Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நவீனத்துவ சிந்தனைகள் மேலோங்கப்பட்டு இருக்கும் இன்றைய சமூகத்தில் இவை ஒரு விரும்பத்தகாத செய்பாடாகவே காணப்படும்: கவிதா (நோர்வே)

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும்
கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

மீனவச் சமூகத்தின் வாழ்நிலையைப் பேசும் இந்த வரிகள் திரு. ஏ.சீ. தாசீயஸ் அவர்களுடைய ’புதியதோர்வீடு’ பாநாடகத்தில் இடம் பெற்றவை. ஈழத்து மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் புகழ்பெற்ற பாடல்வரிகளில் இந்தபாடலும் ஒன்று. எமது இன்றைய சந்ததியினர் எத்தனை பேருக்கு இப்பாடல் அறிமுகமாகியிருக்கும்? அவர்களிடம் போய்ச்சேரும் வண்ணம் எப்படி நாம் எமது பாடல்களுக்கு வடிவம் கொடுக்கப்போகின்றோம்? அல்லது தமிழக வர்த்தக திரைத்துறையின் பரந்த சந்தைக்குள், ரசனைக்கல்லாத ஒன்றாக ஈழத்துப்பாடல்கள் இருக்கின்றதா? கேள்விகள் பல இருந்தாலும் தற்போது திரு. சந்தோஸ் அவர்களுடைய இசையமைப்பில் ”சிறுநண்டு” பாடல் மீள்உருவாக்கம் பெற்றிருக்கின்றது. இப்பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்திருப்பவர்கள் பிரான்ஸிலிருந்து இந்திரன் மற்றும் லண்டனிலிருந்து ரமேஸ் சர்மா அவர்கள். பறைகலைஞர்களால் இப்பாடலுக்கு பறை வாசிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

மீனவச்சமூகத்தின் வாழ்நிலையை கவித்துவத்தோடு பாடும் இக்கவிதைவரிகள், சமீபத்தில் மலையக மக்களுக்கு நடந்த இயற்கை அனர்த்தத்தையும் வலியையும் கூட எம்மனதில் அதிகப்படுத்துகின்றது. காலாகாலமாக விளிம்புநிலை மக்களின் தேவைகளும், உரிமைகளும் மறுக்கபட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. அனைத்தையும் இழந்து நினைவுகளை மட்டுமே இன்று சுமந்து நிற்கும் சமூகத்தின் துயர் போலவே, இன்றுவரை போரினாலும் சரி, இயற்கை அனர்த்தங்களினாலும் சரி இழப்புகளை வாழ்வியலாகக் கொண்டிருப்பது விளிம்புநிலைச் சமூகம்தான். இப்படியான விளிம்புநிலைச் சமூகம் ஒன்றிடம் இருந்து வந்ததுதான் பறையிசை. மீள்இசையமைக்கப்பட்ட இந்த பாடலிலும் பறை வாத்தியம் முக்கிய இசைக்கருவியாக பாவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் பறைஇசை பற்றிய சிறுதகவல்களை பகிர்ந்துகொள்கிறேன். பாடலையும் இசையையும் தாண்டி, பறையைப்பற்றிப் பேசக் காரணம் இருக்கின்றது. நாம் இன்று இழந்து நிற்கும் பெரும் கலைப்பொக்கிசம் பறை.

பாடலுக்கு பறையிசை வழங்கிய – Parai Voice Of Freedom

நம் தமிழ்ச்சமூகத்திடம் காணப்பட்ட பறையிசைமரபு இன்று நினைவுகளை மட்டுமே சுமந்து நிற்கும் துயர் போலவே ஆகிவிட்டது. பறை செய்தியூடகமாக பயன்பட்ட கருவியென்றாலும் சங்ககால இலக்கியங்களால் அங்கீகரிக்கப்ட்ட தோல்இசைக்கருவி. பறை தமிழ்மக்களின் உணர்ச்சியும், எழுச்சியும் உண்டாக்கவல்ல தொன்மைமிக்க தமிழிசைக்கருவியாகும். இருந்தும் இன்று ஒரு குறிப்பிட்ட சாதியோடு அiயாளப்படுத்தப்பட்டு வேரூன்றிவிட்டது. அந்தஸ்து அற்ற ஒரு வாத்தியமாகவும், பெரும்பான்மையினரால் புறக்கணிக்கப்பட்ட இசைக்கருவியாகவும் விளங்குகிறது.

