Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாடோடிகளின் இனிய இசை (3) : T. செளந்தர்

கி.பி.1738 ம்ஆண்டு ஸ்பானிய அரசால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை ஜிப்சிகள் மீதான வன்முறையைக் குறைத்தது.கி.பி.17 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்புகள் 1777 ம் ஆண்டு ஜிப்சி இசைக்குழு ஒன்று இசை நிழ்ச்சி நடாத்தியதைக் குறிப்பிடுகின்றன.ரோம,கிரேக்க,அரேபிய,யூதர் முதலிய பல இன மக்களின் இசைக் கலப்பும் ,மற்றும் அண்டலூசிய நாடுப்புற இசை என்பனவும் ஏற்படுத்திய தாக்கம் ,இந்தச் செழுமைகளை எல்லாம் உள்வாங்கி ஜிப்சிகள் தங்கள் பாணியில் இப்புது வகை இசையை உருவாக்கினர்.

ஜிப்சிகளின் வருகைக்கு முன்னர் இந்த இசை இருக்கவில்லை .எனினும் பல இன மக்களின் பங்களிப்பான இந்த இசைக்கு ஜிப்சிகள் ஆற்றிய பங்களிப்பே மிகப்பெரியதாகும் இந்த வரலாற்று உண்மையை ஒத்ததாக வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.இப்படிப் பல இன மக்களின் பங்களிப்பிலிருந்து ஜிப்சிகள் உருவாக்கிய இசையாக பிளமிங்கோ இசை பிறந்தது.

கி.பி.17 ம் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி.18 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஜிப்சிகளின் இப்புது இசை பற்றி ஐரோப்பிய எழுத்தாளர்கள் குறிப்புக்கள் எழுதி வைத்துள்ளனர்.இந்த இசையை ” சிறப்பான ,அற்புதமான சம்பவமாக “வர்ணித்துள்ளனர்.பிளமிங்கோ இசைக்கான அடிப்படை உருவம் நிலை பெற்றது 17 ம் நூற்றாண்டிலேயே எனலாம்.

1847 இல் எஸ்டபனஸ் கலடிரோன் ( Estabanaz Calderon ) என்னும் எழுத்தாளர் ” Escenas Andalaus ” என்ற தனது புத்தகத்தில் கிட்டார் ( Guitar ) கலைஞரும் ,பாடகருமான எல் ப்லேனேட்ரோ ( El Planetra ) என்பவரைப்பற்றிய குறிப்பே பிளமிங்கோ இசையை இசைத்த கலைஞர் ஒருவரைப் பற்றிய முதல் குறிப்பாகும்.

 ” ஜிப்சிகள் இரவு முழுவதும் கிட்டார் வாசித்தும்,பாடியும் ,ஆடியும் குதூகலமாகக் கொண்டாடினார்கள்” எனவும் ” நான் ஒருவன் தான் அந்நியனாக இருந்தேன் ..பிளமிங்கோ இசையின் பூரண இனிமையை தடையின்றி அனுபவிக்க வேண்டுமாயின் ஜிப்சி இருப்பிடங்களில் நம்மை அன்னியர்களாக்கிக் கொள்ளாது அவர்களுள் ஒருவராக மாறுவதே சிறந்தது ” என்றும் எழுதியுள்ளார். அக்காலத்தில் பாடிய கலைஞர்களில் பூர்ட்டோ ரீல் ( Puerto Real ) , பிரான்சிகோ ஒடெக எல்பிலோ ( Fransisco El Fillo ) சில்வரோ பிரான்கொனேட்டி (Silvero Franconetti ) போன்றோர் சிறப்பிடம் பெற்றவர்களாவர்.பிரான்சிகோ எல்பிலோ என்பவர் 1800 – 1879 காலப்பகுதியில் வாழ்ந்தவர்.இவர் தனது கரகரப்பான குரலில்பாடிப் புகழ் பெற்றவர்.

இவரது பாணியை பின்பற்றி பல ஜிப்சி கலைஞர்கள் பாடி வருகின்றனர். இந்த வகைக் குரலில் பாடும் முறை இன்று வழக்கத்தில் உள்ளது.இது ” எல்பிலா” ( Elfilla ) என அழைக்கப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் செல்வந்தர்களுக்காக இசைத்துப் பணம் சம்பாத்தித்த ஜிப்சிகள் 1850 களில்தோன்றிய தேநீர் விடுதிகளில் ( Cafe ) நடாத்தப்பட்ட இசை நிழச்சிகளில் முக்கிய பங்கு வகித்தனர்.1860 இல் பாடகர் சில்வரோ பிரான்கொனேட்டி ( Silvero Franconetti 1831 – 1893 ) என்பவர் தனது சொந்த கபே யை ஸ்தாபித்து பெருந்திரளான பிளமிங் இசை ரசிகர்களை உருவாக்கினார்.இவரைப் பின் பற்றி பல கபேக்கள்உருவாகின.

