Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தேர்தல்: பாகம் 2 ஒற்றுமையாய் இயங்குவதாலே உண்டு நன்மையே : கலாநிதி இராம் சிவலிங்கம்

இனியொருவின் அடிப்படைக் கருத்துக்களோடு முரண்பாடுகளைக் கொண்ட கட்டுரைகள் ஆவணப்படுத்தும் நோக்கோடும் விவாத நோக்கோடும் ‘முரண்’ பகுதியில் வெளியிடப்படும். இப் பகுதியில் வெளியாகும் செய்திகள் அவற்றின் முழுமையான பின்புலத்தோடு கூடியவை அல்ல.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு, என்பதை எம் மூதாதையர் எமக்குக் கற்றுத் தந்தனர். நதிகள் இணைந்து ஆறாக மாறும்போது அதன் சக்தி பெருகுவதை இயற்கை எமக்கு எடுத்துக் காட்டியது. வலிமை மிக்க ஒற்றுமையும், வழிசமைக்கும் ஒருங்கிணைந்த செயற்பாடும் எமது வெற்றிக்கு வழிகோலும் என்பதால், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அதை நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கைகளில் ஒன்றாக பெருமையுடன் இணைத்து, பொறுமையுடன் காத்திருந்தோம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்……. தமிழீழம் மலர்ந்து ஆண்டுகள் பல ஆகியிருக்குமே. சர்வதேச ரீதியில் சகல தமிழ் சங்கங்களின், அமைப்புக்களின் ஆதரவுடனும் ஒத்துழைபுடனும் எமது புதுமை மிக்க அரசியல்ப் போரை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நாம்; எமது பாசக்கரங்களை நீட்டி, அவர்களை அன்புடன் அரவணைக்க வேண்டிய வேளை, எம்மவர்க்கு உதவுபவர்களையே நிந்திப்பது துரோகமல்லவா?

ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு முன், கனடாவில் உள்ள ரீ,வீ, ஐ எனும் தொலைக் காட்சியின் வெளிச்சம் நிகழ்வில் பங்குபற்றிய சபாநாயகர் பொன் பாலராஜன் அந்த நிகழ்வில் பங்குகொண்ட மற்றவருடன் சேர்ந்து தமிழர் கூட்டமைப்பையும் அதன் தலைவர் சம்பந்தனையும் தாக்கிப் பேசியது நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கைக்கு முரணானது மட்டுமல்ல எம் இனத்துக்கும் மாறான செயல்லவா? தமிழீழத்தில் வாழும் அத்தனை தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழர் கூட்டணியை தாக்கிப் பேச இவர்களுக்கு என்ன அதிகாரம்/ அருகதை இருக்கிறது?

ஆண்ட இனம் அடுத்தநாள், சத்தமில்லா மூன்றாவது உலகப் போரினால், நிராயுதபாணியாக நின்றபோது, சிங்கள அரசபடை தம்மிழர்களை காட்டு விலங்குகளளைப் போல் வேட்டையாடிய வேளை , தமிழரின் உயிருக்கோ, உடமைகளுக்கோ எந்தவித பாதுகாப்பும் இல்லாத நேரம் அந்த இனத்துக்கு தலமை தாங்க முன்வந்த மறத்தமிழனை, சிங்கள அரசுபோல் மாசுபடுத்த முயலும் இவர்களை எப்படியப்பா கூறுவது? எம்மவர்க்கு உதவுபவர்களைத் தூற்றி, சிங்கள அரசின் விருப்புக்கு செயல்ரூபம் கொடுப்பதுவும் துரோகச் செயலின் ஓர் அங்கமல்லவா?

மானமொன்றே வாழ்வென வாழ்ந்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27ஐ, இருபத்தைந்து ஆண்டுகளாக, ஆண்டுதோறும் சிறந்த முறையில் உலகெலாம் நடாத்திவரும் அந்த உத்தமர்ர்களிடமிருந்து அதற்கான அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதும்; கைகூடாததால், லண்டனிலும் ரொறன்ரோவிலும், மாவீரர் பணிமனை என்ற பெயரில் பிரிவினையை உருவாக்கியதும் யாரப்பா? தமிழீழ அரசின் பிரதமரால் தத்தெடுக்கப்பட்ட, அவரின் செல்லப்பிள்ளைகளான மதவடிக்குழுவினரே.

இறுதியாக, இந்த ஆண்டு யூன் மாதம் தமிழ் வண் தொலைக் காட்ட்சி நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கத்தில் நாடுகடந்த தமிழீழ அரசின் பேச்சாளர் சியான் சின்னராசா, எமக்குத் தேவையான் போது பணமும் ஆதரவும் தந்து உதவிய நாம் தமிழர் இயக்கத்தையும் அதன் தொண்டர்களையும் சாடியது எந்த விதத்தில் ஒற்றுமைக்கு வழிகோலும்? எடுத்துக் காட்டாக இருக்க வேண்டிய பதவிகளை வகிப்பவர்கள் பொறுப்போடல்லலவா நடக்கவேண்டும்.

ஒட்டுமொத்தத்தில், ஒற்றுமைக்கான எமது பயணம் ” ஊருக்குத்தான் உபதேசம், அது உணக்கும் எனக்கும் இல்லையடி” என்ற கூற்றுப்போல் ஆகிவிட்டதே . விண்ணில் பறக்க வேண்டிய நாம், இன்று மண்ணில் புரளுவதற்கு யார் காரணம்? தகுதியற்ற தலமையா? அல்லது தகமை இல்லா நிர்வாகமா?

நாம் ஒற்றுமையாய் வாழ, ஒருங்கிணந்து செயற்பட பண்பாடும், பழக்க வழக்கமும், விசுவாசமும் கொண்டவர்கள் வேட்பாளராக எம்முடன் இணைய வேண்டும், எம் உறவுகள் தமது மட்டில்லா ஆதரவை எமக்கு மறவாது தரவேண்டும். இத்தொடரின், முன்னைய பாகம் வேண்டுமாயின், எண்னுடன் தொடர்புகொண்டால் அனுப்பிவைக்கப்படும், நன்றி.

கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@synpatico.ca

Exit mobile version