பறை தமிழர்களின் வாழ்வின் இசை என்பதைக் கடந்து, பறையிசையை இன்று இறப்பின் இசை என்றே பலரும் எண்ணுகின்றோம். சடங்குகளில், கோயில்களில் என தமிழர்களின் வாழ்வோடு ஒன்றியிருந்த பறையிசையை அதற்குத்தகுந்த தாளக்கட்டுடன் வாசிக்கத் தெரிந்த கலைஞர்கள் இன்று காணப்படுவதில்லை. பறையென்ற இசைக்கருவியை அதன் முழுபரிமாணத்துடன் பயன்படுத்தாமல் நாங்கள் விட்டுவிட்டோம் என்பது கசப்பான உண்மை. கோயில்களில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் போன்ற விசேட தினங்களில் கோயிலுக்கு வெளிப்புறத்தில் பறை வாசிக்கும் மரபு இருந்திருக்கின்றது. கோயில்களில் வாசிக்கப்பட்ட பறை உவச்சு என அழைக்கப்பட்டு, பின்னாட்களில் ஆக்கிரமித்த நட்டுவமேளத்தின் வருகையினால் காலப்போக்கில் கோயில்களில் காணாமல் போய்விட்டது. உவச்சுவாசிப்புகளின் தாளக்கட்டுக்கள் வேறுவகையானவை. அவ்வகையான தாளக்கட்டுக்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டன.

குழந்தைப்பெறும் தருவாயில் இருக்கும் கர்பம்தரித்த பெண்கள் இலகுவில் குழந்தையை ஈன்றெடுப்பதற்காகவும் பறைஒலி பயன்பட்டிருக்கிறது. குழந்தை பிரசவிக்கும் நேரத்தில், அந்த வீட்டைச்சுற்றி பறையடிக்கும் முறையும் இன்று காலத்தால் அழிந்துவிட்ட ஒன்று. அதற்கான தனித்துவமான வாசிப்புமுறையும் இன்று மறக்கப்பட்டிருக்கிறது. இன்று இருக்கும் பறைக்கலைஞர்களுக்கே இந்த வாசிப்புமுறைகள் தெரிந்துதிருக்குமா என்பதே கேள்விகுரியதுதான். இப்படியாக அழிந்துபோய்க்கொண்டிருந்த பறைவாசிப்புகள், கடைசிவரை இறந்தவர்கள் வீடுகளில் வாசிக்கும் முறை மட்டும் பிரபலமாக நெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

1970களில் எழுந்த சாதிப்போராட்டங்களின் காரணமாக, பறைச்சமூகத்தினர் பறையடிப்பதை எதிர்த்து, பறைகளை உடைதெறிந்து பறைவாசிப்பதை நிறுத்தியிருக்கின்றனர். வள்ளுவப்பறையர், கோவியப்பறையர் என் பல பிரிவுகள் பறைச்சமூகத்திடம் இருக்கின்றது. திட்டி என்ற ஒரு பிரிவினரே பறைச்சமூகத்திலிருந்து தொடர்ந்து பறை வாசிக்கத் தொடங்கினர். தற்போது பறை வாசிப்பதற்கு கலைஞர்கள் இல்லாது போய்விட்ட நிலையே எஞ்சியிருக்கின்றது. நிகழ்வுகளுக்கு ஏற்ப வேறுபட்ட தாளக்கட்டுகளுடன் இருந்த அவர்களுடைய பறையிசைமரபு ஏறத்தாள அழிந்தே போய்விட்டது.

