வல்லமை கொண்டு கவிஞர்களிடம் இருந்து புறப்பட்டுச் செல்கிறது.

மிகப்பரந்த அளவில் மானுடத்தின் நேசம் பாய்ந்த கணப்பொழுதுகளை எத்தனை ஆசுவாசமாகவும் நிதானமாகவும் காட்சிப்படுத்துகிறார் என்பதiயும் சோமான ஒரு காதல் சுகத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்கின்றன கவிஞரின் இந்த வரிகள்

பிரிதல்
கோடி எங்கும் மல்லிகைப்பூ
குளமெங்கும் அல்லி மொட்டு
வேலி வரிச்சுக்கள் மேல்
முள் முருக்கு பூத்திருக்கு
இப்படித்தான் விரியும்
வசந்தம் என்று சொன்னபடி
நீ போனாய் அன்றைக்கு
மஞ்சு,
குளக்கரையில்
நீளக் காலூன்றி ஒரு
கொக்கு தவமிருக்கு…

சோற்களின் இறுக்கம் தளர்த்தி, வாசகனிடம் மாயாஜால வித்தைகளைக் காட்டாமல் எளிமை கொண்டு வரும் கவிதைகள் வெற்றி பெறுகின்றன. கவிதைகள் ஏன் புரியவேண்டும் என்று வாதிடுபவர்களும் உண்டு. புரியப் போவதில்லை என்று தெரிந்து கொண்டே ஏன் எழுத வேண்டும். யாருக்கு எழுதவேண்டும். சாதாரணமாய் தொடர்ந்து கவிதை வாசித்தலை வழக்கமாக்கிக் கொண்ட ஒருவன் பல முறை படித்தும் புரியாத புதிராகத் தோன்றும் கவிதை வாசகனைச் சலிப்படையச் செய்கிறது என்பதே உண்மை. மொழி வளம் வாசகனது மனதை ஊடுருவிச் செல்வதாகவும், நுழைந்தபின் புதிய சிந்தனைகளைத் தூண்டிவிடும் வலிமைமிக்கதாகவும் இருக்க வேண்டும். சாதாரண உணர்வுகளை சிக்கலான நடையில் எழுதி அதைப் படிக்கிறவர்கள் குழப்பமடைவதுதான் உயர்ந்த இலக்கியம் என்னும் சில அறிவுஜீவிகளின் சிந்தனையின்றி, எளிமைத்தமிழே சேரனின் கவிதைகளுக்கு இலக்கிய பலம் சேர்த்திருக்கிறது.

முதல் வாசிப்பிலேயே தன்வசம் ஈர்த்துவிடக் கூடிய சேரனின் கவிதையொன்று ஈழத்தழிழரின் போர் வரலாற்றை சில வரிகளினூடு யாதார்த்தமாயும் எளிமைiயாயும் எம்முடன் பேசிப்போகிறது.

கடவுளரும் பிசாசு…..

கடவுளரும் பிசாசுகளும்
இணைந்து புரிந்த
இனப்படுகொலையின்
ஒரு குரதித்துளி
பாலைப்பட்டினத்தின்
ஒதுக்குப் புறத்தில்
தெறித்து வீழ்ந்தது
அந்தப் புள்ளியிரிருந்து
மூன்று தெருக்கள்
குpளை பிரிந்தன
ஓன்று தெற்கே போயிற்று

எவரும்
திரும்பி வர முடியாத தெரு அது எனப்
போனவர்க்குத் தெரியாது
அவர் சாம்பலையும் காணோம்
இன்னொன்று மேற்கே போயிற்று
டலும் காடுகளும் தாண்டி
இரவல் முனங்களுடன்
குளிர்காலத்து
ஆறுகளின் குறுக்கே நடந்து
எல்லைக் காவலர்களின்
கொள்ளி கண்களுக்கும் தப்பி
இரவுப் பயணங்களில்
புதிய நாடுளுக்குச் சென்றனர்
கறுப்பு முகங்களில்
அவர்களுடைய வெள்ளை அநியாயம் படிந்தது
திரும்பி வரும் கனவுகள்
தொலைந்து போக
வந்து சேர்ந்த வழியும்
மறந்து போய்த்
திசை கெட்டது உலகம்
மூன்றாவது தெருகிழக்கே
கானகத்திற்குப் போயிற்று
திரும்பி வந்தனர்

