2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடிக்கு இப்போது அவரது கட்சிக்குள் இருந்தே எதிர்ப்புகள் உருவாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் மேனகா காந்தியின் மகனும் நேரு குடும்ப வாரிசுமான வருண்காந்தி பாஜகவை விமர்சித்துள்ளார். இவர் பாஜக எம்.பியாக உள்ளார். அவர் நேற்று லக்னோ நகருக்கு வந்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது,
“தற்போது நாடு சிக்கலில் இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும், பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தனியார்மயம் என்கிற பெயரில் முக்கிய நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எல்லாவற்றையும் விற்பனை செய்தால் நாடு என்னவாகும்?
நமது முன்னோர்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை பெற்று தந்தனர். அத்தகைய நாடு அழிக்கப்படுவதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டை காப்பாற்ற வேண்டும். இன்றைய அரசியல் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. நாட்டை பற்றி கவலைப்படுங்கள். நேர்மையானவர்களை அரசியலுக்கு கொண்டு வாருங்கள். உங்கள் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள்” என்று பேசியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.