Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாடார் பெண்கள் மேலாடை உரிமையும் பெரியாரும்- ராஜ்

தந்தை பெரியார் நாடார் பெண்கள் மேலாடை அணியப் போராடினார் என்று கூறும் ஒரு நிலைத்தகவலை பகிர்ந்து ‘எப்போ? எங்கே?’ என்று எகத்தாளமாகக் கேட்டு ‘திருட்டுத் திராவிடம்’ என்றெல்லாம் வசைச் சொற்களை வீசி குமரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் ஆதரவு நபர்கள் பதிவிட்டு வருகிறார்கள். நாடார் பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெரியார் பிறப்பதற்கு முன்பே அடைந்து விட்ட ஒன்று என்றாலும் நாடார்களுக்கு எதிரான ஒடுக்குமுறை அதனுடன் முடிந்து விட்டதா என்றால் இல்லை என்பதே வரலாறு விடுக்கும் செய்தியாக இருக்கிறது. அது இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்திருக்கிறது. ஆலய நுழைவுரிமை அவர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது.

அரசியல் பிரதிநிதித்துவமும் மறுக்கப்பட்டு வந்துள்ளது. அந்த நிலையைப் போக்க பெரியார் உதவியுள்ளார். இது குறித்தப் பல்வேறு செய்திகளை ‘நாடார்குல மித்ரன்’ பதிவு செய்துள்ளது.

தென்தமிழகக் கோவில்களில் நாடார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போது நாடார்களுக்கு அனுமதியில்லை என்றால் வேறெந்த சாதியும் கோவிலுக்கு செல்லக் கூடாது என்று அறிவித்தார், பெரியார். வடதமிழகக் கோவில்களுக்குள் நாடார்கள் செல்லலாம்; தென்தமிழகக் கோவில்களுக்குள் செல்ல முடியாதென்பது என்ன மாதிரியான அணுகுமுறை என்று கேட்டார். நாடார் சகோதரர்கள் பாதம் பட்டவுடன் சாமி மறைந்து விடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை தொழுவதால் என்னப் பிரயோஜனம் என்று கேட்டார். மேலும் நாடார்களை ஊக்கப்படுத்தும் விதமாக பட்டியலின மக்களுக்கு அனுமதி வரும் வரை நாடார்கள் காத்திருக்கத் தேவையில்லை என்று அறிவித்தார். வைக்கம் போராட்டத்தில் நாடார்களை பெருமளவு ஈடுபடுத்தினார். தனது பிரச்சாரத்தை வைக்கத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் போன்று நாடார்கள் வாழும் பகுதிகளிலும் மேற்கொண்டார். வைக்கம் போராட்ட வெற்றிக்குப் பிறகு சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டத்துக்கானப் பிரச்சாரத்தில் எம்பெருமாள் நாயுடுவுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் போதுமான அளவுக்கு நாடார்கள் பொறுப்புகளில் அமர்த்தப்படவில்லை என்றும் நாடார்கள் பிரச்சினையை காங்கிரஸ் மாநாடுகளில் தாம் எழுப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடார்கள் மீது தனக்கு நல்லபிப்பிராயம் உள்ளதாகவும், கள்ளுக்கடை மறியலின் போது தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாடார்கள் கள் இறக்கவில்லை என்பதை நன்றியோடு நினைத்துக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறார்.

பெரியாரின் பணியை நாடார்குல மித்ரன், “ நம் தேசத்தில் துவேசமின்மை, ஒருவருக்கொருவர் பரஸ்பர நன்னம்பிக்கை, ஒற்றுமை, சகித்தல், அகிம்சை முதலியவை வெற்றிபெற்ற சுயராஜ்யம் தான் உண்மையான விடுதலை என்ற கொள்கையுடையவர் ஸ்ரீமான் பெரியார். எங்களுக்குள் சாதி மதச் சண்டை மற்றும் வகுப்பு வித்தியாசம் எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை; சுயராஜ்யம் கொடுத்தால் போதும் என்ற கொள்கையுடையோருக்கு இவர் (பெரியார்) பரம எதிரியாவர்…. தீண்டாமையை காலின் கீழே போட்டு மிதிப்பவர்’ என்று பலவறு பாராட்டியுள்ளது.

இவ்வளவு நெருக்கமான பிணைப்பு தந்தை பெரியாருக்கும், நாடார் மக்களுக்கும் இருந்ததை வாசிக்கும் போது வியப்பாக தான் இருக்கிறது. ஆனால் பெரியாரை விமர்சிக்கும் இந்த கும்பல் சாதிப்பித்து தலைக்கேறிய ஒன்று. இந்துத்துவக் கும்பலுடன் இந்த நாம் தமிழர் ஆதரவு கும்பலும் இணைந்து இரட்டைத் தீமையாக உருவெடுத்துள்ளது.

Exit mobile version