மூன்று தெருக்களிலிருந்தும்
மூன்று உலகங்கள் புpறந்தன
முன்ற உலகங்களிலிருந்தும்
முந்நூறு பார்வைகள் விரிந்தன
முந்நூறு பார்வைகளிலிருந்தும்
மூன்ற கோடி முகங்கள்

கவிஞருடைய கவிதையில் சொற்களின் தூவல்கள் இன்றி ஒரு சாதாரண மனித வாழ்க்கையை, கதையை நம்மோடு விட்டுச் செல்வது தெரிகிறது. ஒரு கவிதையின் முடிவில் எம் சார்ந்த உலகையும் சோகத்தின் சுவடுகளையும் விட்டுபோகிறது. காற்றின் திசைக்கேற்ப்ப தாறுமாறாய் கார்மேகம் மோதி கொட்டும் துளிகள் போல உணர்ச்சித் திரளின் உந்துதலில் கொட்டிப்போன கவிதைகளாய் இல்லாது கற்பனையாகவிருந்தாலும் சம்பவங்களின் நேர்த்தியான கோர்வையாய் மடியில் வந்து விழுகின்றன இந்தத் துளிகள்.

எல்லாவற்றையும் மறந்து விடலாம்…

உன் குழந்தைகளை ஒளித்து வைத்த
தேயிலை செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஓளிந்தபடி காத்திருந்த போது
பிடுங்கி எறியப்பட்ட என் பெண்ணே
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க?

கற்களை அடுக்கி வீடு கட்டுவதுபோல பல மாடிகள் கட்டுவதல்ல கவிதை. மாறாக தேவைக்கேற்ப கற்களை விலக்கி செதுக்கி சிற்பமாகுவதே என்று சொன்னால் பொருத்தம் எனலாம். வாசகனை தொடர்ந்து வாசிக்க தூண்டும் படி அமையுமானால் அது சிறந்த இலக்கியம் எனப்படுகிறது. அந்த வகையில் சேரனின் இந்த கவிதைச் சொற்களின் நேர்த்தியை பாருங்கள்.

எப்படிப் புணர்வது என்பதைப்
பாம்புகளிடமும் எப்படிப் புலர்வது என்பதை
காலையிடம் பொறுமை என்பது என்ன
என்பதை மரங்களிடம் கனவுகளுக்கு
வண்ணங்கள் உண்டா என்பதை தூக்கத்தில்
நடப்பவர்களிடம் கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக
மாறியது எப்படி என்பதை
அகதிகளிடம். பயம் என்பது என்ன என்பதை
நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற
கறுப்புத் தோல் மனிதர்களிடமும்
பெண்களிடமும் …..
…..

மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத்
திசை தொலையப் புலம் பெயர்ந்தவர்களிடமும்
துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும்
என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின்
உயிர்ச் சுவட்டை எறிந்தவளிடம். அவளிடம்
இவளிடம் இரவின் கடைசி ரயிலும் போய்விட்ட
பிற்பாடு தண்டவாளங்களும் குளிரில் துடித்துப்
பிளக்க, ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப்
பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை
என்னிடம்
கேள்.

சேரனின் கவிதைகளில் காணப்படும் சொல்அமைப்பு முறை பல கவிஞர்களிடம் இருந்து அவருடைய தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது. பொது நிகழ்வுகளை கவிதையின் வடிவம் சிதறாமல் உரையாடல் தொனி கலந்து நம்மிடம் தருவது கவிஞருடை சிறப்பு .

சேரனின் பல நூறு கவிதைகளில் சிலவற்றையே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். கவிதை பிரியம் உள்ளவர்களும் மேலும் சேரனின் கவிதைகளை படிக்க ஆர்வமுள்ளவர்குளும் கவிஞருடைய ”இரண்டாவது சூரிய உதயம்” ”யமன்” ”கானல் வரி” ”எழும்புக்கூடுகளின் ஊர்வலம்” எரிந்து கொண்டிருக்கும் நேரம்” ”நீ இப்பொழுது இறங்கும் ஆறு” ”உயிர் கொல்லும் வார்த்தைகள்” எனும் கவிதை நூல்களின் காணலாம்.

Exit mobile version