பிராமணீயமயமாதலின் காரணமாகவும் பறையின் இசைமரபு சிறிதுசிறிதாக இல்லாமல் போயின. சாதிமுறைமைக்குள் பறையிசை இருப்பதனாலும், பறை ஆற்றுகையாளர்களின் சாதி தொடர்பான தாழ்வு மனப்பான்மையினாலும், பறையிசையினால் சமூக அந்தஸ்து கிடைக்காது என்பதாலும் பறை வாசித்த உவச்சர்மார் பலரும் பறையைக்கைவிட்டு நட்டுவமேளம் வாசிக்கப்போயினர். அதன் விளைவு, நட்டுவமேளம், மிருதங்கம், தபேலா, ட்ரம் வாசிப்பதற்கு உள்ள கலைஞர்கள் போல, வருந்தித் தவம் இருந்தாலும் பறை வாசிப்பதற்கு உரிய கலைஞர் இன்று எம்மிடம் இல்லை. பறை வாசிப்பிற்கு என இருந்த பறையிசைமரபை நாம் ஏறத்தாள முற்றிலுமாக இழந்துவிட்டோம். மஹாகவியின் இப்பாடலுக்கு வாசிக்கப்பட்ட பறை எந்த வகையை சேர்ந்தது? இதில் வாசித்த பறையின் தாளக்கட்டுகள் எந்த மரபைச் சேர்ந்தது என்பதை அறியும் ஆர்வம் எனக்குள் ஏற்படுகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள பறைக்கும் ஈழத்து தமிழர்களின் பறைக்குமே நிறைய வேறுபாடுகள் உண்டு. பறை என்ற இசைக்கருவியின் தோற்றத்திலேயேவேறுபாடுகள் உண்டு. வடிவம், வாசிப்பு முறை, தாளக்கட்டுகள் என்று ஈழத்தமிழர்களுக்கென்று இருந்த பழமையான பெரியதொரு பறைஇசைப் பாரம்பரியத்தையும் நாம் இழந்துவிட்டோம். இன்று ஈழத்தில் பறையை தயாரிப்பதற்கே ஆட்கள் இல்லாது இருக்கும் நிலையில், பறைக்கலைஞர்களை கண்டெடுத்து அவர்களின் பறைஇசைமரபை மீட்டெடுப்பது பெருமகிழ்ச்சிக்குரிய விடயமாகும். நவீனத்துவ சிந்தனைகள் மேலோங்கப்பட்டு இருக்கும் இன்றைய சமூகத்தில் இவை ஒரு விரும்பத்தகாத செய்பாடாகவே காணப்படும்.

மஹாகவி உருத்திரமூர்த்தியின் இப்பாடலை மீள்உருவாக்கம் செய்ததோடு நில்லாமல் பறை வாத்தியத்தை இணைத்துக்கொண்டமைக்கு இக்கலைஞர்களை நாம் பாராட்டவேண்டும். இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் பறையிசையை நமது இசைக்கலைஞர்கள் பாவித்து நமது பாரம்பரியமிக்க இசைமரபை எமது அடுத்த சந்ததியினரிடம் கொண்டுசேர்த்தால் புதியதொரு இசைமறுமலர்சியை எமது சமூகம் பெற்றுக்கொள்ளும். பறையிசை வாழும்கலையாக மறுமலர்ச்சி பெறும்.

இன்றைய இளைஞர்களை திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் நாம் எமது கலைப்படைப்பை உருவாக்கி இருக்கின்றோமா என்பது மிக முக்கியமானதாகும். இப்பாடலை உருவாக்கிய கலைஞர்கள் பாடல்களை உருவாக்கும் முன்னும் பின்னும் இதை யோசிப்பது அவசியமாகிறது. ஈழத்துப் பாடல்களை மறுஆக்கம் செய்யும் போது நாம் மீண்டும் அன்றைய காலத்து இசைவடிவத்தையே பயன்படுத்துவது, புதிய தலைமுறையிடம் அப்பாடலைக் கொண்டுசேர்க்குமா? புதிய குரல் வடிவங்களையும், புதிய உத்திகளையும் எமது பாரம்பரிய இசைக்கருவிகளோடு இணைத்து புதிய வடிவில் கொணர்வது சாத்தியம்தானே?

அல்லது இதுபோன்ற மீள்உருவாக்கப்பாடல்கள் எம்முடைய பழைய தலைமுறைகளின் தாகங்களை தீர்க்கும் மனத்திருப்தியோடு, ஆவணப்படுத்தல் என்ற பெட்டிக்குள் மூடப்பட்டுவிடும். இப்பாடலுக்கு பறையிசை வாசித்த ”Parai – Voice Of Freedom” குழுவினருக்கும் பறையிசையை தமது பாடலில் சேர்த்துக்கொண்ட இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள். தமது வேர்களில் இருந்து மறுஉருவாக்கம் செய்யும் இக்கலைஞர்களின் ஊடாக புலம்பெயர்ந்த மக்களிடையே பறையிசை ஈர்ப்பையும், ஈழத்து இசைதொடர்பாக மலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

தொடர்புடைய  பதிவுகள்:

கவிதைகளுடனும் கவிஞர்களுடனுமான ஒரு நெடுந்தூரப்பயணம் – பகிர்வு 3 : கவிதா(நோர்வே)

Exit mobile version