இதன் மூலம் பிளமிம்கோ இசை பரவாலாக ஸ்பெயின் நாடு முழுவதும் பரவியதேயாயினும் அண்டலூசிய பகுதி தவிர்ந்த ஏனையோர் இதனை ” ஓர் அந்நிய இசை ” என்றே கருதினர்.

நாளடைவில் இதன் வளர்ச்சி நடனத்துடனும் இணைக்கப்பட்டு புகழ் பெறத் தொடங்கியது.இதனால் பல ஜிப்சி இனத்தவர்கள் கவரப்பட்டு தச்சுவேலை ,இரும்புவேலை,முந்திரிகை பறித்தல்,சப்பாத்து தொழில் போன்ற மரபுரீதியான தொழில்களை கைவிட்டு தொழில் முறை கலைஞர்களாக வாழத் தலைப்பட்டனர்.

ஒவ்வொரு குடும்பத்திலும் மிகச் சாதாரணமாக இசைக்கப்பட்டு வந்த இந்த இசை , கஷ்டமான தொழில்களால் ஏற்ப்பட்ட வேதனைகளிலிருந்து விடுபடவும் வழியமைத்தது.இயற்கையாகவே இசையில் ஈடுபாடும்,ஆர்வமும் உள்ள இவர்கள் தங்கள் சுமையான வாழ்க்கையை இலகுவாக்கும் நோக்கத்துடன் இசையைத் தொழில்முறையாக ஆக்கிக் கொண்டார்கள்.

பிளமின்கோ இசையில் உபயோகப்படும் ஒரே வாத்தியம் கிட்டார் ஆகும்.ஸ்பெயினுக்கு வெளியே இந்த இசை ” நடனமும் “என்றே அறியப்படுகிறது.பழைய கிரேக்க கதைகளில் கித்தாரா ( Kithara ) என்று ஒரு வாத்தியம் கூறுப்படுகிறது.இது ஹெர்மஸ் ( Hermes ) என்ற கடவுளின் கையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.W .W .Hunter என்பவர் எழுதிய இந்திய இசை ( Indian Music ) என்ற நூலில் ” இந்திய சங்கீதம் சுமார் 2300 முன் பாணினி காலத்தில் எகிப்து,பாரசீகம் அரேபியா போன்ற தேசங்களுக்கு கொண்டு போகப்பட்டது ” என்றும் பின்னர் 11 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கைடோ எல் அறேசோ ( Guido El Arezzo ) என்பரால் ஐரோப்பிய சங்கீதத்தில் அமைக்கப்பட்டது எனவும் தற்காலத்தில் Gamut என்று அழைக்கப்படும் ( கிரேக்கத்தில் இதன் அர்த்தம் Gamma ) தமிழ் இசையில் ( கர்னாடக இசை ) கிராமம் ( அதாவது ஆரோகணம், அவரோகணம் ) என்பதனைக் குறிக்கிறது என்றும் கிரேக்க தத்துவ மேதை பைதொகராஸ் ( PYTHAGORAS 570-c. 495 BC ) இந்திய ( தமிழ் ) சுரமுறையை கிரேக்க இசை முறையில் அமைத்தார் எனவும் கர்ணாமிர்த சாகரம் என்ற இசை நூலில் மேற்கோள் காட்டப்பபட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் ஐரோப்பிய இசை வரலாற்று நூல்களும் இவ்வாத்தியம் 2400 ஆண்டளவில் ஆசியாவிலிருந்து எகிப்து நோக்கி படையெடுப்பு நடாத்தியவர்கள் மூலம் எகிப்து வந்ததாகவும், பின்னர் எகிப்தியர்கள் பல நரம்பு கொண்ட வாத்தியமாக அதை மாற்றியதாகவும் மரத்தினால் பெட்டி போன்ற அமைப்பில் மாற்றப்பட்டது எனவும் கூறுகின்றனர்.அத்துடன் அரேபியர்கள் இந்த வாத்தியத்தை எகிப்தியர்களிடமிருந்து ” உரிமையைப் பெற்றார்கள் “எனவும் சொல்லபடுகிறது.எகிப்தியர்களால் Laud என அழைக்கப்பட்ட இந்த இசைக் கருவி ஜிர்ஜாப் ( Ziryab ) கி.பி. 822 இல் கோர்டோபா ( Cordoba ) கொண்டு வந்தார் அரேபியர்களுடன் ஐரோப்பா வந்து சேர்ந்த இந்த இவாத்தியம் பின் வந்த நூற்றாண்டுகளில் சித்தாரே ( Citare ) என அறியப்படுகிறது.எனினும் கி.பி.15 ம் நூற்றாண்டிலேயே கிட்டாரா ( Guitarra ) என்றும் பெயர் பெற்றது.இன்றைய கிட்டார் ( Guitar ) வாத்தியக் கருவிக்கான அமைப்பு கி.பி. 17 ம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்டதொடு அக்க அக்காலங்களிலேயே பரவலாகவும் பாவிக்கப்படலாயிற்று .

இன்னும்வரும்…

முன்னைய பாகம் : https://inioru.com/?p=18345

Exit mobile version